

அன்றும் இன்றும் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாகவே பெண்கள் பார்க்கப்படுகின்றனர். அத்தை மகன், மாமன் மகன் போன்ற முறை மாப்பிள்ளைகள் உரிமை என்ற பெயரில் பெண்களைக் கிண்டல் செய்யச் சமூகமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெண்கள் தங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆணாதிக்கக் கருத்தாக்கத்தின் நீட்சியே, அவர்கள் பெண்களைக் கேலிக்குரியவர்களாகப் பார்ப்பது.
கிண்டல் என்ற பெயரில் பெண்களின் அங்கங்களை வர்ணித்தல், அவர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களை அம்பலப்படுத்துதல், அவர்களை அழவைத்துச் சீண்டுதல், அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அவர்கள் அங்கங்களைத் தொடுதல் என்றெல்லாம் பல வழிமுறைகளில் பெண்களைத் துன்புறுத்திப் பார்ப்பது ஆண்களின் பொழுதுபோக்காக இருக்கிறது. உரிமையுடையவர்கள் கிண்டல் செய்வது என்று தொடங்கிய பழக்கம் விரிவடைந்து, இன்று எல்லோருக்குமே பெண் கேலிப் பொருளாகிவிட்டாள். இதனால் ஏற்படும் சமுகச் சீர்கேடுகள் ஏராளம்.
விருந்து ஒன்றுக்குச் சென்றி ருந்தேன். முதல் பந்தி சாப்பாடு ஆண்களுக்கே உரியது. இரண்டாம் பந்தியில் ஆண்கள் அமர்ந்தது போக மீதி இடத்தில் குழந்தைகளும் பெண்களும் உட்காரவைக்கப்பட்டார்கள். அந்த வீட்டுப் பெண்களில் ஒருவர் உணவு பரிமாற வந்தார். பந்தியில் அமர்ந்திருந்த பெண்களில் சிலர், ‘பந்தியில் இடமிருக்கிறது. நீயும் உட்கார்’ என்று அவரை அழைத்தனர். அதற்கு அவர் மறுக்க, பந்தியில் அமர்ந்திருந்த ஆண்களில் சிலர், ‘அடுக்களையில் ருசி பார்க்கிறேன் என்ற பெயரில் அவள் சாப்பிட்டது போக மீதிதான் இது. அதற்குள் அடுத்த சாப்பாட்டுக்கு என்ன அவசரம்?’ என்று கிண்டலடித்தவுடன், அந்தப் பெண் அழுகையுடன் ஓடி மறைந்ததை வருடங்கள் பல சென்றும் மறக்க இயலவில்லை. இப்படி நேரம், இடம், பொருள் அறியாமல் பெண்களைக் கேலி செய்தல் என்ற பெயரில் சீண்டி விளையாடுவது ஆண்களின் பொழுதுபோக்கு.
பெண்களைக் கேலி செய்வதில் இளைஞர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயதினரும் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள் என்று யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. கல்லூரி மாணவி சரிகா ஷாவின் இறப்புக்குப் பின், பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் யாரும் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களைக் கேலி செய்யும் காட்சிகள் முன் எப்போதையும்விட, தற்போது அதிகமாகவே இடம்பெறுகின்றன. கல்லூரி மாணவ மாணவிகளிடையே இந்தப் பழக்கம் அறவே ஒழிய வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அது ஒருபுறம் நடந்தேற, மறுபுறம் ஊடகங்கள் பாலியல் சீண்டலுக்கு இலவச அனுமதி வழங்கிக்கொண்டிருக்கின்றன
பெண்கள் பலவீனமானவர்களாக இருக்கும்வரை, ஆண்கள் பலசாலிகளாகத்தான் உலா வருவார்கள். பெண்கள், தங்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களைப் பொறுத்துக்கொள்ளும்வரை, அது குறித்த சட்டங்களால் எவ்விதப் பயனுமில்லை.
புத்தாண்டு தினத்தில் ராஜஸ்தானில் சூறு மாவட்ட ரயில் நிலையம் அருகில் பதின்ம வயதுப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களைத் துரத்திச் சென்று, அவர்களில் ஒருவனைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த இந்திய ஒலிம்பிக் தடகள வீராங்கனை கிருஷ்ண பூனியாவைப் போலச் செயல்பட அனைத்துப் பெண்களும் முன்வர வேண்டும். இதற்கு முன் பல பெண்கள் இப்படித் துணிச்சலுடன் செயல்பட்டு, பெண்களைக் கிண்டல் செய்தவர்களைக் கண்டித்திருக்கிறார்கள். அவர்களின் வீரச் செயலைப் பாராட்டிச் சிலருக்கு அரசாங்கம் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறது. பெண்களே முன்வந்து செய்யக்கூடிய காத்திரமான நடவடிக்கைகளால்தான் பாலியல் சீண்டல்களைக் குறைக்க முடியும்; ஒழிக்க முடியும்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com