

‘இருண்ட கண்டம்’ என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்கா, பல சுவாரசியங்களைக் கொண்டது. பூமியின் சிறந்த இயற்கையின் அதிசயங்களை, உயிர்ப் பன்மய வளத்தை அங்கு காண முடியும். காலனி ஆதிக்கத்தால் அங்குள்ள பூர்வகுடிகள் எவ்வாறு மைய நீரோட்ட சமூக வாழ்க்கைக்கு மாற்றப்பட்டார்களோ, அதேபோல இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டன. யானை, சிங்கம், மான்கள், காண்டாமிருகங்கள், பறவைகள் எனப் பல உயிரினங்கள் பொழுதுபோக்குக்காக வேட்டையாடப்பட்டன.
இவ்வாறான செயல்களால் அங்கு இயற்கை எழில், காட்டுயிர் வளம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழியத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கலங்கிய சில நல்ல உள்ளங்கள் ஏதேனும் செய்து சுற்றுச்சூழலைக் காப்பாற்ற நினைத்தன. அந்த நல்ல உள்ளங்களைக் கொண்டோர் பெரும்பாலும் காட்டுயிர் ஆய்வாளர்களாகவும் ஆர்வலர்களாகவும் இருந்ததில் வியப்பில்லை. அவர்களில் ஒருவர் ஜோன் ரூட் எனும் பெண். அவர் ஒரு காட்டுயிர் ஆவணப்பட இயக்குநர். அந்த அடையாளத்தோடு நின்றுவிடாமல், தான் வாழ்ந்த பகுதியில் உள்ள ஏரியைக் காப்பாற்றவும் போராடினார்.
வனத்தின் கரத்தில்
1936-ம் ஆண்டு ஜனவரி 18 அன்று கென்யத் தலைநகர் நைரோபியில் பிறந்தார் ஜான் தோர்ப். அவருடைய தந்தை எட்மண்ட் தோர்ப் இங்கிலாந்தில் வங்கியில் பணியாற்றியவர். இயல்பிலேயே சாகச தாகம் கொண்ட எட்மண்ட், 1920-களில் கென்யாவுக்கு வந்தார். அங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒளிப்பட சஃபாரிகளை ஏற்பாடு செய்யும் ‘கென்யா த்ரூ தி லென்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தச் சமயத்தில்தான் ஜோன் பிறந்தார்.
எட்மண்ட் தன் வீட்டில், ஒரு செங்குரங்கை வளர்த்துவந்தார். அந்தக் குரங்கு நாய்க் குட்டிகள், பூனைக் குட்டிகள் என எல்லாக் குட்டிகளையும் திருடி, விளையாட்டுக் காட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. அப்படி ஒரு சமயம், கைக்குழந்தையாக இருந்த ஜோனை அது தன் கைகளில் எடுத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டியது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோனின் பெற்றோர் அந்தக் குரங்குக்கு வாழைப் பழத்தைக் கொடுத்து குழந்தையை மீட்டார்கள். ‘அன்றிலிருந்து தன் வாழ்நாளின் இறுதி வரைக்கும் வனத்தின் கரத்தில் இருந்தார் ஜோன்’ என்று ஜோனைப் பற்றி ‘வொயில்ட் ஃப்ளவர்’ எனும் புத்தகத்தை எழுதிய மார்க் சீல் எனும் பத்திரிகையாளர் சொல்கிறார்.
தகவமைத்துக்கொண்ட காட்டுப்பூ
பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்த ஜோன், தன் தந்தையுடன் சேர்ந்து ஒளிப்பட சஃபாரிக்களை நடத்திவந்தார். சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திலிருந்து கூட்டி வருவது தொடங்கி, அவர்களுக்கான தங்கும் வசதி, உணவு, சுற்றிப் பார்ப்பதற்கான வாகன வசதி, வனத்துறை அதிகாரிகளிடம் பெற வேண்டிய அனுமதி என ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகச் செய்து முடிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். தவிர, சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிச் செல்லும் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும், அந்த இடத்தில் இருக்கும் காட்டுயிர்கள் பற்றியும் பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்.
திருமணத்துக்குப் பிறகு, காட்டுயிர் ஆவணப்படங்களை உருவாக்குவதில் தன் கணவர் ஆலன் ரூட்டுக்குத் துணையாக நின்றார் ஜோன் ரூட். ‘பவோபாப்: போர்ட்ரைட் ஆஃப் எ ட்ரீ’, ‘தி இயர் ஆஃப் தி வொயில்ட்பீஸ்ட்’, ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘மிஸ்டீரியஸ் கேஸல் ஆஃப் க்ளே’ உள்ளிட்ட பல ஆவணப்படங்களை உருவாக்கினர் ரூட் தம்பதியினர். பெரும்பாலான சமயங்களில் ஜோன் ரூட் தயாரிப்பாளராக இருந்து மேற்கண்ட படங்களை உருவாக்கினார். கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது முதன்முதலாக பலூனில் பறந்து சாதனை படைத்தனர் இந்தத் தம்பதியர். சிங்கங்கள், பாம்புகள், நீர்யானைகள் ஆகியவற்றுடன் ஆபத்தான காட்சிகள் பலவற்றில் நடிக்கவும் செய்தார் ஜோன் ரூட்.
இதுகுறித்து மார்க் சீல் தன் புத்தகத்தில் ‘சிங்கங்கள் நடமாடும் சாவோ பகுதியாக இருக்கட்டும், கொரில்லாக்கள் வசிக்கும் எரிமலைப் பகுதியாக இருக்கட்டும் அல்லது முதலைகள் அதிகமுள்ள காங்கோ பகுதியாக இருக்கட்டும். எந்த இடத்தில் நட்டாலும் வளரும் காட்டுப்பூ போல, ஆபத்து மிகுந்த எல்லா இடங்களிலும் தன்னை மலர்ச்சியாக வைத்துக்கொண்டவர் ஜோன் ரூட்’ என்று குறிப்பிடுகிறார்.
ஏரிக்காக உயிர்விட்டவர்
காடும் காட்டுயிரும் ஆவணப்படங்களுமாக வாழ்ந்துவந்த அவர்களின் வாழ்க்கையில், ஜென்னி எனும் பெண் மூலம் புயலடித்தது. 28 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர்கள் விவாகரத்துப் பெற்றனர். அதன் பிறகு ஆலன் தன் வழியில் சென்றுவிட்டார். ஜான், நைவாசா ஏரிக்குப் பக்கத்தில் தங்கித் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
கென்யாவில் உள்ள மிக முக்கியமான ஏரி நைவாசா. பளிங்கு போன்ற தூய்மையான நீரை உடையது இந்த ஏரி. அதனால், ஏரிக்கரையின் இரண்டு பக்கமும் இயற்கை செழித்திருந்தது. அந்த ஏரியில் மீன்களும், அந்த மீன்களை நம்பிப் பறவைகளும், ஏரிக்கரையின் பசுமையை நம்பிப் பலவிதமான காட்டுயிர்களும் நிறைந்திருந்தன.
இப்படியொரு ஏரியை நம்பி, வெளிநாட்டவர்கள் சிலரால் மலர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏகப்பட்ட லாபம் வந்தது. இதனால் காபி தோட்டத்தை அழித்துக்கூடப் பலர் மலர் விவசாயத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, கென்ய ரோஜாக்களுக்கு சர்வதேசச் சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் உலக அளவிலான மலர் ஏற்றுமதியில் ஆறாவது இடத்தைப் பிடித்தது கென்யா. இந்த மலர் விவசாயத்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாலும், அதற்கு ஒரு விலை இருந்தது. ஆம், நைவாசா ஏரி மாசடைந்தது. மலர் விவசாயம் செய்யும் நிறுவனங்கள் வெளியேற்றும் ரசாயனக் கழிவுகளுடன், மலர் விவசாயம் தரும் வேலைவாய்ப்பை நம்பிப் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்குச் சரியான சாக்கடை வடிகால் வசதி செய்து தராததால் மனிதக் கழிவுகளும் ஏரியில் கலந்தன. அதோடு, வனத்துறை அனுமதித்த அளவை மீறி மீன் பிடித்தலும் நடைபெற்று வந்தது. இந்தக் காரணங்களால் அந்த ஏரியில் மீன்களின் அளவு வெகுவாகக் குறைந்தது. ஏரி, பாலைவனமாகிவிடும் சூழல் நிலவியது.
இதை எதிர்த்து ஜோன் போராடினார். ஏரியைக் காப்பாற்ற, முன்னாள் கள்ளவேட்டைக்காரர்களையே ஏரியின் காவலர்களாக நியமித்து ‘ஏரிப் பாதுகாப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். சுமார் 15 பேர் அடங்கிய அந்தக் குழுவுக்குத் தேவையான படகுகள், தொடர்புக் கருவிகள், சம்பளம், தங்கும் வசதி என அனைத்துச் செலவுகளையும் ஜோன் ஏற்றுக்கொண்டார். இதனால் ஏரியில் சட்டத்துக்குப் புறம்பாக மீன் பிடிப்பது குறைந்தது. இது கள்ளவேட்டைக்காரர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. அவர்களின் ஆத்திரத்தை ஜோன் சம்பாதித்தார். 2006-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி கள்ளவேட்டைக்காரர்களால் தன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார் ஜோன் ரூட்.