

வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் ரஸியா சுல்தான். டெல்லி சுல்தான் வம்சத்தில் ஆட்சிப் பொறுப்பை வகித்த ஒரே பெண்ணும் அவர்தான்.
ரஸியா அல் துனியா வா அல் தின் / ரஸியா அல் தின் / ஜலாலத் உத்தின் ரஸியா எனப்பட்ட அவர் பதவியேற்றபோது ரஸியா சுல்தானா என்றழைக்கப்பட்டார். பதவியேற்றபோது அவருக்கு 31 வயது. 1236 நவம்பர் 10-ம் தேதி முதல் 1240 அக்டோபர் 14-ம் தேதிவரை நான்கு ஆண்டுகளுக்கு டெல்லியின் சுல்தானாக அவர் பதவி வகித்துள்ளார்.
தகுதி வாய்ந்த பெண்
டெல்லி சுல்தான் ஷம்ஸுதீன் இல்துத்மிஷ்-ன் (1210 - 1236) மகளான ரஸியா, 13 வயதிலேயே வில்வித்தையிலும் குதிரையேற்றத்திலும் திறமை பெற்றிருந்தார். தந்தையுடன் அவர் போருக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இல்துத்மிஷுக்குப் பிறகு அண்ணன் ருக்ன் அல் தின் (1236) சிறிது காலம் ஆட்சியில் இருந்தார். பிறகு, சுல்தான் பதவியை ரஸியா அடைந்தார். டெல்லி சுல்தானேட் எனப்படும் டெல்லியை ஆட்சி செய்தவர்களில் 1206-ல் இருந்து 1526 வரை வேறு எந்தப் பெண்ணும் சுல்தான் பதவியை வகித்தது இல்லை.
அது மட்டுமல்லாமல் ரஸியா பதவி வகித்த காலத்தில் சுல்தான் பதவி வகிக்க, அவரது குடும்பத்திலேயே பல ஆண் வாரிசுகள் இருந்தும், இவருக்குப் போட்டியாகப் பலர் இருந்த நிலையிலும் சுல்தான் பதவியை ரஸியா ஏற்றார். ரஸியாவை அரசரின் முறையான வாரிசாக இல்துத்மிஷ் சுல்தானின் ராணுவத்தினர் கருதியதாலேயே, அரியணையில் அவர் அமர முடிந்தது.
“ரஸியா இந்தப் பதவிக்கு ஆதரிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் அவருடைய அம்மாவின் உயர்ந்த வம்சாவளியும், தலைமைப் பதவி வகிப்பதற்கான சிறந்த பண்புகளை அவர் கொண்டிருந்ததும்தான். அது மட்டுமல்லாமல் சகோதரர்களைக் காட்டிலும் ரஸியாவுக்கே தகுதி அதிகமாக இருந்ததாக அவருடைய தந்தை கருதினார்.” என்று அவரது காலத்தின் வரலாற்று ஆய்வாளரான மின்ஹஜ் ஐ சிராஜ் ஜஸ்ஜானி குறிப்பிட்டுள்ளார்.
திறமையான ஆட்சி
பாலின வேறுபாட்டைக் கடந்து ரஸியா சிறப்பாக அரசியலைக் கையாண்டார். கபீர் கான் அயாஸ் போன்ற முக்கியப் படைத்தலைவர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை நடத்தி சாந்தப்படுத்தினார். கிளர்ச்சி செய்யும் மனநிலையில் இருந்த அலா அல் தின் ஜனி, சாஃப் அல் தின் குச்சி போன்ற தளபதிகளை நடுநிலையாளர்கள் ஆக்கினார். அதிகாரம் மிக்க நிர்வாகிகளான வாசிர் நிஸாம் அல் முல்க் போன்றோரை வலுக்கட்டாயமாக ஓய்வுபெற வைத்தார்.
அதேநேரம் படைகளில் பழக்கமான தலைவர்களை மாற்றியபோது அவர் சிக்கலுக்கு உள்ளானார். அரச வம்சத்தின் எத்தியோப்பிய அடிமையான ஜமாலுத்தின் யாகுத்தைக் குதிரைப் படைக்கான தலைவராக ரஸியா நியமித்தார். இதை ரஸியாவின் ஆதரவாளர்களே எதிர்த்தனர். அது மட்டுமல்லாமல், ரஸியா - யாகுத் இடையிலான நெருக்கமே. ரஸியாவின் சுல்தான் பதவி பறிபோனதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ரஸியாவுக்குப் பிறகு அவருடைய சகோதரர் மியுஸுத்தின் பஹ்ராம் ஷா ஆட்சிக்கு வந்தார்.
ஏன் இந்த வீழ்ச்சி?
ரஸியாவின் வீழ்ச்சிக்குக் கீழ்க்கண்ட சம்பவங்கள் காரணமாகக் கூறப்படுகின்றன: ஜமாலுத்தின் யாகுத்துடன் ரஸியா கொண்டிருந்த நெருக்கம் பிடிக்காமல் பதின்டாவின் ஆளுநர் இக்தியாருத்தின் அல்தூனியா யாகுத்தைக் கொன்றதாகவும், பதிலாக அல்தூனியாவை ரஸியா சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் பதின்டாவில் உருவான எதிர்ப்பைச் சமாளிக்க ரஸியா சென்றிருந்தபோது, ரஸியாவின் சகோதரர் பஹ்ராமை துருக்கி பிரபுக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்.
இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க பதின்டாவின் ஆளுநர் அல்தூனியாவையே சமயோசிதமாக மணந்துகொண்டு ரஸியா டெல்லி திரும்பினார். ஆனால், அவர்கள் இருவரையும் சகோதரர் பஹ்ராம் 1240 அக்டோபர் 13-ம் தேதி வீழ்த்தி, அடுத்த நாளே இருவரையும் கொன்றுவிட்டதாகத் தெரிகிறது. ரஸியா சுல்தானின் கல்லறை பழைய டெல்லியில் உள்ளது.
தந்தைவழிச் சமூகமான முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு முடியாட்சிக்குப் பெண் தலைமை வகித்ததற்கான காரணம் குறித்துப் பல்வேறு விவாதங்கள் நிலவுகின்றன. ரஸியாவின் தந்தையே அவரை சுல்தானாக நியமித்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் சிலர் டெல்லிவாசிகளே ரஸியாவை சுல்தானாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார்கள். மேற்கு லியாவோ பகுதியின் அரசியல் பாரம்பரியம் குறித்த ஆராய்ச்சியில் புதிய விஷயம் ஒன்று தெரியவந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கப் பெயர் பெற்ற இல்துத்மிஷின் அடிமைகள், லியாவோ பகுதியிலிருந்து வந்தவர்கள். ரஸியா ஆட்சிக்கு வர இந்தத் தாய்வழிச் சமூகப் பின்னணியும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும், இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்து, 13-ம் நூற்றாண்டில் டெல்லியின் ஆட்சியாளராகப் பதவியேற்று ரஸியா ஆட்சி நடத்தியது சாதாரணமாகக் கடந்துபோய்விடக்கூடிய விஷயமல்ல என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.