ராணுவத்தை எதிர்த்து வென்ற வீராங்கனை

ராணுவத்தை எதிர்த்து வென்ற வீராங்கனை
Updated on
3 min read

“நான் ஏழையாக இருக்கலாம். படிக்காதவளாக இருக்கலாம். ஆனால் மலைகளும் ஏரிகளும் எங்களின் பொக்கிஷங்கள் என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன்!’’ என்கிறார் பெரு நாட்டைச் சேர்ந்த மேக்ஸிமா ஆக்கூன்யா த சாப் (Maxima Acuna de Chaupe). தனியொரு பெண்ணாக சர்வதேச தங்கச் சுரங்க நிறுவனத்தை எதிர்த்துப் போராடி, வெற்றிபெற்றிருக்கிறார்! 2016-ம் ஆண்டுக்கான சுற்றுச் சூழலின் நோபல் என்று கருதப்படும் கோல்ட்மேன் விருதைப் பெற்றிருக்கிறார்!

1994-ம் ஆண்டு மேக்ஸிமாவின் குடும்பம் மலைப் பிரதேசத்தில் 60 ஏக்கர் நிலத்தை வாங்கி, குடிபெயர்ந்தது. சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு, விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். நிலத்திலிருந்து உணவுப் பொருட்களையும் ஆடு, மாடுகளிலிருந்து பால், பாலாடைக்கட்டிகளையும் பெற்றுக்கொண்டனர்.

ஓய்வு நேரங்களில் கம்பளி ஆடைகளை நெய்வார்கள். எப்பொழுதாவது காய்கறிகளையும் பால் பொருட்களையும் கம்பளித் துணிகளையும் அருகிலிருக்கும் நகரத்துக்குச் சென்று விற்று வருவார்கள். அவர்களின் வாழ்க்கை அந்த அழகிய மலைக் கிராமத்தில் அமைதியாகக் கழிந்துகொண்டிருந்தது.

நிம்மதி தொலைந்தது

2011. மழை நாள். ஆடுகள் குளிரில் குரல்கொடுத்துக்கொண்டிருந்தன. காற்றுக்குத் தகரக் கூரை விநோதமான ஒலியை எழுப்பியது. திடீரென்று வீட்டின் கதவை யாரோ ஆக்ரோஷமாகத் தட்டினார்கள். திறந்து பார்த்தபோது சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் நின்றுகொண்டிருந்தனர். உடனே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடும்படி கூறினர்.

“எங்களின் நிலத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர முடியாது” என்று மேக்ஸிமாவும் அவரது கணவரும் உறுதியாக மறுத்தனர். உடனே காட்டுமிராண்டித்தனமான செயல்களில் அவர்கள் இறங்கினர். வீட்டில் உள்ள பொருட்களை வீசினர். ஆடுகளை அபகரித்தனர். அடித்த அடியில் மகள்களில் ஒருவருவரும் கணவரும் சுயநினைவை இழந்தனர்.

சுரங்க நிறுவனம்

தென் அமெரிக்காவின் காங்கா சுரங்க நிறுவனத்துக்கு பெரு அரசாங்கம் 7,400 ஏக்கர் நிலத்தை வழங்கியிருந்தது. அந்த நிலத்துக்கு அருகில் மேக்ஸிமாவின் நிலம் இருப்பதால், அதையும் அபகரிக்க அவர்கள் திட்டமிட்டனர்.

படிப்பறிவு இல்லாத ஏழைப் பெண், மிரட்டலுக்குப் பயந்து ஓடிவிடுவார் என்று நினைத்தது அதிகாரவர்க்கம். நடந்தது வேறு. என்ன நிகழ்ந்தாலும் நிலத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக நின்றார் மேக்ஸிமா. திடீரென்று ஆட்கள் வருவார்கள்.

மகள்களின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள். மகனை அடித்து நொறுக்குவார்கள். கணவர் மீது பொய் வழக்குப் போடுவார்கள். கண் முன்னே குழந்தைகள் படும் கஷ்டம் மேக்ஸிமாவின் மனத்தை வேதனைப்படுத்தும். ஆனாலும் மனத்தைத் தேற்றிக்கொண்டு, அவர்களை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருந்தார்.

“நான் என்னுடைய நிலத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் போராட்டங்களை நடத்தவில்லை. சுரங்க நிறுவனம் வந்த பிறகு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்த நல்ல குடிநீர் நிலைகள் எல்லாம் விஷ நீராக மாறிவிட்டன. அங்குள்ள மக்கள் இங்கே வந்துதான் தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் அள்ளிக் கொடுப்பது இந்த நிலம் மட்டுமே. இந்த நிலத்தையும் தண்ணீரையும் பாழாக்கிவிட்டு, எப்படி வாழ முடியும்?’’ என்கிறார் மேக்ஸிமா.

வழக்கும் தண்டனையும்

2012-ம் ஆண்டு சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தார் என்று வழக்குத் தொடுக்கப்பட்டது. மாகாண நீதிமன்றமும் இவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கியது. 30 நாட்களில் இடத்தைக் காலி செய்யவேண்டும். இல்லாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 1.4 லட்சம் ரூபாய் அபராதமும் கட்டவேண்டும்.

மேல் முறையீடு செய்தார் மேக்ஸிமா. வழக்குக்காக தொலைதூரத்தில் உள்ள நகரத்துக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். பேருந்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் செல்லாவிட்டால், பாதகமாகத் தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. அதனால் 8 மணி நேரம் நடந்தே சென்று வருவார் மேக்ஸிமா.

பக்கத்து கிராமங்களில் இவரைப் போலவே மேலும் சிலர் நிலம் கொடுக்க மறுத்துப் போராட்டங்களை நடத்தினர். 4 பேர் தங்கள் உயிர்களை இழந்தனர். போராட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவு பெருக ஆரம்பித்தது.

மேக்ஸிமாவின் நிலத்தில் விளைவித்த பயிர்களை எல்லாம் நாசம் செய்தனர். தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தினர். ஒருகட்டத்தில் அங்கே வசிக்க முடியாது என்ற நிலை உருவானது. அருகில் உள்ள பகுதிக்குக் குடிபோனார் மேக்ஸிமா. கணவர், மகன் என்று யாராவது ஒருவர் நிலத்தைப் பாதுகாத்துவருகின்றனர்.

தனியொரு பெண்ணின் போராட்டம் வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. மனித உரிமைகள் ஆணையம் அவருக்கு ஆதரவாக நின்றது. பல்வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளும் தங்கள் ஆதரவை அளித்தன.

போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

இரண்டு ஆண்டுகள் வழக்கு நீண்டுகொண்டே சென்றது. இறுதியில் மேக்ஸிமாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது. சட்டபூர்வமான இந்த வெற்றி, சுரங்க நிறுவனத்தை மேலும் முன்னேற விடாமல் தடுத்தது. மேக்ஸிமாவின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை, பெரு அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

“நீதிமன்றத்தில் வெற்றி பெற்றாலும் நாங்கள் இன்றும் அதே அச்சுறுத்தலில்தான் இருக்கிறோம். திடீரென்று வேலி போடுவார்கள். உருளைக்கிழங்கு பயிர்களை நாசம் செய்வார்கள். சண்டைக்கு வருவார்கள். ஒரு கண்காணிப்பு கேமரா வைத்து எங்களைக் கண்காணித்து வருகிறார்கள். நாங்கள் சிறிது அஜாக்கிரதையாக இருந்தாலும் நிலத்தை ஆக்கிரமித்துவிடுவார்கள்.

கோல்ட்மேன் விருது பெற்றுத் திரும்பியபோதுகூட, 20 நிமிடங்கள் எங்கள் இருப்பிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இயற்கையை அழிப்பதற்காக அவர்கள் போராடிவருகிறார்கள். இயற்கையைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் போராடி வருகிறோம்.

வாழ்வாதாரமான நீரையும் நிலத்தையும் இழந்துவிட்டு, இங்கே கிடைக்கப் போகும் தங்கத்தை வைத்து என்ன செய்வது?. எனக்குத் தெரிந்தது ஒன்றுதான்; அநியாயத்தைத் துணிச்சலாக எதிர்க்க வேண்டும். எவ்வளவு பெரிய சுரங்க நிறுவனமாக இருந்தாலும் என்னைத் தோற்கடிக்க ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்’’ என்கிறார் மேக்ஸிமா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in