

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற மலை வாசஸ்தலம் அரக்குப் பள்ளத்தாக்கு. காடுகள் அடர்ந்த அழகிய பகுதியாக இருப்பதால், ஆந்திராவின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலமாகவும் பேருந்து மூலமாகவும் அரக்குப் பள்ளத்தாக்கை அடையலாம். நாங்கள் ரயிலில் செல்ல முடிவெடுத்தோம். இந்தியாவிலேயே முதன்முதலாக, முற்றிலும் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட அதிநவீன VISTADOME ரயில் பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகளைச் சென்னை ICF நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு ரயில் பெட்டியின் கட்டுமானச் செலவு சுமார் மூன்றரை கோடி ரூபாய் என்று அறிந்தபோது ஆச்சரியத்தில் இமைக்க மறந்தோம். இந்த ரயிலின் முதல் பயணம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் நாள் ஓட்டத்தில் பயணம் செய்யும் அற்புத வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது!
கண்ணாடி ரயிலில் அமர்ந்துகொண்டு பச்சைப் பசேலெனப் படர்ந்திருக்கும் மரங்களையும் பள்ளத்தாக்குகளையும் சிலுசிலுக்கும் காற்றையும் வழிந்தோடும் சிற்றருவிகளையும் ரசித்துக்கொண்டே சென்றோம்.
விசாகப்பட்டினத்திலிருந்து காலை ஏழு மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 58 மலைக் குகைகளையும் 84 பாலங்களையும் கடந்து சென்றது. சர்வதேசத் தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டியில் பயணம் செய்தது அலாதி அனுபவத்தைத் தந்தது. மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல்கள், வேண்டிய பக்கம் திருப்ப வசதியாக இருக்கைகள் போன்றவை எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கின. இனிய பாடல் காட்சிகளோடு, அரக்குப் பள்ளத்தாக்கு பற்றிய சுவையான செய்திகளைச் சொல்லும் தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்தது. சிற்றுண்டி, தேநீர், தண்ணீர் போன்றவை ரயிலிலேயே வழங்கப்பட்டன.
பயணம் நான்கு மணிநேரம். ஆனால், நேரம் எப்படிக் கடந்தது என்றே தெரியவில்லை. உயர் ரக இருக்கைகளின் வசதி, சுகமான சூழல் என்று முற்றிலும் ஒரு மாறுபட்ட அனுபவத்தை இந்தப் பயணம் எங்களுக்கு வழங்கியது.
- மீனாட்சி முரளிதர், விசாகப்பட்டினம்
இது எங்க சுற்றுலா! வாசகிகளே, நீங்களும் உங்கள் சுற்றுலா அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். பார்த்த இடங்கள், படித்த பாடங்கள், பட்ட அவஸ்தைகள், மகிழ்ந்த தருணங்கள், சுவைத்த உணவு வகை... இப்படி நினைத்துப் பார்க்க எத்தனையோ அனுபவங்கள் இருக்கும் அல்லவா? அவற்றை அங்கு நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மகிழ்வோம், அறிவோம்! - மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in |