

உடலைக் கட்டுக்கோப்பாகக் கட்டமைக்கும் பாடி ஸ்கல்ப்டிங் (Body Sculpting) தெரபியில் தடம் பதித்துவருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெயா மகேஷ். கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் அவருடைய பயிற்சி மையத்தில் எந்நேரமும் பெண்கள் பயிற்சி செய்தபடி இருக்கிறார்கள். நடனமும் யோகாவும் இணைந்த கலைபோல இருக்கிறது பாடி ஸ்கல்ப்டிங்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தெரபியில் பயிற்சி அளித்துவரும் ஜெயா, பயிற்றுநர்கள் வைத்துக் கொள்வது கிடையாது. இவர் மட்டுமே பயிற்சியளிப்பதால் வாரத்தின் அனைத்து நாள்களிலும் பிஸியாக இருக்கிறார்.
திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் என இவரிடம் பயிற்சி பெறுகிறவர்களின் பட்டியல் நீள்கிறது. அவற்றுக்கிடையே ஒரு குண்டான பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார். நம் கேள்வியைப் புரிந்துகொண்டவர்போல ஜெயாவே பதில் சொல்கிறார்.
“அந்த போட்டோவில் இருக்கறது நான்தான். என் திருமணத்துக்குப் பிறகு 26 வயதில் எடுத்த போட்டோ அது. குண்டாக இருந்ததால் உடலைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் தேடியலைந்தேன். அப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சண்டிகரில் பாடி ஸ்கல்ப்டிங் தெரபி பயிற்சியளிப்பது தெரியவந்தது. அவரிடம் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். அதுவே நாளடைவில் என்னையும் பயிற்றுநராக மாற்றிவிட்டது” என்று தான் பயிற்சி மையம் ஆரம்பித்த கதையை ஜெயா பகிர்ந்துகொள்கிறார்.
பயிற்சி வகுப்பு முடிந்து கிளம்பிய பெண்களில் சிலர் தங்கள் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். பொள்ளாச்சி கெடிமேடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி, “எனக்குப் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. காலை நீட்டியபடி உட்கார முடியாது. நடக்கவும் முடியவில்லை. 6 மாதங்களாகத் துன்பப்பட்டு வந்தேன். இந்தப் பயிற்சிக்கு வந்ததில் இருந்து சரியாகிவிட்டது” என்றார்.
இவரைப் போலவே பலர் எனக்கு தைராய்டு பிரச்சினை இருந்து தற்போது குணமாகிவிட்டது, உடல் பருமனைக் குறைப்பதற்காக வந்தேன், எடை குறைவது மட்டுமல்லாமல் வயிற்றுப் பகுதிகளில் சதை குறைவடைவது எனக்கே தெரிகிறது. முகம் குண்டாக இருந்தது, தற்போது சதைப்பிடிப்பைக் குறைக்க முடிந்துள்ளது எனத் தங்கள் அனுபவங்களைப் பட்டியலிடுகின்றனர்.
“யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளைப் போன்று பாடி ஸ்கல்ப்டிங் தெரபியும் உடலை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும் ஒரு பயிற்சி. உடலை ஒவ்வொரு வகையிலும் ஸ்ரெட்ச் செய்து தசை நார்களுக்கும் எலும்புக்கும் பலம் கூட்டுவதுதான் இதன் முக்கிய அம்சம். குறிப்பாக, உடல்வாகைச் செதுக்குகிறோம். உடலில் ‘இஞ்ச் லாஸ்’ உருவாகிறது. இஞ்ச் லாஸ் என்பது குறிப்பிட்ட சதைபிடிப்பைக் குறைத்து அழகான தோற்றத்துக்குக் கொண்டு வருவது. தவிர, பல்வேறு உடல் கோளாறுகளுக்கும் தீர்வு தருகிறது இந்த தெரபி. மொத்தம் 300 வகையான ஸ்ரெட்ச்சஸ் இருந்தாலும், உடல் வகையைப் பொறுத்து தேவையானவற்றை மட்டும் கற்றுத் தருகிறேன்” என்று சொல்கிறார் ஜெயா.
பெண்களுக்கு மட்டுமே பயிற்சியளிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் ஜெயா, கோவை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று பயிற்சி அளிக்கிறார். தற்போது பத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் உடல்நல ஆலோசகராகவும் செயல்படுகிறார்.
படங்கள்: ஜெ. மனோகரன்