

திருமணச் சடங்குகளின் போது சொல்லப்படும் சப்தபதி மந்திரத்தின் ஏழாவது அடி, ‘கணவனும் மனைவியும் வாழ்நாள் முழுதும் உற்ற தோழர்களாக இருப்போம்’ என்கிறது.
கணவனும் மனைவியும் அடுத்தவர் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், அதிக எதிர்பார்ப்புகள் இன்றி, நிறைகளைப் போன்றே குறைகளையும் ரசித்துக் குடும்பம் நடத்தினால் வாழ்க்கை என்றுமே இன்பம்தான்!
எனக்கு 19 வயதில் திருமணமானது. உடனே குழந்தைகள் பிறந்துவிட, வாழ்க்கையின் சிரமங்கள் என்னைத் தடுமாறச் செய்தன. வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய கணவர், என்னிடம் அதிகாரம் காட்டியது கிடையாது. எனக்குத் தெரியாத விஷயங்களை அழகாக எடுத்துச் சொல்வார். அவருக்கு வடக்கே மாற்றலானது. இந்தி என்ற வார்த்தையை மட்டுமே தெரிந்துவைத்திருந்தேன். ஆனால், அந்த மொழியை எனக்குப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்த ஆசான் என் கணவர்.
காலை வேளைகளில் நான் மிகவும் சிரமப்பட்டபோது, குழந்தைகளின் வேலைகளைத் தன் வசம் எடுத்துக்கொண்டு என்னைச் சுகமாக்கிய தோழன்! வயிற்றிலும் காலிலும் அறுவை சிகிச்சைகள் நடந்தபோது, அத்தனை வேலைகளையும் செய்து, என்னையும் கவனித்துக்கொண்ட தாயுமானவர்.
நான் ஆலயங்கள் பற்றிய குறிப்புகள், பயணக் கட்டுரைகள் எழுதுவேன். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், ‘என் மனைவி எழுத்தாளர்’ என்று பெருமையோடு சொல்லி, அங்குள்ள சிறப்புகளைப் பற்றியெல்லாம் கேட்டு, என்னை எழுதச் சொல்லும் காரியதரிசி. எங்களுக்கு எதிலும் ஒளிவு மறைவு கிடையாது. எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்போம். பணி ஓய்வு பெற்ற பிறகு கூடுதல் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்.
நான் சில நேரம் கோபத்தில் ஏதாவது சொன்னாலும் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வார். “உங்களுக்கு என் மேல் கோபம் வரவில்லையா?” என்று அடிக்கடி கேட்பேன். “உன்னைத் திருமணம் செய்த நாளிலிருந்து உன் கோபத்தையும் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்” என்பார் என் காதலர்.
- ராதா பாலு, திருச்சி.
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |