

நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். என்னை ஒரு குக்கிராமத்தில் உள்ளவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். நான் திருமணத்துக்கு முன் ஆசிரியர் வேலை செய்ததால், என் கணவர் வேலை பார்க்கும் பள்ளியிலேயே எனக்கும் வேலை கிடைத்தது. பத்தாம் வகுப்புக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்றதும் முதலில் மறுத்தேன். என் கணவர் கொடுத்த தைரியத்தில் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் எடுத்தேன். ஆங்கிலத்தில் எல்லோரும் நல்ல மதிப்பெண் பெற்றார்கள். மகன் பிறந்த பிறகு மேல் படிப்பு படிக்க விரும்பினேன்.
உறவினர் ஒருவர், மனைவி கணவரைவிட அதிகம் படிப்பதா என்று ஆட்சேபித்தார். என் கணவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நான் எம்.காம்., எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஃபில். படிக்க ஊக்கப்படுத்தினார். பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன். அந்தப் பத்து ஆண்டுகளும் மாணவர்கள் மாநில அளவில் ஆங்கிலத்தில நல்ல மதிப்பெண்கள் வாங்கியது என் மதிப்பை உயர்த்தியது.
பள்ளி முதல்வராகும் வாய்ப்பு எனக்குப் பல முறை கிடைத்தது. ஆனாலும் அதை நான் நிராகரித்தேன். கடைசியில் என் கணவர் கொடுத்த நம்பிக்கையில் பள்ளி முதல்வரானேன். அடுத்த வருடமே நல்லாசிரியர் விருதும் பெற்றேன். என் ஒவ்வோர் உயர்வுக்கும் என்னைத் தயார் செய்து, ஒத்துழைப்பு கொடுத்து, தன்னம்பிக்கையூட்டிய என் கணவரே என் சிறந்த தோழர்!
- காந்திமதி பன்னீர்செல்வம்
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |