

இப்படியொரு விழாவை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியோடு திருநெல்வேலி எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ‘பெண் இன்று’ மகளிர் திருவிழாவின் வரவேற்புரையைத் தொடங்கினார் ‘தி இந்து’ தமிழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன். “இந்த உலகை முன்னெடுத்துச் செல்வதில் எப்போதுமே பெண்களுக்குக் கூடுதல் பங்கு இருந்திருக்கிறது. அதிகார வேட்கையினாலும் தன்னுடைய உடல் வலிமையைப் பயன்படுத்தியும் பெண்களை ஆண்கள் வரலாற்றில் பின்னுக்குத் தள்ளினார்கள்.
இப்படி நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட பெண்கள் அரை நூற்றாண்டுக்கு முன்புதான் கல்வியுரிமை, சொத்துரிமை, வாக்குரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை ஆகியவற்றைப் போராடிப் பெற்றார்கள். இருந்தும் இன்றும் தனக்கான இடத்துக்காக போராட வேண்டிய நிலைதான் நீடிக்கிறது. பெண்களுக்கான இடத்தைப் பெற்றுத்தரவே ‘பெண் இன்று’ இணைப்பிதழும் இந்த விழாவும் நடத்தப்படுகின்றன” என்றார்.
வன்முறை தலையெழுத்து அல்ல
தன்னுடைய பணி, நீதிமன்றத்தில் வீற்றிருந்து தீர்ப்புகள் அளிப்பது மட்டுமல்ல, மக்களிடம் சென்று அவர்களுக்கான நியாயத்தைப் போராடிப் பெற்றுத் தருவதும்கூட எனத் திருநெல்வேலியில் சார்பு நீதிபதியாகப் பணியாற்றிவரும் தமிழரசி எடுத்துரைத்தார்.
“உச்ச நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள்வரை அத்தனையிலும் இலவசமாக வழக்குகளை நடத்தித் தரும் அமைப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் சார்பில் வழக்கைக் கட்டணம் இல்லாமல் நடத்தித் தீர்வைக் கண்டறிந்து வழங்குகிறோம். ஆகவே குடும்ப வன்முறை என்பது பெண்களின் தலையெழுத்து என்று சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. அதே நேரத்தில் இந்த அமைப்பு முடிந்த அளவு பெண்களைத் தங்களுடைய குடும்பத்தோடு இணக்கமாகவும் பாதுகாப்பான சூழ்நிலையிலும் வாழச் சட்ட உதவி புரிகிறது.
பெண்கள் பாதுகாப்பான மணவாழ்வை மேற்கொள்ள உடல்ரீதியான - உளவியல்ரீதியான குடும்ப வன்முறைகளுக்குத் தீர்வு, நிதி நிவாரணம், பாதுகாப்பு நிவாரணம், இழப்பீடு நிவாரணம் உள்ளிட்டவற்றைச் சட்டத்தின் மூலமாகப் பெற்றுத் தருவதிலும் இந்த அமைப்பு உதவுகிறது” என்றார். பல சம்பவங்களை விளக்கி அவற்றில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்கப்பட்ட சட்ட உதவிகளையும் விளக்கினார் தமிழரசி.
நிராகரிப்பை எதிர்கொள்வோம்
பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அத்தியாவசியம் என்பது அதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் எனத் தோழமையோடு பேசத் தொடங்கினார் சுயதொழிலில் சாதித்த ஹேமா குமரன். “நான் முதல் தலைமுறை தொழில் முனைவோர். வணிகத்தின் சூட்சுமங்கள் எதுவுமே தெரியாததால் அடிமட்டத்திலிருந்து மேலே எழுவது சவாலாக இருந்தது” எனத் தன்னையே ஒரு கதையின் நாயகியாகப் புனைந்து பேசினார்.
தொழில் தொடங்கும் முனைப்போடு இருக்கும் பெண்களுக்குத் தன் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சுவாரஸ்யமான படிப்பினைகளையும் பகிர்ந்துகொண்டார். “ஏதோவொன்றைச் சாதிக்கலாம் என்று நினைத்தால் எதையுமே சாதிக்க முடியாது. எதைச் சாதிக்க வேண்டும் என்பதை முதலில் முடிவெடுங்கள். பிடிக்காத தொழிலைத் தொடங்கி வெற்றிபெற முடியாது. எல்லோரும் நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். நிராகரிப்பைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்” என்றார்.
‘பெண்களுக்குத் தேவை பொன் நகையா, புன்னகையா?’ என்ற தலைப்பில் ஆரவாரமாக ஆரம்பித்தது பேச்சரங்கம். “நகை என்பது நம்மை அலங்கரிக்க மட்டுமல்ல, அதுவே கவுரவத்தையும் தேடித் தருகிறது என்பதே நிதர்சனம்” என வாதிட்டார் சீதா பாரதி. “வெறும் உதட்டோரப் புன்னகையைப் பற்றி இங்குப் பேசவில்லை. அன்பு, பொறுப்பு, பொறுமை ஆகியவற்றை வெளிக்காட்டுவதுதான் புன்னகை. அத்தகைய நற்பண்புகள்தான் பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும்” என எதிர்வாதத்தை முன்வைத்தார் மீனாட்சி நடராஜன்.
இரு தரப்பு வாதங்களையும் அலசிய நடுவர் கிருத்திகா கணேஷ், “பணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாது. ஆனால் திறமை, உழைப்பு, அன்பு மட்டுமே மரியாதையைப் பெற்றுத் தரும். அதன் வெளிப்பாடுதான் புன்னகை” எனத் தீர்ப்பளித்தார்.