

தேனாம்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் அமைந்துள் ளது அந்தக் கர்நாடக இசை வகுப்பு. மூன்றரை வயது குழந்தைகள் முதல் முப்பது வயது தாய்மார்கள் வரை அந்த வகுப்புக்கு வருகிறார்கள். அந்த வகுப்பின் ஆசிரியையான முனைவர் சுதா ராஜா, முதலில் பார்க்கும்போது சாதாரண இசை ஆசிரியையாகவே தெரிகிறார். ஆனால் அவருடன் பேசும்போது அவரது சாதனைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
சென்னையில் கடந்த கால் நூற்றாண்டாகக் கர்நாடக இசையைக் கற்பித்துவரும் சுதா ராஜா, சர்கம் என்ற இசை அமைப்பையும் நடத்திவருகிறார். பிரபல இசை கலைஞர் அனில் ஸ்ரீனிவாசன் துவங்கியுள்ள ராப்சோடி என்ற இசை அமைப்பு, பள்ளி மாணவர்களுக்கிடையே கர்நாடக இசை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. சுதா ராஜா இந்த அமைப்பின் முதல்வராகவும் இருக்கிறார்.
இந்தக் கல்வியாண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளிலும் கர்நாடக இசை ராப்சோடி மூலம் கற்பிக்கப்படுகிறது. பாரம்பரிய இசையையும், கல்வியையும் இணைக்கிறது ராப்சோடி. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சில பள்ளிகளில் இசை பயிலரங்கங்கள் நடத்தப்படுவதுடன், கதைகளுடன் பாடல்களை இணைத்து பள்ளிகளுக்கிடையிலான போட்டி யையும் ராப்சோடி நடத்தவுள்ளது. ஜனவரி மாதம், பல்வேறு ரசிகர்களையும், பள்ளிகளையும் இணைத்து திறந்த வெளி இசை நிகழ்ச்சி நடைபெறவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய பசிபிக் இசைக்குழு போட்டியில் குழந்தைகள், மகளிர் ஆகியோர் அடங்கிய தனித்தனி இசைக்குழுக்களை சுதா ராஜா, வழிநடத்திச் சென்றுள்ளார். 18 நாடுகளில் இருந்து 150 இசைக்குழுக்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இரண்டு குழுக்களும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தக் குழுவினர் பாடிய ஆங்கில பாடலுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்ததாம்.
வார நாட்களில் சென்னையில் தங்கியிருந்தபடி, சர்கம் மற்றும் ராப்சோடி பணிகளை செய்யும் சுதா ராஜா, வார இறுதியில் வெளியூர்களுக்குப் பயணிக்கிறார். மலைவாழ் மக்களுக்குக் கர்நாடக இசை கற்பிப்பதற்காகவே இந்தப் பயணம். கர்நாடக இசை என்றால் என்ன என்று கேட்ட மலைவாழ் மக்கள், தற்போது தங்கள் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு மகிழ்கிறார்கள்.
டிசம்பர் மாதம் மார்கழி உற்சவம், தொடர்ச்சியான நிகழ்ச்சிகள், தனியார் பண்பலை களில் சர்கம் வகுப்பு குழந்தைகளின் இசை மழைகள் என்று ஜனவரிவரை ஏராளமான நிகழ்ச்சிகளை சுதா ராஜா ஒருங்கிணைத்துவருகிறார். இதற்காக ஆசிரியைகளுக்கும், குழந்தைகளுக்கும் பயிற்சிகள் அளிப்பதில் மும்முரமாக இருக்கி றார். “எப்படி இவ்வளவையும் சமாளிக்க முடிகிறது?” என்று கேட்டால், “ஏதோ என்னால் முடிந்தது” என்று பதில் வருகிறது.
தன்னடக்கம் நிரம்பிய இந்த பதிலில்தான் இவரது வெற்றிக்கான ரகசியமும் அடங்கியுள்ளதோ?