டயபர் மாற்றும் தந்தைகள்!

டயபர் மாற்றும் தந்தைகள்!
Updated on
1 min read

குழந்தை வளர்ப்பு என்றாலே நம் சமூகத்தில் பெரும்பாலும் அது பெண்களின் பொறுப்பாகவே இருந்து வந்திருக்கிறது. குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடும் ஆண்கள், உடை நனைந்துவிட்டால் வேகமாகப் பெண்களிடம் குழந்தையை ஒப்படைத்து விடுவார்கள்.

குழந்தையைச் சுத்தம் செய்து, வேறு உடை மாற்றுவது பெண்களின் வேலை. தற்போது இந்த எண்ணத்தில் மாற்றம் வர ஆரம்பித்திருக்கிறது. தந்தைகளும் மகிழ்ச்சியாகக் குழந்தைகளின் டயபர்களை மாற்ற வருகிறார்கள். குழந்தை வளர்ப்பு என்பது அம்மாவும் அப்பாவும் சேர்ந்து செய்யக்கூடிய மகிழ்ச்சியான பணி.

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தன் மகன் பிறந்தபோது அணியில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டார். குழந்தைக்கு டயபர்களை மாற்றும் வேலையை மட்டுமே தொடர்ந்து செய்துகொண்டிருந்ததாகப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், “என் மகன் அகில் பிறந்தபோது, வழக்கமான பெற்றோராக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். என்னுடைய வேலைகளைச் சமாளித்துக்கொண்டு, குழந்தைக்குத் தேவையான ஒவ்வொன்றையும் சந்தோஷமாகச் செய்தேன். ஒவ்வொரு முறை நான் பயணம் செல்லும்போதும் நானும் குழந்தையும் ஒருவருக்கு ஒருவர் ஏங்கினோம். குழந்தை வளர்ப்பில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 50% பங்கு இருக்கிறது’’ என்கிறார்.

‘‘இரவும் பகலும் குழந்தையைப் பராமரிப்பது பெரிய விஷயம். இரவில் என் மனைவி ஷைலஜாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நான் குழந்தையைப் பார்த்துக்கொள்வேன். குழந்தையுடன் விளையாடுவேன். டயபர்களை மாற்றுவேன். முதல் முறை டயபர் மாற்றும்போது கொஞ்சம் திணறினேன். என் அம்மாவும் மனைவியும் கற்றுக் கொடுத்தனர். பிறகு சர்வசாதாரணமாக டயபர்களை மாற்றிவிட்டேன். இன்று வரை அந்த அனுபவங்கள் மனதில் அழகாக நிற்கின்றன’’ என்கிறார் வி.வி.எஸ். லஷ்மண்.

இப்படிக் குழந்தையின் டயபர்கள் மாற்றிய அனுபவங்கள் குறித்து பிரபலங்கள் பேசுவதற்குக் காரணம், இந்த ஆண்டு தந்தையர் தினத்தை ‘#டாட்ஸ்&டயபர்ஸ்’ என்ற தலைப்பில் பேரண்ட் சர்க்கிள் பத்திரிகை பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தப் பத்திரிகையின் நிறுவனரும் நிர்வாக அதிகாரியுமான நளினா ராமலஷ்மி, ‘குழந்தை வளர்ப்பு இன்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பாக்களும் தங்கள் கடமையைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்த மாற்றம் சமூகத்துக்கு மிகவும் அவசியமானது. இன்றும்கூட விமான நிலையங்களில் குழந்தைக்கு உடை மாற்றும் அறைகளில் பெண்களே அதிகம் இருக்கிறார்கள். ஆண்கள் அங்கே நுழைவது போராட்டமாகவே இருக்கிறது. இன்றைய அப்பாக்கள் குழந்தை பிறந்த அன்றிலிருந்தே தங்கள் கடமையைச் செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

குழந்தைக்கு டயபர் மாற்றுவது எவ்வளவு நல்ல அனுபவம் என்று பிரபலங்கள் சொல்வதைக் கேட்கும்போது, சமூகம் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது என்று தோன்றுகிறது. அதைத்தான் இந்தத் தந்தையர் தினத்தில் பிரதானப்படுத்தி வருகிறோம்’’ என்கிறார்.

குழந்தைகளுக்குத் தந்தை செய்யக் கூடிய கடமைகளை அனுமதிப்போம். அவர்களும் குழந்தை வளர்ப்பில் கிடைக்கும் மனநிறைவை பெறட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in