

மன அமைதியைத் தருகிற கலை, வருமானத்தையும் தருகிறது என்றால் மகிழ்ச்சிதானே? அதுவும் வீட்டில் இருந்தபடியே ஆயிரம் ரூபாயில் இருந்து பல லட்ச ரூபாய்வரை சம்பாதிக்கலாம் என்றால் கேட்கவா வேண்டும்? அதற்குக் காரணமாக இருக்கும் கேரள மியூரல் ஓவியக் கலையைக் கற்றுத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த
ஸ்ரீ வித்யா வேணுகோபால். கையடக்க அளவில் இருந்து ஆளுயர அளவுவரை இவற்றைத் தீட்டலாம். திருவனந்தபுரம் பிரின்ஸ் தொன்னக்கல் என்பவரிடம் தான் கற்ற கலையை இப்போது மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார் ஸ்ரீ வித்யா.வண்ணங்களால் மிளிர்வதுதான் ஓவியங்களின் தனித்தன்மை. ஆனால் அந்த வண்ணக் குழைவுகளிலும் தனித்தன்மையைக் கடைப்பிடிப்பது ஸ்ரீ வித்யாவின் சிறப்பு. இயற்கைப் பொருட்களை மட்டுமே வண்ணங்களுக்கான மூலப்பொருளாக இவர் பயன்படுத்துகிறார்.
“மஞ்சள் வண்ணத்துக்கு மஞ்சள் பொடி, மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தால் சிவப்பு நிறம். கருமை நிறத்துக்கு சந்தனத்தைச் சூடாக்கித் தயாரிக்க வேண்டும். இலைகளில் இருந்து பச்சையும், பூவிலிருந்து நீலமும் பெறலாம். காலப்போக்கில் இயற்கை அழிந்து, தற்போது செயற்கை அக்ரலிக் வண்ணங்களும், கேன்வாஸ் துணிகளும் கோலோச்சிவிட்டன” என்று இயற்கை மீதான தன் அக்கறையை வெளிப்படுத்தும் ஸ்ரீ வித்யா, கேரள மியூரல் ஓவியங்களை விசிடிங் கார்ட், திருமண அழைப்பிதழ், புடவை ஆகியவற்றிலும் பதித்து அழகு கூட்டலாம் என்கிறார்.
மியூரல் ஓவியங்களின் சிறப்பே உருவங்கள் அணிந்திருக்கும் ஆடைகள்தான் என்கிறார். “கேரள மியூரல் பாணியில் அமைக்கப்படும் ஓவியங்களில் உள்ள ஆண் உருவங்களுக்குப் பட சட்டை என்ற உடலை இறுக்கமாகப் பிடிக்கும் மேல் சட்டை உண்டு. பெண் உருவங்களுக்கு மெல்லிய சல்லா துணி, துப்பட்டா போல் அமைக்கப்பட்டிருக்கும். உருவங்கள் குண்டாகவும் நளினமாகவும் அமைந்திருக்கும்” என்று சொல்லும் ஸ்ரீ வித்யா, தன் முயற்சிகள் அனைத்துக்கும் தன் கணவர் வேணுகோபால் ஊக்கம் அளிப்பதாகச் சொல்கிறார்.
படங்கள்: க. ஸ்ரீபரத்