

கொளுத்தும் கோடையில் உடலுக்கு ஆரோக்கியமும் மனதுக்குப் புத்துணர்ச்சியும் தரும் ஓர் அற்புத மூலிகை புதினா (Mentha spicata). இது செரிமானக் கோளாறுகளைச் சீராக்கிப் பசியைத் தூண்டும். பிரியாணி முதல் பச்சடிவரை நமது உணவு பலவற்றிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவும் புதினா விளங்குகிறது. சிறு செடி வகையைச் சேர்ந்த இது, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.
வீட்டு மாடி, பால்கனி, முற்றம் இவற்றில் மட்டுமல்ல, சமையல் அறையிலும்கூடப் புதினாவை வளர்க்கலாம். கரும்பச்சை நிறத்துடன், அருமையான உள் அமைப்பு கொண்ட புதினாவின் இலைகள், பார்க்கிறவர்களைக் கவர்ந்திழுக்கும்.
புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் அமிலம், ரிபோபிளேவின், தயமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
தண்ணீரால் ஏற்படும் தொற்று, தொண்டை சார்ந்த நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை ஆகியவற்றுக்குப் புதினா உகந்தது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா ஆகியவற்றுக்கு இது கைகண்ட அருமருந்து.
மலக்கட்டு விலகி, செரிமானம் மேம்படும். வாயுப் பொருமல், வாயுத் தொல்லை போன்றவற்றுக்குப் புதினா சாறுடன் தேன், எலுமிச்சை கலந்து சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும். மாறிவரும் வாழ்க்கை முறைகளால் பலரும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு அதிகக் கொழுப்பைக் குறைப்பதுடன் தொப்பை, பருமன் இரண்டையும் குறைப்பதில் புதினா உதவுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகிறது. பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீரவும் புதினா கைகொடுக்கிறது.
அழகோடு ஆரோக்கியம்
சட்னி, ஜுஸ் என்று எந்த விதத்தில் இதைப் பயன்படுத்தினாலும் இதன் பொதுவான குணங்கள் மாறுவதில்லை என்பது புதினாவின் முக்கிய அம்சம். அசைவ உணவும் கொழுப்புப் பொருட்களும் எளிதில் செரிக்க உதவுகிறது. சாப்பிட்டதும் பலருக்கும் இருக்கும் தொல்லை வாய் துர்நாற்றம். புதினாவை மென்றால் வாய் துர்நாற்றம் அகலும்.
புதினாவைத் தினமும் பயன்படுத்திவந்தால் ரத்தம் சுத்தமாகும். புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா கீரை மருந்தாகப் பயன்படுகிறது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் புதினாத் துவையலைச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாவை நிழலில் உலர்த்தி அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பைச் சேர்த்து உரலில் போட்டு இடித்துக்கொள்ளுங்கள். இதை மாவு சலிக்கும் சல்லடையில் சலித்துவைத்துக் கொண்டால் தேவையானபோது பயன்படுத்தலாம். இந்தப் பொடியில் பல் துலக்கினால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும்.
ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; அழகுக்கும் புதினா கைகொடுக்கிறது. புதினாவைச் சமைக்காமல் சாறாகப் பயன்படுத்தினால் நல்ல பலன்கள் பலவற்றைப் பெறலாம். புதினாவைச் சாறெடுத்து முகத்திப் பூசிவர, முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெறும்.
எப்படி வளர்ப்பது?
விதை, பதியன் இரண்டு முறைகளிலும் புதினாவை வளர்க்கலாம். புதினாக் கீரையின் இலைகளைப் பயன்படுத்திவிட்டு, தண்டுப் பகுதியை மண்ணில் ஊன்றிவைத்தால் அது தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். சற்று வளர்ந்த செடியில் இருந்து முற்றிய தண்டைக் கிள்ளி வேறு தொட்டியில் நட்டு வளர்க்கலாம் .
மணக்கும் தோட்டம்
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகள், தொட்டியில் உள்ள பெருஞ்செடிகளின் பக்கத்தில் துணைச் செடியாகவும் நடலாம். இவற்றை உயிர் மூடாக்கு (live Mulching ) முறையிலும் வளர்க்கலாம். இதனால் இதற்குத் தனிப் பராமரிப்பு தேவையிருக்காது. இது பூச்சிக் கட்டுப்பாட்டுக்கும் உதவும், தோட்டமும் மணக்கும்.
வாரம் ஒருமுறை அமிர்தக் கரைசல் கொடுத்துவர, இலைகள் நன்கு தழைத்து வளரும். மாதம் ஒருமுறை பஞ்சகவ்யம் தெளித்துவந்தால் இலைகளின் அளவு பெரிதாகும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றுடன் சிறிது புதினா இலைகளையும் அரைத்துக்கொள்ளுங்கள். இதை நன்னீரில் 1:10 என்ற அளவில் கரைத்து வடிகட்டி, தெளித்துவந்தால் மாடித் தோட்டத்தில் பூச்சிகள் அண்டாது.
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண்மை ஆர்வலர்
தொடர்புக்கு: info@chennaigreencommune.org