Published : 17 Nov 2013 02:28 PM
Last Updated : 17 Nov 2013 02:28 PM

கோடுகளை ஆயுதமாக்கிய மர்ஜி

சித்திர நாவல் (கிராபிக் நாவல்) என்ற வடிவம் தமிழுக்குப் புதுசு. சினிமாவின் காட்சிகள் வேகமாக ஓடாமல் தனித்தனிச் சட்டகமாக நகர்ந்தால், அதுதான் சித்திர நாவல். நிறைய காட்சி அனுபவங்கள், அவசியமான இடத்தில் மட்டும் வசனங்கள் என்று அது தரும் அனுபவம் முற்றிலும் வேறுபட்டது.

அந்த வகையில், தமிழில் வெளியான முதல் சித்திர நாவல் முயற்சிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது, ஈரானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் மர்ஜானே சத்ரபியின் "ஈரான் ஒரு குழந்தைப் பருவத்தின் கதை", "ஈரான் திரும்பும் காலம்" ஆகிய இரண்டு நூல்கள். இந்த சித்திர நாவல்கள் மேற்கண்ட அனுபவத்துக்கு உத்தரவாதம் தருபவை.

இளமைக் காலம்

1969இல் ஈரானிலுள்ள ரஷ்த் என்ற இடத்தில் பிறந்தவர் மர்ஜானே சத்ரபி. சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் பாரம்பரியம் கொண்ட முற்போக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். பொதுவுடைமைச் சிந்தனை, நேர்மை, சுயமரியாதை உணர்வுகளுடன் அவர் வளர்க்கப்பட்டார்.

சின்ன வயதிலேயே மர்ஜியின் (மர்ஜானே) தந்தை பண்டைய ஈரானின் (பெர்சியா) வரலாற்றைச் சொல்லித் தந்தார். குறிப்பாக அவளது தாயும், பாட்டியும் படித்தவர்களாகவும் முற்போக்கானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களது தாக்கம் மர்ஜியிடம் அதிகம் இருந்தது.

தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு பள்ளியில் மர்ஜி படித்துக்கொண்டிருந்த காலத்தில், 1979இல் இஸ்லாமியப் புரட்சி நடைபெற்றது. அது கொடுங்கோல் மன்னர் ஷாவுக்கு எதிரானது. அப்போது புரட்சி நடத்தியவர்கள் ஒரு குழுவினராக இருக்க, ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள் மதஅடிப்படைவாதிகளாக இருந்தார்கள். அவர்கள் பழமைவாத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து ஈரான்-ஈராக் போர் வெடித்தது.

இது போன்ற உள்நாட்டு நெருக்கடிகளால் மர்ஜி ஈரானில் படிப்பது நல்லதில்லை என்று அவளுடைய பெற்றோர் கருதினர். இதையடுத்து பள்ளிப் படிப்புக்காக ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவுக்கு மர்ஜியை அனுப்பினார்கள். முதன்முறையாக, தன்னந்தனியாக விமானம் ஏறினாள் அந்த 14 வயதுச் சிறுமி. அக்கறையும் பாசமும் கொண்ட பெற்றோர், பாட்டியைவிட்டு வெளிநாட்டில தனியாக வசித்தாள்.

ஈரானியர்களை ஐரோப்பியர்கள் வெறுப்புடனும் இரண்டாந்தரமாகவும் பார்த்தது மர்ஜிக்கு அதிர்ச்சி தந்தது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தாள். பிரான்சிலுள்ள ஸ்டிராஸ்போர்க்கில் ஓவியக் கலை படித்தாள்.

சுதந்திர சிந்தனை கொண்ட பெண்ணாக வளர்க்கப்பட்ட மர்ஜி உள்நாட்டிலும், ஐரோப்பாவிலும் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். மூன்றாம் உலகைச் சேர்ந்த பெண்ணாக ஐரோப்பாவிலும், ஐரோப்பிய பெண்ணாக பழைமைவாத ஈரானிலும் என இரண்டு முனைகளில் மாறுபட்ட ஒடுக்குமுறைகளை மர்ஜி சந்தித்தாள். பிற்காலத்தில் ஒரு சித்திரக்கதை ஓவியராக மாறிய மர்ஜி, தனது தத்ரூபமான கறுப்புவெள்ளை கோடுகள் மூலம் அவற்றை உலகுக்கு வெளிப்படுத்தினார். அதுவே அவரது முதல் சித்திர நாவல்.

உலகப் புகழ்

பெர்சேபோலிஸ் (Persepolis) என்ற அவரது சுயசரிதை சித்திர நாவல், அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. 20 ஆண்டு கால ஈரானின் வரலாற்றைச் சொல்லும் அந்த சித்திர நாவல், சிறந்த அரசியல்ரீதியிலான படைப்பும்கூட.

உலகின் கண்களுக்கு முன்னால் மத அடிப்படைவாதம், மதவெறி, பயங்கரவாதம் ஆகியவையே ஈரானின் ஒட்டுமொத்த பிம்பமாக வைக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு எதிரான சித்திரத்தை மர்ஜியின் சித்திர நாவல் முன்வைக்கிறது. அங்கு நடைபெற்ற மாற்று அரசியல் நடவடிக்கைகளை இந்நூல் கவனப்படுத்துகிறது.

ஈரானில் நிலவிய மதவாதக் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் சத்ரபி ஈரான்-ஈராக் போர் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகள், அதனால் அகதியான மனிதர்களின் வாழ்க்கையைத் தனது கதை மூலமாக உலகுக்குச் சொல்லியிருக்கிறார். மர்ஜியின் ஸ்ட்ரோக் கதையின் வீரியத்தை சிறப்பாக உணர்த்தும் அதேநேரம், சித்திரக் கதைகளுக்கே உரிய நகைச்சுவையையும் தவறவிடவில்லை.

தன் சித்திர நாவலுக்கு பெர்சேபோலிஸ் என்ற பெயரை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. பண்டைய பெர்சியாதான் இன்றைய ஈரான், வளமான பண்பாட்டு அடையாளங்களுக்குப் புகழ்பெற்றது. உலகின் பழைமையான நாகரிக வளர்ச்சி தொடர்ச்சியாக நிகழ்ந்த பகுதிகளில் ஒன்று பெர்சியா. அக்காமனிட் பேரரசுதான் பெர்சியாவின் முதல் பெர்சிய பேரரசு. அவர்களது தலைநகரம் பெர்சிஸ் அல்லது பெர்சேபோலிஸ். ஷியா பிரிவைச் சேர்ந்த ஷாவின் முடியாட்சி 1501ஆம் ஆண்டிலிருந்து 1979ஆம் ஆண்டு வரை ஈரானில் தொடர்ந்தது. 1979இல் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சியில் ஷாவின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, மத அடிப்படைவாதிகள் ஆட்சியைப் பிடிக்க, அந்நாடு அதிகாரபூர்வமாக இஸ்லாமியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் பெர்சேபோலிஸ் என்ற தலைப்பைச் சூட்டியுள்ளார் மர்ஜி.

தமிழிலும்...

பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்த சித்திர நாவல், ஆங்கிலம் வழியாக தமிழுக்கும் வந்திருக்கிறது. விடியல் பதிப்பகத்தின் முயற்சியால், அதன் இரு பகுதிகள் தமிழில் வெளியாகியுள்ளன. முதல் புத்தகம் "ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை", மற்றொன்று "ஈரான்: திரும்பும் காலம்". இந்த நூல்களை மொழிபெயர்த்தவர் எஸ்.பாலச்சந்திரன். "கிராபிக் நாவல்" எனப்படும் பெரிய வர்களுக்கு எழுதப்பட்ட சித்திர நாவலுக்கு, தமிழில் சிறந்த உதாரணங்கள் இவை.

பெர்சேபோலிஸ் சினிமாவாகவும் வெளியாகியிருக்கிறது. வின்சென்ட் பார்னோவுடன் இணைந்து மர்ஜியே இந்த அனிமேஷன் படத்தை இயக்கினார். உலகின் மதிப்புமிக்க திரைப்பட விழாவான கான் திரைப்பட விழாவில், 2007ஆம் ஆண்டில் அது நடுவர் விருதைப் பெற்றது.

(நவம்பர் 22 மர்ஜானே சத்ரபியின் பிறந்தநாள்)


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x