

மார்கழி மாத இசைக் கச்சேரிகளோடு, சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்டத்தின் இடையே பரபரவெனப் பந்துகளைச் சேகரித்து, சரியான நேரத்தில் அவற்றை வீரர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அந்த இளம்பெண்கள். இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைக் காட்டிலும் அதிக கவனத்தை ஈர்த்திருப்பது, அங்குமிங்கும் ஓடியபடியே இருந்த இந்தப் பெண்கள்தான்.
18 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில், பந்து சேகரிக்கும் பணிக்கு முதல்முறையாகப் பெண்களை களமிறக்கியிருக்கிறது தமிழ்நாடு டென்னிஸ் சங்கம். இந்தப் பணியில் உள்ள 16 பேரில் ஆர்த்தி, வாசவி, ஜானகி, லாவண்யா, ஆனந்தி ஆகிய 5 பேர் பெண்கள்.
“டென்னிஸ் மீது ஆர்வமுள்ள எங்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு” என்கிறார் ஆர்த்தி. “நான் சிறு வயது முதலே டென்னிஸ் விளையாடி வருகிறேன். இதுவரை சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறேன். இப்போது இந்தப் போட்டியில் நானும் ஒரு சிறு பங்கு வகிக்கிறேன் என்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது” என்று கூறும் இவர், இந்திய மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 73ஆவது இடத்தில் இருக்கிறார்.
“இது பந்தைச் சேகரித்துக் கொடுக்கும் சாதாரண வேலைதானே என்று தோன்றலாம். ஆனால் இதற்குப் போதிய பயிற்சியும் கவனமும் அவசியம்” என்கிறார் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உறுப்பினரும், இவர்களின் பயிற்சியாளருமான ஹிதின் ஜோஷி. “பொதுவாக ஆண்களுக்கு கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடிப் பழக்கம் இருக்கும். அவர்களுக்குப் பந்தைக் கையாள்வது அத்தனை கடினமாக இருக்காது.
ஆனால், பெண்களுக்கு அந்தளவிற்கு இயல்பான பயிற்சி இருக்காது. நாங்கள் அவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்தோம். போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு இடையூறு இல்லாமல், களத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதையும் கற்றுக்கொடுத்தோம்” என்கிறார் ஹிதின்.
இந்தப் பணி வேறு எந்த வகையில் பயனளிக்கிறது என்று ஜானகியிடம் கேட்டால், “வீரர்களின் விளையாட்டு நுணுக்கங்களை மிக அருகிலிருந்து கற்றுக்கொள்ள இது வாய்ப்பாக இருக்கிறது” என்று உற்சாகமாகக் கூறுகிறார்.