Last Updated : 12 Jun, 2016 12:54 PM

Published : 12 Jun 2016 12:54 PM
Last Updated : 12 Jun 2016 12:54 PM

பக்கத்து வீடு: அனைத்தையும் என் வசமாக்கிவிட்டேன்!

பெய்ஜிங், லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றவர் தெரிஜின்கா கில்ஹர்மினா. ஓட்டப் பந்தய வீராங்கனையான இவருக்குப் பார்வை கிடையாது.

பிரேசிலைச் சேர்ந்த 38 வயது தெரிஜின்கா ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர். நெருங்கிய உறவுகளில் அவருடைய பெற்றோர் திருமணம் செய்துகொண்டதால் பிறக்கும்போதே ஐந்து பேருக்குப் பார்வை கிடையாது. தெரிஜின்கா, பள்ளிக்குச் சென்றபோதுதான் அவருக்கும் பார்வைக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. படிப்பதில் சிரமம், சக மாணவர்களின் கிண்டல். ஆனாலும் வீட்டில் வசதி இல்லாததால், மீதமான உணவுகளை இலவசமாகப் பெறுவதற்காகப் பள்ளி சென்று வந்தார்.

வறுமை, குறைபாடு, கிண்டல் போன்றவற்றிலிருந்து ஓடிச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையே அவரை எப்பொழுதும் ஆக்கிரமித்திருந்தது. அந்த எண்ணம் ஓட்டப் பந்தய வீராங்கனையாக வேண்டும் என்ற லட்சியத்தில் நிறுத்தியது. நீச்சலும் ஓட்டமும் தன்னைப் போன்றவர்களுக்கான விளையாட்டுகள் என்று அறிந்துகொண்டார். அவரிடம் ஷூக்கள் இல்லை. ஒரே ஒரு நீச்சல் உடை மட்டுமே இருந்தது. அதனால் நீச்சலில் பயிற்சி பெற ஆரம்பித்தார். ஆனால் ஓட வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. வீட்டு வேலை செய்துவந்த அவரது அக்கா, தன்னுடைய ஷுக்களைக் கொடுத்து ஓடச் சொன்னார். ஆனால் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்குப் பயிற்சியாளர்கள் அவசியம். இரண்டு விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்றால் இரண்டு பயிற்சியாளர்கள் தேவை. தெரிஜின் காவின் அக்கா, பயிற்சியாளராக இருக்க முன்வந்தார்.

நண்பகல் கொளுத்தும் வெயிலில் பயிற்சிகளை எடுத்துக்கொண்டார் தெரிஜின்கா. அப்போழுதுதான் மைதானத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் 16 கி.மீ. தூரம் ஓடுவார். சர்க்கரை சேர்த்த மாவுதான் அவரது உணவு. மழை பெய்தால் அவரது வீட்டில் இருக்க முடியாது. கூரையிலிருந்து தண்ணீர் கொட்டும்.

“என் வறுமை ஒழிய வேண்டும். என் குறைபாடு பெருமிதமாக மாற வேண்டும். அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயாரானேன். உழைப்புதான் என் வாழ்க்கையை மாற்றும் என்று நம்பினேன். ஓடும் தூரத்தை இரண்டு மடங்காக மாற்றிக்கொண்டேன். உள்ளூர் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை ஓட்டத்தின் மூலம் பணம் கிடைத்தவுடன் என் கனவுகள் எல்லாம் விரைவில் நிஜமாகும் என்று தோன்றியது. அந்தப் பணத்தில் ஒரு யோகர்ட் வாங்கிச் சாப்பிட்டேன். இது என் சின்ன வயது ஆசை. அந்த நாளை மறக்க முடியாது’’ என்கிறார் தெரிஜின்கா.

2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடை பெற்ற பாராஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறை பங்கேற்றார். 400 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்! 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் முழுமையாக ஓடி முடித்தாலும் பதக்கம் பெற முடியவில்லை. பார்வை சரியாகத் தெரியாததால் ட்ராக் மாறி ஓடியிருந்தார்.

கண்களைப் பரிசோதித்தபோது, பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது தெரிந்தது. இனி துணையின்றி ஓட முடியாது. டி12 என்ற நிலையில் இருந்து டி11 என்ற நிலைக்கு மாறினார். வழிகாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடும் நிலை இது.

2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் தெரிஜின்கா. 200 மீ. ஓட்டத்தில் தங்கமும் 100 மீ. ஓட்டத்தில் வெள்ளியும் 400 மீ. ஓட்டத்தில் வெண்கலமும் பெற்று, தான் கலந்துகொண்ட மூன்று போட்டிகளிலும் பதக்கங்கள் பெற்றார்!

2012-ம் ஆண்டு லண்டன் பாராஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் தங்கப் பதக்கங்களை அள்ளினார். உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய பார்வையற்றவர் என்ற சாதனையைப் படைத்தார். 12.01 நொடிகளில் 100 மீட்டரைக் கடந்திருந்தார்!

இவை தவிர, இண்டர்நேஷனல் பாராஒலிம்பிக் கமிட்டி நடத்தும் அத்லெடிக்ஸ் வேர்ல்ட் சாம்பியன் ஷிப்ஸ் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்களும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் பெற்றிருக்கிறார்.

இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெறும் பாராஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, சொந்த நாட்டில் தங்கம் பெற வேண்டும் என்பது தெரிஜின்காவின் லட்சியம். இருக்கிறது. அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.

“என்னுடைய சாதனைகளில், வழிகாட்டியாக ஓடி வருபவர்களின் பங்களிப்பு மிக முக்கியம். லண்டன் போட்டிகளில் சன்டனா என்ற மிகச் சிறந்த வீரர் என் வழிகாட்டியாக அமைந்தார். சமீபத்தில் நல்லெண்ணப் பயணமாக பிரேசில் வந்தார் உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட். ஒரு போட்டியில் என் கையைப் பிடித்துக்கொண்டு வழிகாட்டியாக ஓடி வந்தார்! யாருக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்! இந்த நிகழ்ச்சி பாராஒலிம்பிக் வீரர்கள் மீது அதிக மரியாதையைப் பெற்றுத் தந்துவிட்டது. வறுமை, பசி, களைப்பு, காயங்கள், பார்வையின்றி இருந்த ஒரு பெண்ணால் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க முடிந்தபோது, உங்கள் ஒவ்வொருவராலும் நினைத்ததைச் சாதிக்க முடியும். கனவுகளை நோக்கி உழைப்பைச் செலுத்தினால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஒரு காலத்தில் என்னிடம் எதுவுமே இல்லை; இன்று அனைத்தையும் என் வசமாக்கிவிட்டேன்!” என்கிறார் தெரிஜின்கா.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x