

ஆதி திராவிடர் நலன் குறித்த 2011-2012-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அன்றைய விவாதம் முடிவடையும் தறுவாயில் இருந்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையிலிருந்த ஓர் உறுப்பினர் எழுந்து முக்கியப் பிரச்சினை என்று சொல்லி சபையின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தார்.
“சென்ற திமுக ஆட்சியின்போது அருந்ததியர் மக்களுக்கான 3% இட ஒதுக்கீடு மசோதா தவறான வழியில் சட்டமாக்கப்பட்டுள்ளது. அது தலித் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதாகவும் உள்ளது. அதனால் அந்தச் சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்” என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் அந்த மக்களின் உரிமை சார்ந்த அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
தலித் மக்களுக்கான 19% இட ஒதுக்கீடு சட்டம் இருந்தபோதும் அருந்ததியர் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அடுக்கிய மூட்டைகளில் அடி மூட்டையாகவே இருக்கிறார்கள். இன்னமும் துப்புரவுத் தொழிலோடும் பாதாளச் சாக்கடையில் மூழ்குபவர்களாகவும் இறந்த சடலங்களை எரியூட்டுபவர்களாகவும் மனிதக் கழிவை அள்ளுபவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய அவலங்களோடு வறுமை நிறைந்ததாக இருக்கிறது அவர்களது வாழ்க்கை.
இது குறித்து பல அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளைச் சமர்ப்பித்து அதன் வழியில் 3% இட ஒதுக்கீடு தேவையென சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளும் அருந்ததியர் அமைப்புகளும் வலியுறுத்திவந்தனர். அதன் பின்னணியில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு அன்றைய திமுக அரசு அந்த மசோதவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தார்கள். அப்போது அஇஅதிமுக நடுநிலைமை வகித்தார்கள்.
அண்ணா நூலகம், புதிய சட்டமன்ற கட்டிடம் போன்று இந்தச் சட்டமும் மாறுதலுக்குள்ளாகுமோ என்ற பதற்றம் எங்களிடையே எழுந்தது. பேரவைத் தலைவரின் அனுமதியோடு குறுக்கிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
“கல்வி, வேலைவாய்ப்பில் ஒரு சதவீதம்கூட முன்னேறாத அந்த மக்களுக்கு 3% ஒதுக்கீடு கிடைக்க நீங்களே எதிர்ப்பு தெரிவிக்கலாமா? உங்கள் கருத்து அவர்களிடையே பிரிவினையை உருவாக்காதா?” என்றேன்.
இந்த விவாதங்களைக் கூர்ந்து கவனித்தபடி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். திமுக ஆட்சி கொண்டுவந்த சட்டம் என்பதற்காகவே எங்கே எழுந்து மறுத்துவிடுவாரோ என்ற அச்சம் சில நிமிடங்களுக்கு நீடித்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே ஆறுதலைத் தந்தது. அதைவிட அதிசயமாக சபை முடிந்து கிளம்புகையில் கரம் உயர்த்தி எனது கருத்து சரியானது என்பதாகச் சைகை காட்டினார்.
முன்பு கடைப்பிடித்த அதே நடுநிலைதான். ஆனாலும் ஆதிதிராவிட மக்களின் நம்பிக்கையிலிருந்து விலக விரும்பாத அணுகுமுறை. தலைமைப் பண்புகள் 1990-க்கும் 91-க்குமான கால இடைவெளியில் எதிர்க் கட்சித்தலைவர் என்ற இடத்திலிருந்து 160 இடங்களைக் கைப்பற்றிய கட்சியின் தலைவராகவும், அசுர பலத்தோடு கூடிய ஆட்சியின் முதலமைச்சராகவும் அவர் உயர்ந்தார். அதற்குச் சில அரசியல் நிகழ்வுகளும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் போன்றவை அடித்தளமாக இருந்தாலும், அவை மட்டுமே காரணங்கள் என்று சொல்லிவிட முடியாது. அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் துணிவையும் தன்னம்பிக்கையையும், முதலாளித்துவ அரசியலமைப்பில் அதற்குரிய தனித்த ஆளுமை குணங்களையும் நுட்பத்தையும் அவர் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியாது.
ஒரு பெண் அதிகாரத்துக்கு வந்தபோது அவரால் என்ன செய்ய முடியும் என்ற அவநம்பிக்கையையோ எதிர்மறையான விமர்சனங்களையோ அப்போது பார்க்க முடியவில்லை. மாறாக ஒரு பெண் தலைமையில் அமைந்த ஆட்சி மீது நிறைய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் தமிழக மக்கள் பாரபட்சமில்லாமல்தான் கொண்டிருந்தார்கள்.
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com