

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றின் தீமைகளை அறிந்து நகர்ப்புற மக்கள் பலர் தங்கள் வீடுகளில் மாடித் தோட்டங்களை அமைத்துவருகின்றனர். அவர்களில் சாந்தியும் ஒருவர். புதிய நுட்பங்களைப் புகுத்தி இயற்கை முறையில் காய்கறி, கீரை, பழங்கள், மூலிகை வகைகளை விளைவித்து இவர் அசத்திவருகிறார்.
கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் உள்ள சாந்தியின் வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆர்க்கிட், ஆந்தூரியம் செடிகள் நம்மை வரவேற்கின்றன.
“முதலில் நிலத்தில்தான் தோட்டம் போட்டேன். வெயில் சரியாகக் கிடைக்காததால் மாடியில் தோட்டம் அமைத்துவிட்டேன்” என்று சொல்லும் சாந்தி, செடி, கொடிகள் மேல் இருந்த ஆர்வத்தால் தாவரவியலில் பட்டம் பெற்றவர்.
“எனக்குள் இயல்பாகவே இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியவர் என் கணவர் ராஜகுமார். அவர் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் எனக்கு ஆலோசனை சொல்வார். எங்கள் வீட்டு மாடித் தோட்டத்துக்கு 15 வயது” என்று பெருமிதப்படுகிறார் சாந்தி.
தக்காளி, கத்தரிக்காய், வழுதலங்காய், பீட்ரூட், வெண்டைக்காய், சுண்டைக்காய், புடலங்காய், பாகற்காய் உள்ளிட்ட சகல காய்கறிகளும் இவர் வீட்டு மாடியில் விளைகின்றன. வீட்டுத் தேவைக்கான காய்கறிகள் தோட்டத்தில் இருந்தே கிடைத்துவிடுகின்றன.
சூட்கேஸில் வளர்ந்திருந்த கீரையைப் பார்த்து ஆச்சரியப்பட்டபோது, “ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றின் சேர்க்கை இல்லாமல் குறைந்த செலவில் இயற்கையான காய்கறிகளை அறுவடை செய்வதுதானே மாடித் தோட்டத்தின் நோக்கம்? அதனால் வீட்டில் இருந்த பழைய சூட்கேஸ்களையும் செடி வளர்ப்புத் தொட்டிகளாக மாற்றிவிட்டேன்” என்கிறார் சாந்தி.
இவரது தோட்டத்தில் சிவப்புக் கீரை, கொடுப்பைக் கீரை, பசலை, சிவப்பு பசலை, அகத்தி, முடக்கத்தான், தவசி, ஆப்ரிக்கன் கீரை, சிவப்புத் தண்டு கீரை, பச்சைத் தண்டு கீரை, முள்ளங்கிக் கீரை என இருபதுக்கும் மேற்பட்ட கீரை வகைகள் விளைகின்றன. இதனால் தினம் ஒரு கீரை சாப்பாட்டில் இடம்பெறுகிறது.
பாட்டில் நீர் பாசனம்
மாடித்தோட்டத்தில் பாட்டில் நீர்ப் பாசனம் என்னும் நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறார் சாந்தி. ஒரு பெரிய பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, அதில் சிறு துவாரம் இட்டு, சிறிய டியூப் வழியாகச் செடிக்கு இணைத்திருக்கிறார். இதில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வடிந்து, செடிக்கு எப்போதும் நீர் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஹாலோ பிரிக்ஸ் கல் அடுக்கி அதன் மேலே தோட்டம் அமைத்துள்ளதால், தண்ணீர் தேங்கி நிற்பதில்லை.
மாதுளை, நெல்லி, எழுமிச்சை, நாரத்தங்காய், சக்கரைவள்ளிக் கிழங்கு, சேம்பு போன்றவையும் விளைந்திருக்கின்றன. திப்பிலி, பிரண்டை, சோற்றுக் கற்றாழை, தூதுவளை, துளசி, ஓமவள்ளி, புதினா போன்ற மூலிகைகளில் இருந்து ஜுஸ் போட்டுக் குடிப்பதால் சளி, இருமல் என்ற தொந்தரவுக்கே இடமில்லை.
இயற்கை பூச்சி கட்டுப்பாடு
இயற்கை முறையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நுட்பங்களையும் புகுத்தியிருக்கிறார் சாந்தி. ஒரே வகை செடிகளை வரிசையாக நட்டால், ஒரு செடியில் இருந்து அடுத்த செடிக்குப் பூச்சி, நோய்களின் தாக்கம் விரைவில் பரவும். பலவகை பயிர்களைச் சேர்த்து நட்டால் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். பயிர்களுக்கு இடையே வசம்பு, கிரேந்தி பூ வகைகளை நட்டு, இயற்கையாகவே பூச்சிகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்.
கழிவுகளும் உரமே
“சமையலறையில் சேரும் மட்கும் குப்பைகளை ஒரு பெரிய டப்பாவில் சேகரித்துவருகிறேன். பழத் தோல்கள், காய்கறிக் கழிவுகளைப் போடுவேன். அதன் மேல் தொழு உரம் போட்டு, மீண்டும் சமையலறைக் கழிவுகளைப் போடுவேன். இவற்றின் இடையே மண்புழுக்களையும் போடுவேன். மண்புழுக்களின் எச்சம் சிறந்த உரமாக இருக்கும். பஞ்சகவ்யாவையும் தயாரித்து வளர்ச்சி ஊக்கியாகப் பயிர்களுக்குத் தெளிக்கிறேன்.
வீட்டுத் தோட்டம் செலவைக் குறைக்கும் என்பதைவிட ஆரோக்கியத்துக்கு அடித்தளமிடும். குடும்ப நலனை முன்னிறுத்தி இயற்கை முறையில் விளைபொருள்களை உற்பத்திசெய்ய வேண்டும். அந்த வகையில் என் மாடித் தோட்டம் மன நிறைவைத் தருகிறது” என்றார் சாந்தி.
படங்கள்: என்.சுவாமிநாதன்