

பெண் இன்று இணைப்பில் >‘பாலியல் தொல்லை: ஒரு நிஜ அனுபவம்’ என்ற தலைப்பில் வந்தக் கட்டுரையைப் படித்தேன். மேலை நாட்டவர்கள் பாலியல் உறவுகளில் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு நான் பார்த்த ஒரு நிஜக்காட்சியை விவரிக்க விரும்புகிறேன்.
நான் சிவகங்கையில் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது நடந்த சம்பவம் இது. லண்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து ஒரு ஆராய்ச்சி மாணவி சிவகங்கை வந்து தங்கியிருப்பதாகவும், அவருக்கு சிவகங்கை அரண்மனையைச் சுற்றிக்காட்டி ஆராய்ச்சிக்கு உதவும்படியும் எங்கள் பள்ளிச் செயலர் என்னிடம் கூறினார். அதன்படி நானும் அந்த மாணவியைச் சந்தித்தேன். சிவகங்கை அரண்மனைக்கு அருகில் உள்ள ஒரு பயணியர் விடுதியில் அவர் மட்டும் தங்கியிருந்தார். ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு அவர் கிளம்பியபோது மீண்டும் சிவகங்கைக்கு வரவேண்டியுள்ளது என்று கூறினார்.
சில மாதங்களுக்குப் பிறகு அந்த மாணவி மீண்டும் எங்கள் ஊருக்கு வந்தார். இந்த முறை அவருடன் ஒரு இளைஞரும் வந்திருந்தார். அவரை தனது பாய் ஃபிரெண்ட் என்று அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளைஞர், அரண்மனையை பென்சில் டிராயிங்கில் மிக அழகாக வரைந்து கொண்டிருந்தார்.
மாணவியோ அரண்மனை குறித்த பல்வேறு தகவல்களை என்னிடம் கேட்டு எழுதிக் கொண்டார். மறுநாள் அவர்களை விடுதியில் வந்து சந்திக்கும்படி என்னிடம் சொன்னார்.
நானும் அதன்படி அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியப்பட வைத்தது. திருமணமாகாத அந்த மாணவி ஒரு தனி அறையிலும், அவருடைய பாய் ஃபிரெண்ட் அதற்கு எதிர் அறையிலும் தங்கியிருப்பதைக் கண்டு வியந்தேன். மேலைநாட்டைச் சேர்ந்த திருமணமாகாத அந்த மாணவி அவருடைய ஆண் நண்பருடன் ஒரே அறையில் தங்கியிருந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. அது அவர்கள் கலாச்சாரம் என்று இந்தியர்கள் அதைச் சுலபமாக அங்கீகரிப்பார்கள். ஆனால் ஒரு அந்நிய தேசத்தில் அந்த நாட்டின் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் கட்டுப்பட்டு நடந்துகொண்ட அந்த மாணவியையும் அந்த இளைஞரையும் பார்க்கப் பெருமையாக இருந்தது.
ஆனால் இங்கே, திரைப்பட விழாவுக்கு வந்த தன் சக பெண் நிருபரிடம் தவறாக நடந்து கொண்ட ஆண் நிருபரை என்னவென்று சொல்ல? நாட்டுக்கு நல்லதைச் சொல்லும் இடத்தில் இருப்பவர்கள் மனிதப் பண்பும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் நினைவூட்டுகின்றன.
மு. பாலகிருஷ்ணன், சிவகங்கை.