

பைரவி ராகத்தில் அமைந்த விரிபோனி வர்ணத்தை எம்.எஸ். பாடி நேரடியாகக் கேட்டவர்கள் பாக்கியவான்கள். அதேபோல் கடந்த வாரம் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி சென்னை மியூசி மியூசிக்கல் வளாகத்தில் உள்ள அம்ரோஷியா அரங்கில் நடந்த ஓவியக் கண்காட்சியைப் பார்த்தவர்களும் பாக்கியவான்கள்தான்.
பாடும் தோற்றத்தில் மட்டுமில்லாமல் கோலம் போடுவது போலவும், சுப்ரபாதம், விஷ்ணுசகஸ்ரநாமத்தின் பின்னணியிலும் எம்.எஸ்.ஸின் ஓவியங்கள் புதிய அனுபவத்தைத் தந்தன. அதோடு 1930 முதல் 1950களில் கோலோலோச்சிய தென்னிந்திய பிரபலங்களின் புகைப்படக் கண்காட்சியையும் ஓவியக் கண்காட்சியோடு ஒருங்கிணைத்திருந்தார் ஏ. உதயசங்கர்.
நேர்க்கோடுகள், கறுப்பு, வெள்ளை, எண்ணெய், அக்ரலிக் எனப் பல வகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பெரும்பாலானவை ரியலிஸ்டிக் வகை ஓவியங்களாகவே இருந்தன. ஒன்றிரண்டு ஓவியங்கள் அரூப முறையில் வரையப்பட்டிருந்தன. ஓவியர்கள் ஏ.ஜோதி, டி. மணவாளன், முரளிதரன் அழகர், ராஜமாறன், சங்கரலிங்கம், ஷிவராம், ஸ்ரீஜித் வெல்லோரா, விநோத்குமார் ஆகியோரின் 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியை அலங்கரித்தன.