குழந்தைகளால் அழகாகும் உலகு - அனிதா குஹா

குழந்தைகளால் அழகாகும் உலகு - அனிதா குஹா
Updated on
3 min read

குழந்தைகளே அழகு. தளிர்ப்பாதங்கள் தரை தொட்டு ஆடுவதை இன்றைக்கெல்லாம் பார்த்து ரசிக்கலாம். அப்படியொரு வரம் வாய்க்கப்பெற்றவர் நடனக் கலைஞர் அனிதா குஹா. முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான நாட்டியப் பள்ளியை நடத்திவருகிறார். சென்னை, தி. நகரில் உள்ள அவரது பரதாஞ்சலி நடனப் பள்ளியில் சந்தித்தபோது, நெருங்கிய தோழியிடம் பேசுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

‘‘நான் ஹைதராபாதில் பிறந்து வளர்ந்தவள். கடந்த 23 வருடங்களாக சென்னைவாசிகளாக இருக்கிறோம்” என்று புன்னகையுடனே நம் கேள்விகளை எதிர்கொள்கிறார் அனிதா குஹா.

உங்களுடைய நாட்டிய உலகம் குழந்தைகள் நிறைந்த உல்லாச உலகமல்லவா?

கடவுள் தான் எல்லாம். நான் ஒரு குருவாகப் பரிமளிப்பேன் என்றோ, நாட்டியத்தில் முழுமையாகப் புகுவேன் என்றோ நினைத்ததே இல்லை. நான் எனது பெற்றோருடன் ஹைதராபாதில், ரயில்வே காலனியில் குடியிருந்தேன். குழந்தைகள் கூடுமிடம் அது. ஏனோ தெரியவில்லை, இந்த சிறுசுகளைப் பார்த்தவுடனேயே, இவர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்ன என்ற எண்ணம் எனக்குள்ளே உருவெடுத்தது. நடந்தேறியது, சிறிய அளவில் தான். நாட்டிய நிகழ்ச்சிகளை அமைப்பதே நான் விரும்பிச் செய்யும் செயலாக இருக்கும் என்று எனக்குப் பட்டது. பெங்களூர் சென்று திரு கோவிந்தராஜன் சாரிடம் நாட்டியத்தை முறையாகப் பயின்றது பெருமளவில் உதவியது. இதற்கிடையே எனக்குத் திருமணமும் ஆனது. நான் புகுந்த வீடு பெரிய வீடு, அளவிலும் சரி, உறவுக்காரர்களின் எண்ணிக்கையிலும் சரி. நடனத்தைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. மெதுவாக சென்னைக்குக் குடியேறினோம். இங்கும், குழந்தைகளை வைத்தே ஒரு நிகழ்ச்சி செய்யச் சொன்னார்கள். வள்ளி திருமணமும், தேசிய ஒருமைப்பாடு குறித்தும் நிகழ்ச்சி நடத்தினோம். பிரமித்துப் போனார்கள். என்னிடம் பயின்ற ஒரு சில மாணவிகள் பாரத் கலாச்சார் நிறுவனத்தின் ஸ்காலர்ஷிப் பெற்றனர். எனக்கு இந்தக் குழந்தைகளால்தான் அங்கீகாரம் கிடைத்தது. சிறந்த நாட்டிய ஆச்சாரியா என்ற விருதும் கிடைத்தது. மதிப்பிற்குறிய லீலா வெங்கட்ராமன், வேலூர் ராமபத்திரன், உடுப்பி சார் இவர்கள் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்ற எண்ணத்துடன் நாட்டியப் பள்ளியை 1989ல் துவங்கினேன், குழந்தைகளுக்காகவென்று. இப்பொழுது கடவுளின் அருளால் செழித்துக் கொண்டிருக்கிறது குழந்தைகளுடனேயே. எந்தக் காரியத்தையும் பலனை எதிர்பாராமல் செய்வது என் வேலை. குழந்தைகளுடன் உழைக்கிறேன். அவர்களை நானும் என்னை அவர்களும் ஊக்குவிக்கிறோம். இங்கே ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எனது தாயார், திருமதி கார்த்தியாயனி நடேசன் தான் எனது முதல் குரு. என்னுள்ளே கலையின் அம்சம் குடிகொண்டிருப்பதை உணரச் செய்தவர் அவர்.

அரங்க அலங்காரங்கள், அரங்க வடிவமைப்பு....மொத்தத்தில் கோரியோக்ராஃபி குறித்து?

நான் இயற்கையான ஒரு பெண் என்று என்னை அடிக்கடி சொல்லிக் கொள்வேன். இது போலவே இந்த கோரியோக்ராஃபி எனக்கு இயற்கையாக அமைந்த ஒன்று. ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு. புதிய வடிவமைப்பில் ஈடுபடுவதால் பழையது ஞாபகம் இருக்காது. இன்னொன்று தொன்மவியல், புராணக் கதைகளிலேயே எனது கவனம் ஆழ்ந்திருக்கும். கதைகள் எண்ணற்றவை. எல்லாமே உபமான உபமேயங்களோடு நமது மனதில் உறைந்து போனவை. இது குழந்தைகளின் ஆர்வத்தைப் பெருக்கும், மக்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதில் ஒரு மாஜிக் இருப்பதைத் தானே உணர்ந்து, பெறுவர். எனது பிறப்பிடமும் வளர்ப்பிடமும் ஆந்திராவானதால் வண்ணமாய் எனது காட்சிகள் இருக்கவே விரும்புவேன். ஆடையலங்காரங்களும் அப்படியே. இந்த வண்ணக் கோலங்கள் நிகழும் நாட்டியத்தின் தனித்தன்மையை ஒரு போதும் மறைக்க முயலாது. அது இயலாததும் கூட.

ஒரு ப்ராஜக்ட் என்று எடுத்துக் கொண்டால் பொருள் (தீம்) முதலில் நிர்ணயிக்கப்படும். பிறகு அது பற்றியுள்ள இலக்கியங்கள் படித்தறியப்படும். பின்பு ஒன்றன் பின் ஒன்றாக, களப்பணியே 2 அல்லது 3 மாதங்களாகிவிடும். பார்வையாளர்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியதே எங்கள் இலக்காக அமையும். நான் சிந்திப்பதெல்லாம் இதுவே. எத்தனை குழந்தைகளை ஈடுபடுத்தலாம். யாருக்கு எந்தப் பாத்திரம். என்பதைப் பற்றியே இருக்கும்.

எங்களது நாட்டியப் பள்ளியின் படைப்புகள் எல்லாவற்றிற்கும் உறுதுணையாக இருந்தவர், பாடலாசிரியரும், ஒரு சிறந்த இசையமைப்பாளருமான திரு பி ஆர் வெங்கடசுப்ரமணியம் அவர்கள். மேலும் நாட்டியத்திற்கே என்றமைந்துள்ள ஊத்துக்காடு வெங்கடகவியின் பாடல்களை ஆசான் திருமதி பி மீனாக்ஷியிடன் கற்றுள்ளேன். இங்கே ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும் - வாழ்க்கையில் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது, ஸ்ரீ க்ருஷ்ண கான சபா எனக்கு “ஆசார்ய சூடாமணி” விருதைக் கொடுத்து கெளரவித்த நிகழ்வே ஆகும்.

குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் உங்களை ஒரு முன்னோடி எனலாமா?

ஏன்? அந்தக் காலத்திலேயே பேபி கமலா ஆடியதில்லையா? எல்லாம் பரிணாம வளர்ச்சிதான். என் பங்கை நான் ஆற்றியுள்ளேன். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம், இவ்வளவு வருடங்களாக, இத்தனை குழந்தைகளை ஆளாக்கி நடத்திய சிறப்பு இப்பள்ளியைச் சாரும். இப்பொழுது பலரும் குழந்தைகளைக் கவரும் நிகழ்ச்சிகளை, குழந்தைகளை வைத்தே நடத்திக்காட்ட முன்வந்துள்ளனர். அவர்களது இந்த ஏற்பாட்டிற்கு நாங்கள் உதவியுள்ளோம் என்பது எங்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமே!

சிஷ்யைகள், சிஷ்யர்கள்?

நிறைய உண்டு! ஜயஸ்ரீ, நளினா எல்லாம் மிகத் தேர்ந்தவர்கள். சாத்விகா ஷங்கர் என்பவளுக்கு என்னிடம் இயல்பாக இருக்கும் நாட்டியத்தில் நாடகத்தைக் காணும் குணம் அமைந்து விட்டது. ஐஸ்வர்யா ஒரு முத்து. ஆண் நடனக் கலைஞர்களும் உண்டு. யதின் அகர்வால், பவித்ரா பட். ஆண்களுக்கு என்றால் அந்தப் பாட முறையே தனி. அவர் ஆணாகவே இருந்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்படி அமைத்து விடுவேன். விசேஷமாக மாஸ்டர் முரளீதரனிடம் ஒரு நாயக பாவத்தில் வர்ணம் அமைத்து, இந்த ஆண் கலைஞர்களை நாட்டியமாடச் செய்தேன். சிஷ்யை/சிஷ்யர்கள் யாவருமே தனித்து நின்று தங்கள் நாட்டியத் திறமையை வெளிப்படுத்தக் கூடியவர்கள். ஆனால் என்னுடைய பாலே (Ballet) எனும் கான்செப்டை முன்னெடுத்துச் செல்வார்களா என்பது ஒரு நெருடலான விஷயமே!

அடுத்து என்ன?

இப்பொழுதெல்லாம் பிள்ளைகளை ஒன்று சேர்ப்பதென்பது கடினமான ஒன்றாகி விட்டது. படிப்பிலும், பள்ளியில் உள்ள மற்ற நடவடிக்கைகளும், அவர்களது நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகின்றன. யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை. இரவு 12 மணி வரை அப்பியாசங்கள் பள்ளியிலேயே நடந்தது என்பது, கடந்த காலமாகிவிட்டது.

க்ளீவ்லெண்ட் ஆராதனையில் சென்ற முறை திரு நெய்வேலி சந்தானகோபாலனுடன் இணைந்து இராமாயணம் நடத்தினோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பகுதி சுந்தர காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும். இந்த வருடம் மகாபாரதம் எனக்களிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கூட்டு முயற்சியாக அமையும். நிறைய நடனக் கலைஞர்கள் பங்கேற்பார்கள். இந்த முறை நான் வன பருவத்தையும், விராட பருவத்தையும் நடத்த மேற்கொண்டுள்ளேன்.

உங்கள் கனவு?

எனது நாட்டியப் பள்ளியிலிருந்து உருப்பெற்றவர்கள் மூலமாக நான் என்னையே பார்க்க விரும்புகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in