Last Updated : 28 Aug, 2016 03:21 PM

 

Published : 28 Aug 2016 03:21 PM
Last Updated : 28 Aug 2016 03:21 PM

பார்வை: விளையாட்டு அரங்கில் ஒலிக்கும் மாதவிடாய்க் குரல்கள்

புதிய உலக சாதனைகள், தோல்விகள், நம்பிக்கைகள் என ரியோ ஒலிம்பிக்கின் பேசுபொருள்கள் ஏராளம். சீன வீராங்கனை ஒருவர் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசியதும் அவற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

உலக மக்கள்தொகையில் சரிபாதியினரின் இயல்பான எதிர்கொள்ளல் மாதவிடாய். ஏனோ வளர்ந்த சமூகத்திலும் அது குறித்துப் பொதுவில் பகிர்வது இன்னமும் விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறது. சீன நீச்சல் வீராங்கனையான ஃபு யுவன்ஹ்யீ (Fu Yuanhui) தனது மாதவிடாய் குறித்து ரியோவில் இயல்பாகப் பேசியது, அதுதொடர்பாகப் பொதுவில் பகிரும் போக்கு குறித்த விவாதங்களைக் கிளப்பியது. கூடவே விளையாட்டில் ஜொலிக்கும் வீராங்கனைகளின் சவாலான மறுபக்கத்தையும் எடுத்துக்காட்டியது.

முதல் குரல்

சீன ஒலிம்பிக் அணியில் இடம்பெற்றிருக்கும் 20 வயதான ஃபு யுவன்ஹ்யீ அந்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். கூடவே யுவனின் சேட்டைகளும், வெளிப்படையான பேச்சுகளும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவை. ரியோ ஒலிம்பிக் போட்டியின் இரண்டாவது நாளில் 100 மீ பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அவர் வெண்கலம் வென்றபோது வெளிப்படுத்திய உற்சாகம், சமூக ஊடகங்களில் வைரலாக வலம்வந்தது. தொடர்ந்து நடைபெற்ற 4X100 நீச்சலில் அவரது அணி நூலிழையில் தோல்வியுற்றது. அப்போது வயிற்றைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியவரை சீன ஊடகம் ஒன்றின் பெண் நிருபர் மைக்குடன் வழிமறிக்கிறார். அவரது உடல்நல விசாரிப்புக்குப் பதில் தந்த யுவன், “இந்த முறை நான் சரியாக நீந்த முடியாது போயிற்று. நேற்றே எனக்கு மாதவிடாய் ஆரம்பித்துவிட்டது. அதையொட்டிய சோர்வும், பலகீனமுமே இதற்குக் காரணம்” என்றார் பளிச்சென. பெண்கள் பங்கேற்க ஆரம்பிது நூறு ஆண்டுகளைக் கடந்த ஒலிம்பிக் வரலாற்றில் இந்த வகையில் முதல் குரல் யுவனுடையது.

சீனாவும் இந்தியாவும்

யுவனின் பேட்டிக்கு சீனாவுக்கு வெளியிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தன. இந்தியா போன்றே கலாச்சார, பண்பாட்டுக் காரணிகளை முன்வைத்து சமூக அடிப்படையில் இன்னமும் மேம்படாத தேசம் சீனா. மாதவிடாயை எதிர்கொள்ளும் உபகரணங்களுக்கான தொலைக்காட்சி விளம்பரங்கள் ப்ரைம்டைமில் ஒளிபரப்புவது அங்கே தவிர்க்கப்படுகிறது. மேற்குலக நாட்டுப் பெண்கள் மத்தியில் மூன்று தலைமுறைகளாகப் புழங்கும் டாம்பூன் (Tampon) உபயோகம், சீனாவில் இரண்டு சதவீதம் மட்டுமே. விளையாட்டில் ஈடுபடும் பெண்கள் தங்களது மாதவிடாய்ப் போக்கை இடையூறின்றி எதிர்கொள்ள டாம்பூன் மட்டுமே சிறப்பாக உதவும். ஆனால் கன்னித்தன்மைக்கு பங்கம் வரும் என்ற பழைமைவாத புரளியால், இந்தியாவைப் போன்றே டாம்பூன் விற்பனை அங்கே எடுபடவில்லை. நீச்சலில் தோல்வியடைந்த ஃபு யுவன்ஹ்யீக்கு டாம்பூன் உபயோகம் பரிந்துரைக்கப்படவில்லை என சீனத்துப் பெண்கள் தற்போது சமூக ஊடகங்களில் சாடுகிறார்கள்.

கிரண் காந்தியின் சுதந்திர ஓட்டம்

ஃபு யுவன்ஹ்யீயைப் போலவே கடந்த வருடம் இதே ஆகஸ்டில், கிரண் காந்தி என்ற இளம்பெண் மாதவிடாயை முன்னிறுத்திப் பொது இடத்தில் புரட்சிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார். புற்றுநோய் விழிப்புணர்வுக்காக லண்டனில் நடைபெற்ற 26.2 மைல் தொலைவிலான மாரத்தான் ஓட்டத்தில் 26 வயதான கிரண் காந்தியும் பங்கேற்றார். பாதி தொலைவில் தனது மாதவிடாய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தார். அவர் நினைத்திருந்தால் தேவையான உதவிகளை இடைவழியில் பெற்றிருக்க முடியும். ஆனால் கறை படிந்த ஆடையுடன் உற்சாகமாக சக பெண்களுடன் துள்ளி ஓடி மாரத்தான் ஓட்டத்தை கிரண் சாவகாசமாக நிறைவு செய்தார். பின்னர் அது குறித்து அவர் எழுதிய கட்டுரையில் மாதவிடாய் குறித்தும், பெண் சமுதாயம் மத்தியிலேயே அதை விலக்கப்பட்ட அம்சமாக கருதும் பிற்போக்கையும் சாரமாரியாய் சாடினார். “மாதவிடாய் குறித்த உலகின் அவலப் பார்வையை மாற்ற விரும்பினேன். மாதவிடாய் என்பது பெண்ணின் அடையாளங்களில் ஒன்று. இந்த நாகரிக உலகிலும் மாதவிடாய் குறித்துப் பொதுவில் பகிரமுடியாத பெண்களுக்காகவும், மாதவிடாயால் விளையாட்டுகளில் பங்கேற்காதுபோன பெண்களுக்காகவும் எனது சுதந்திர ஓட்டத்தைத் திடீரென தீர்மானித்தேன்” என்றார்.

விளையாட்டுக் களமும் மாதவிடாயும்

கிரண் காந்தி குறிப்பிட்டது போல விளையாட்டு வீராங்கனைகளின் செயற்பாட்டில் மாதவிடாய் பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. கடந்தாண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் சார்பிலான ஆய்வு ஒன்றில், மாதவிடாயால் தங்களது பயிற்சி மற்றும் கள விளையாட்டுகளில் முழு திறனோடு விளையாட முடியாது போனதை ஆய்வில் பங்கேற்ற 55 சதவீத வீராங்கனைகள் உறுதிசெய்தனர். 2014 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் தான் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு மாதவிடாய் தந்த மன உளைச்சலே காரணமென்று டென்னிஸ் வீராங்கனை ஹீதர் வாட்சன் பின்னர் தெரிவித்தார். கடந்த ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா க்விட்டவா இதே போன்று தெரிவித்தபோதும் விவாதங்கள் ஒரு சுற்று வலம் வந்தன.

விளையாட்டில் ஈடுபடும் பெண்களை மாதவிடாய் பாதிப்பதுபோல, அவர்களது கடின பயிற்சிகளால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதும் உண்டு. ஒலிம்பிக் கனவுகளுக்காக பால்யத்திலிருந்தே தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடும் சிறுமிகளின் பூப்பைடைவு கவலைப்படும் அளவுக்குத் தள்ளிப்போவதுண்டு. அதேப்போல ‘Amennorrhea’ என்பது போன்ற மாதவிடாய் இல்லாது போவதும், திடீரென அதீத ஒழுக்குமாக வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அநேகம்.

வலுக்கும் குரல்கள்

ஃபு யுவன்ஹ்யீ போன்ற ஒலிம்பிக் அணியில் இருக்கும் வீராங்கனைகளின் மாதவிடாய் சுழற்சிகள், ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே மருத்துவக் குழுக்களால் கண்காணிக்கப்படும். ஆனால் உடலை வருத்தும் அதீதப் பயிற்சி மற்றும் மன அழுத்தத்தால் உடலின் ரிதம் பிசகுவதுண்டு. மருத்துவப் பரிசோதனையில் சிக்கலைத் தரலாம் என்பதால், மாதவிடாயைத் தாமதப்படுத்தும் ஹார்மோன் மருத்துவப் பரிந்துரைகளை வீராங்கனைகள் தவிர்ப்பதும் உண்டு. இத்தனை இடையூறுகளுக்கும் மத்தியில் விளையாட்டைச் சவாலாக எதிர்கொண்டு சாதிக்கும் பெண்களே மகுடம் சூடுகிறார்கள். ஆண்களைவிட பெண்களின் விளையாட்டு உலகு அழுத்தம் மிக்கது என்பதாலேயே, யுவன் போன்றவர்களின் பழைமைக்கு எதிரான போக்குக்குப் பெண்கள் மத்தியில் வரவேற்பு பெருகுகிறது.

சீனாவின் டிவிட்டரான வெய்போவில், “ஆமாம் நான் பெண். மாதந்தோறும் எனது உதிரப்போக்கை மனநிறைவுடனும் இயல்பாகவும் எதிர்கொள்கிறேன். இது குறித்து மறைப்பதற்கோ, குரல் தாழ்த்திப் பேசுவதற்கோ ஒன்றுமில்லை” என்ற கருத்தை அதிகமாகப் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள். இதை இதர நாடுகளின் பெண்களும் வழிமொழிய மாதவிடாய்க் குரல் பொதுவில் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

மாதவிடாயின்போதும் நீச்சல் பழகலாம்

மாதவிடாயை முன்னிறுத்தி நிலவும் மூடநம்பிக்கைகள் ஏராளம். நீச்சலுக்கு எதிரானவையும் அவற்றில் உண்டு. பெண்கள் தங்களது உடலும் மனதும் ஒத்துழைத்தால் மாதவிடாய் தருணத்திலும் நீச்சல் குளத்தில் தாராளமாக நீந்தலாம். வேறெந்த உதவியைவிடவும் டாம்பூன் போன்றவை பெண்கள் மணிக்கணக்கில் நீந்தத் துணைபுரியும். நீச்சல் குளத்தில் சேர்க்கப்படும் குளோரின் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை நம்பி, சக மனிதர்களின் சரும பாதிப்புகள், தண்ணீரில் இறங்கினாலே சிறுநீர் பிரிவோர் உள்ளிட்டோரின் உபத்திரவங்களை எதிர்கொள்வோர் மாதவிடாயை மட்டுமே குறைகாண்பது அபத்தமே. அதேபோல மாதவிடாய் நேரத்தில் கடலில் நீந்தினால் சுறாக்கள் தாக்கும் என்றெல்லாம்கூட வளர்ந்த நாடுகளிலும் வதந்திகளைக் கிளப்பியவர்கள் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x