

இரோம் ஷர்மிளா இன்றைய ஜனநாயகத்தின் குரலாக அறியப்படுகிறார். 2000ஆம் ஆண்டு நவம்பர் 4இல் மணிப்பூர் தலைநகர் இம்பாலாவில் ராணுவத்தின் ஆயுதப் படைக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரித் தன் 30ஆவது வயதில் அறப்போராட்டத்தைத் தொடங்கினார். இம்மாதத்துடன் 14 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அரசு தரப்பிலிருந்து ஒரு சிறு முன்னேற்றம்கூட இல்லை. இருந்தும் ஷர்மிளா என்னும் இந்த எளிய பெண் மாறாத தீரத்துடன் இருக்கிறார். தன் வாழ்க்கையை, எளிய சந்தோஷங்களையும் அர்ப்பணித்துத் தன் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
1958இல் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டம் நீதித் துறையாலும்கூடத் தலையிட முடியாத அதிகாரம் கொண்டது. இந்த அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையைப் பதற்றம் மிக்கதாக மாற்றிவிட்டது. 2000ஆம் ஆண்டு மணிப்பூருக்கு அருகில் உள்ள மலோம் என்ற இடத்தில் ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 10பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்துதான் ஷர்மிளா இச்சட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். அதுதான் நமக்கான ஒரே தீர்வு என உறுதிகொண்டவரானர். உலகின் மாபெரும் ஜனநாயகத்தை எதிர்த்துத் தனியொரு மனுஷியாக உண்ணாவிரதப் போரை மேற்கொண்டுவருகிறார். இதற்காக இந்திய அரசாங்கத்தால் பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு வலுக்கட்டாயமாக நாசித் துவாரங்கள் வழியாக உணவு அளிக்கப்பட்டுவருகிறது. ஷர்மிளா தற்கொலைக்கு முயன்றதாகக் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அச்சட்டத்தின்படி 12 மாதங்களுக்கு ஒருமுறை விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருகிறார்.
ஷர்மிளாவுக்கு எழுத்தாளர் என்னும் இன்னொரு அடையாளமும் உண்டு. மணிப்பூர் மொழியான மைதைலான் மொழியில் கவிதைகள் புனையும் ஆற்றல் உள்ளவர். மைதைலான் திபெத்திய -பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இளம் தலைமுறை எழுத்தாளர்களால் இம்மொழிக்கு ஒரு நவீன இலக்கியம் உருவாகிவருகிறது. ஷர்மிளா அதன் முக்கியமான எழுத்தாளர். ஷர்மிளாவின் கவிதைகள் Fragrance of Peace என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு இந்தியாவின் பல மொழிகளின் பெயர்க்கப்பட்டுப் பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத்தாளர் அம்பை ‘அமைதியின் நறுமணம்’ என்னும் பெயரில் மொழிபெயரத்துள்ளார். இத்தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஷர்மிளாவின் கவிதைகள் தொன்மத்தின் மீதான அவர் நம்பிக்கைகளை, ஆயுதப்படைகளின் வன்முறையைப் பதிவுசெய்கின்றன. மேலும் இக்கவிதைகள் மூலம் சிதைந்துபோன ஓர் இளம் பெண்ணின் வண்ணக் கனவுகளையும் உணர முடிகிறது.
அரசியல் காரணங்களுக்காக எனக் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். நடந்து முடிந்திருக்கும் பல போர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்தச் சகோதரிகளுக்கான ஷர்மிளாவின் வரிகள் இவை.
வா…
இந்த வயல்களில் என்னுடன் கொஞ்சம் நட
உன் கனவுகளை உன் பிறப்புரிமையாக்கு
பார் சகோதரி
...கனிகள் கனத்துத் தொங்கும் மரங்கள்
தகிக்கும் சூரிய ஒளியில் தங்கள் பிறந்த மண்ணில் காலூன்றி
எவ்வாறு நெடுதுயர்ந்து நிற்கின்றன!
தகிக்கும் சூரியன் கீழேயும்
...வேலை செய்வோம் அச்சமின்றி
சோகம் நிறைந்த உடலின் சக்தி
மலைகளையும் நகரங்களையும்
நொறுக்கி வீழ்த்தும்
நண்பர்களாலும்கூட விமர்சிக்கப்பட்ட ஷர்மிளாவின் அறப்போராட்டம் இன்று அவருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த அனுபவத்தை ஓர் அறைகூவலாக தன் கவிதைகளின் சொல்கிறார்.
இருளில் ஒளிரும் விளக்கைப் போல்
வெகு சீக்கிரம் கழிந்துவிடும்
அரிய வாழ்க்கை இது
மரணமில்லா மரம் ஒன்றை நட
சாவா மருந்தை விதைக்க
என்னை அனுமதியுங்கள்
ஒரு பறவையைப் போல்
அகிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து
மானுடத்தின் கானத்தைப் பாடவிடுங்கள்
உலகின் மாபெரும் ஜனநாயகத்தை எதிர்த்துத் தனியொரு மனுஷியாக உண்ணாவிரதப் போரை மேற்கொண்டுவருகிறார்.