

நம் இலக்கு எதுவென்ற தீர்மானம் இருந்தால்தான் அதை அடைவதற்கான வழிகளை நோக்கி நாம் பயணப்படமுடியும். அப்படி இலக்கை அடைந்தவர்தான் சுமதி ஹரிகரன். ரெஸ்ட் ஆஃப் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தென்மண்டல மற்றும் தமிழக கிரிக்கெட் முன்னாள் வீராங்கனை, பெண்கள் அணி முன்னாள் தேர்வாளர், கனரா வங்கியின் மேலாளர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. இத்தனை முகங்கள் இருந்தாலும் இன்னொரு தனித்த அடையாளம் இருக்கிறது. முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் அம்பயரும் இவர்தான்!
தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை என சர்வதேச நாடுகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும் பறந்து கொண்டே இருக்கிறவர், நமக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினார்.
“1975ஆம் ஆண்டு மகளிர் அணிக்காகக் கிரிக்கெட் விளையாடிய போது அம்பயர் ஆகணும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அந்த முடிவு என்னை வெற்றியை நோக்கி நகர்த்தியது” என்று நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கிறார் சுமதி ஹரிகரன்.
‘‘1976-77ஆம் ஆண்டுல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்திய அம்பயர் பணிக்கான தேர்வில் கலந்துகொண்டேன். அதில் வெற்றியும் பெற்றேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சர்வதேச அளவில் தேர்வு எழுதி முதல் இந்தியப் பெண் அம்பயர் என்ற தகுதியையும் பெற்றேன். ஆசிய அளவிலும் முதல் பெண் அம்பயர் நான்தான்’’ என்று சொல்லும் போதே சுமதி ஹரிகரனின் முகத்தில் சாதித்த பெருமை.
1980ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை தேசிய அளவில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் மட்டுமல்ல, ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கும் அம்பயராக இருந்திருக்கிறார் சுமதி. 2003 - 2005ஆம் காலகட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இவர்தான் டி.வி. அம்பயர்.
‘‘பொதுவாக பெண்கள் கிரிக்கெட் நடைபெறும்போது ஆண்களே அம்பயர்களாக நிற்பதைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் ஏன் இந்த நிலை என்று என்னிடம் கேட்பதுண்டு. இதுக்குப் போதுமான பெண் அம்பயர்கள் இல்லாததே காரணம். அதனாலதான் பெண்கள் கிரிக்கெட்லயும் ஆண்களே அம்பயரா இருக்காங்க. குறைஞ்சது இரண்டு பெண்கள் இருந்தால்தான் மைதானத்தில கள அம்பயராக நிக்க முடியும். அப்படி இல்லாத நேரத்தில் ஒரு பெண் அம்பயர் மட்டும் இருந்தால், அவங்க டி.வி. அம்பயரா மட்டும்தான் உட்கார்ந்தாகணும்’’ என்று சொல்லும்போதே சுமதி ஹரிகரன் வார்த்தைகளில் வருத்தம் தொனிக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் அம்பயர் ஆகலாம்
யார் வேண்டுமானாலும் அம்பயர் ஆக முடியுமா என்று கேட்டால்,‘‘கிரிக்கெட் பற்றிய அறிவும், ஞானமும் இருக்கிற எல்லாருமே அம்பயராகலாம். இதுக்குக் கிரிக்கெட் வீரராகவோ வீராங்கனையாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும். இதற்குக் கடுமையாக உழைக்கவும் வேண்டும்’’ என்கிறார் சுமதி ஹரிகரன்.
“இந்தியாவில் கிரிக்கெட் நல்லா வளர்ச்சி பெற்று இருக்கு. இன்றைக்கு நிறைய பெண்கள் கிரிக்கெட் விளையாட வர்றாங்க. ஆனால் ஆண்கள் கிரிக்கெட் வளர்ந்த அளவுக்கு பெண்கள் கிரிக்கெட் வளரவில்லை என்பதுதான் யதார்த்தம். பெண்கள் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இங்கு யாருக்குமில்லை’’ என்று கவலையோடு கூறுகிறார் சுமதி ஹரிகரன்.