

தமிழகத்தில் குறும்படங்கள் இயக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதுவும் சுற்றுச்சூழல், சமூக நலம் சார்ந்த விஷயங்களைக் குறும்படமாக எடுக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்டவர்களில் ஜீவிதா சுரேஷ்குமாரும் ஒருவர்.
விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இவர், திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளபோதும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக குறும்படங்களை இயக்கி வருகிறார்.
தேனி மாவட்ட மலையோரக் கிராமங்களில் நிலவும் பிரச்சினையை மையப்படுத்தி இப்போது ‘கிணறு’ என்ற பெயரில் குறும்படம் இயக்கியிருக்கிறார். குறும்பட எடிட்டிங்கில் பிஸியாக இருந்த ஜீவிதா, ‘கிணறு’ குறும்படம் மூலம் சொல்ல வருவது என்ன என்று கேட்டபோது, மடை திறந்த வெள்ளம் போலப் பேசினார்.
“மலைக் கிராமங்கள் என்றால் செழிப்பாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை. தேனி மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிக்கத் தண்ணீர்கூட கிடையாது. கழிப்பறையைப் பயன்படுத்தத் தண்ணீர் இல்லை. எங்கும் திறந்தவெளிக் கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதைப் பற்றி கேள்விப்பட்டவுடன் குறும்படம் இயக்க முடிவு செய்தேன்.
“மலைக் கிராமங்கள் என்றால் செழிப்பாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை. தேனி மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிக்கத் தண்ணீர்கூட கிடையாது. கழிப்பறையைப் பயன்படுத்தத் தண்ணீர் இல்லை. எங்கும் திறந்தவெளிக் கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதைப் பற்றி கேள்விப்பட்டவுடன் குறும்படம் இயக்க முடிவு செய்தேன்.
எங்கள் டீமுடன் தேனி மாவட்டம் சென்றேன். தேக்கம்பட்டி, பொன்னம்மாள்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, எரணம்பட்டி, கோணம்பட்டி, சிந்தலைச்சேரி ஆகிய இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி அல்லல்படுவதை நேரடியாகப் படம் எடுத்துள்ளேன்.
மேற்கூறிய கிராமங்களில் எங்குக் கிணறு தோண்டினாலும் தண்ணீரே வருவதில்லை. அதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் ‘கிணறு’ என்று இப்படத்துக்குப் பெயர் வைத்தேன்’’ என்று விளக்குகிறார்.
சரி, குறும்படம் எடுப்பதால் என்ன மாறிவிடப் போகிறது?
ஏதோ குறும்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக நான் படம் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவும் முயற்சியில் இதுவும் ஒன்று. பல இடங்களில் நன்மைகளும் கிடைத்துள்ளன.
இதற்கு முன்னர் குழந்தைத் தொழிலாளர்கள், சுனாமி பாதிப்புகள், கதகளி, முதுவன்களின் வாழ்க்கை எனப் பல குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். தற்போது இந்தப் படங்கள் மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் வசம் உள்ளன. எனது படங்கள் மொழி சார்ந்த ஆய்வுக்காக அங்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மைசூரில் இப்படி ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் குறும்படங்களில் இரண்டுதான் பெண்கள் இயக்கிய படம். அதில் என்னுடைய படமும் ஒன்று’’ என்று அவர் சொல்லும்போது முகம் பெருமிதத்தில் மிளிர்கிறது.
அடுத்த குறும்படத்துக்கான கருவை முடிவு செய்துவிட்டார் ஜீவிதா. “அடுத்ததாக மீனவர்களின் பிரச்சினை பற்றியும், இடம் மாறும் மீனவர்களின் இன்றைய நிலை என்ன என்பது குறித்தும் குறும்படம் எடுக்க உள்ளேன்” என்கிற அவர், “விழிப்புணர்வுக் குறைவு, தகவல் தொடர்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறும்படம் எடுக்கப் பெண்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக உள்ளது. இதைப் போக்க இளம் பெண்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தவும் என்னிடம் திட்டம் இருக்கு’’ என்கிறார்.
எந்தத் துறை என்றாலும், முயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு ஜீவிதா சுரேஷ்குமார் நல்ல உதாரணம்.