

பங்குச் சந்தை முதலீடு குறுகிய காலத்தில் லாபம் பார்ப்பதற்கான வாய்ப்புதானே? அதில் முதலீடு செய்துவிட்டுப் பல ஆண்டுகள் காத்திருப்பது அபத்தம் இல்லையா?
இதுதான் நீங்கள் முதலீட்டாளரா, வர்த்தகரா என்பதைச் சொல்லும் கேள்வி. ஆண்டுக் கணக்கில் காத்திருக்க எனக்குப் பொறுமை கிடையாது. காலையில் பணத்தைப் போட்டோமா மாலையில் லாபம் பார்த்தோமா என்று சொல்பவராக இருந்தால் நீங்கள் வர்த்தகம். பங்குச் சந்தை முதலீட்டை வியாபாரமாகப் பார்ப்பவர்.
இன்ஃபோசிஸ் உதாரணம்தான் முதலீட்டாளர்களுக்கு அடையாளம். சரியான நிறுவனத்தைத் தேர்வுசெய்து முதலீடு செய்துவிட்டு மறந்துவிடுவது. பல ஆண்டுகள் கழித்து அந்த முதலீட்டை லாபகரமாக விற்று வெளியேறுவது என்ற மனநிலை வேண்டும். அப்படிப்பட்ட நிதான மனிதர்களுக்குதான் ஆலோசனை தேவை. வர்த்தகமாக நினைப்பவர்களே பாதி அட்வைசர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படாது. தினசரி வர்த்தகம் என்பது முதலீட்டின் அங்கமல்ல.
இன்றைக்கு எந்த நிறுவனம் என்று தீர்மானித்துக்கொண்டு கொக்கு மாதிரி காத்திருந்து, குறைவான விலை வரும்போது வாங்கி, தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்து விலை ஏறும்போது விற்றுவிட்டு வெளியேறுவது. அன்றைய லாபம் அல்லது அன்றைய நஷ்டம் அன்றோடு முடிந்துவிடும். மறுநாள் புதிய நிறுவனம், புதிய முயற்சி.
ஷேர் மார்கெட்டில் முதலீடு பண்ணி யிருக்கிறேன் என்று சொல்லும் பலரும் இப்படிப்பட்ட தின மனிதர்கள்தான். அவர்களில் தினமும் பங்குத் தரகு நிறுவனத்துக்குச் சாப்பாடு கட்டிக்கொண்டு போய் அமர்ந்து வர்த்தகம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அப்படி இல்லாமல் தரகரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குச் சென்றாலும் அவர்கள் கம்ப்யூட்டரில் பங்குச் சந்தைக்கான டிக்கர் ஓடிக்கொண்டே இருக்கும். தான் சொன்ன நிறுவனம் என்னவாகியிருக்கும் என்ற கேள்வி மனதில் இருந்துகொண்டே இருக்கும்.
நாம் அவர்கள் இல்லை. காத்திருந்து செய்திகளைப் பின்தொடர்ந்து சரியான நேரத்தில் வாங்கி, விலை சரியும்போது இன்னும் கொஞ்சம் வாங்கிப்போட்டு, விலை ஏறும்போது கொஞ்சம் கொஞ்சமாக விற்று லாபம் பார்த்து என்று பங்குச் சந்தை முதலீட்டை அனுபவமாகப் பாருங்கள். அன்றாட வர்த்தகம் என்ற பெயரில் அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளாதீர்கள்.
பங்கு முதலீட்டில் கடைசியாகச் சொல்ல நினைத்த விஷயம் இதுதான். இதுவரை எல்லா நடவடிக்கைகளும் இருவருக்கும் பொதுவானதுதான். ஆனால், முதலீட்டை வைத்திருக்குaம் கால அவகாசம் மட்டும்தான் வர்த்தகம் செய்ய நினைப்பவருக்கும் முதலீடு செய்ய நினைப்பவருக்கும் மாறுபடும்.
பங்குச் சந்தை அபாயகரமான முதலீடு என்ற பதம் வந்ததே முதலீட்டுக்கான அனுபவத்தோடு இருப்பவர்கள் வர்த்தகத்தில் இறங்கிக் கையைச் சுட்டுக் கொள்ளும்போதுதான். அதனால் கவனமாக இருங்கள். பங்குச் சந்தை முதலீட்டின் பலனை அனுபவியுங்கள்.
இப்போது நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தயார் ஆகிவிட்டீர்கள். களத்தில் இறங்குங்கள். முதலீட்டு வகைகளில் முக்கியமான பங்குச் சந்தை முதலீடு பற்றிப் பேசுவதோடு நம் பயணமும் நிறைவு பெறுகிறது.
சிறிய நினைவூட்டல்…
30 வாரங்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்தை வேகமாகத் திரும்பிப் பார்த்துவிடலாமா? முதலீட்டில் எல்லா வகைகளிலும் கொஞ்சம் போட்டு வையுங்கள். அப்போதுதான் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து உங்கள் முதலீட்டைப் பத்திரமாகக் கொண்டு செல்ல முடியும். இதைத் தெரிந்துகொள்வதற்கு போர்ட்ஃபோலியோ அவசியம். வங்கிச் சேமிப்பு மாதிரியான பாதுகாப்பான முதலீட்டில் தொடங்கி பங்குச் சந்தை மாதிரியான ஆபத்தான முதலீடு வரை எல்லாவற்றையும் ருசித்துவிடுங்கள்.
அப்படி எல்லாவற்றையும் செய்யும்போது எதில் எவ்வளவு என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் வயது என்னவோ அந்த அளவுக்குப் பாதுகாப்பான முதலீடு இருக்கட்டும். நூறில் இருந்து உங்கள் வயதைக் கழித்து கிடைக்கும் அளவுக்கு ஆபத்தான முதலீட்டைச் செய்யுங்கள். வயது ஏற ஏற பாதுகாப்பான முதலீட்டின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று எல்லா வகையான காப்பீடுகளையும் எடுத்து வைத்துக் கொண்டு அதன் பிறகு முதலீட்டுக்குள் கால் வையுங்கள். உங்கள் முதலீட்டில் தங்கத்துக்கு ஒரு பங்கு ஒதுக்குங்கள். அது முதலீடாகப் பலன் தரும். நகை என்பதில் குறைவாகவும் நாணயம், பிஸ்கெட் போன்றவற்றில் அதிகமாகவும் முதலீட்டைச் செய்வது புத்திசாலித்தனமானது.
ஆர்டி, சீட்டு போன்ற மாதாந்திரச் சேமிப்பு முயற்சிகளை எப்போதும் கடைப்பிடியுங்கள். சிறுகச் சிறுக நம் கண்ணுக்கே தெரியாமல் சேரும் அந்தத் தொகை தேவையான காலகட்டத்தில் பெரிய அளவில் கைகொடுக்கும். நம் செலவுகளில் முதல் இடத்தைச் சேமிப்புக்குக் கொடுங்கள் என்பது முதலீட்டு ஆலோசகர்களின் முக்கியமான செய்தி.
இந்த விஷயங்களை நினைவில் நிறுத்திக்கொண்டாலே போதும். உங்களுடைய சேமிப்பு முதலீடாக மாறும். முதலீடு உங்களுக்காக உழைக்கும். எதையும் தள்ளிப்போடாமல் உடனே செயல்படுத்துவதுதான் சிறப்பான லாபத்தைக் கொடுக்கும். பருவத்தே பணம் செய்யுங்கள்.
வாழ்த்துகள்!
- நிறைவடைந்தது
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com