

“சச்சின் இல்லாமல் கிரிக்கெட் இருக்க முடியும்; ஆனால், கிரிக்கெட் இல்லாமல் சச்சினால் இருக்க முடியாது” இப்படிச் சொன்னவர் சச்சினின் வாழ்க்கைத் துணைவி டாக்டர் அஞ்சலி டெண்டுல்கர். சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செல்வச் செழிப்பிற்குச் சொந்தமான சச்சின், தனது 200ஆவது டெஸ்ட் பந்தயத்தில் விளையாடிய பின்னர், கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வுபெற்றது பழைய செய்தி. மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் தனது கடைசி டெஸ்ட் பந்தயத்தில் ‘சச்சின், சச்சின்’ என்ற ரசிகர்களின் ஓயாத மந்திரத்தின் ஓசைகளுக்கிடையே, ஓசைப்படாமல் தனது மாமியார், மகன் மற்றும் மகளோடு எந்த விதமான பகட்டும் இல்லாமல், சர்வ சாதாரணமாகத் தனது அருமைக் கணவரின் பேட்டிங்கை ரசித்தவாறு அமர்ந்திருந்த அஞ்சலியின் அடக்கமும், ஆர்ப்பாட்டம் இல்லாத பண்பாடும், பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அஞ்சலி, குடும்ப நலனையே பெரிதாகக் கருதி, தனது டாக்டர் தொழிலில் முழுமையை எட்ட முடியாமல் போய்விட்டபோதிலும் இதற்காகக் கொஞ்சமும் கவலைப்படாமல், குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை முழு மனதுடன் ஏற்றார்.
1990ஆம் ஆண்டில் அஞ்சலியைச் சந்தித்ததே தன் வாழ்க்கையில் மிக அழகிய தருணம் என்று சச்சின் தனது விடைபெறும் உரையில் குறிப்பிட்டபோது, மனைவி அஞ்சலி, தனக்குக் கிடைத்த ஒரு விலைமதிப்பில்லாப் பரிசு என்று சொல்லாமலே சொல்லித் தம் மனைவிக்கு மகத்தான புகழாரம் சூட்டினார்.
சச்சின் உடனான தனது 22 ஆண்டுகால வாழ்க்கையில் அஞ்சலி ஒரு முறைகூட தன் செல்வச் செழிப்பைத் தம்பட்டம் அடித்துக்கொள்ள முயன்றதோ, அல்லது தனக்குள்ள செல்வாக்கைப் பறைசாற்றவோ அல்லது பிரபல ஃபேஷன் ஷோக்களில் முதல் வரிசையை அலங்கரித்ததாகவோ ஒரு செய்தியும் வெளிவந்ததில்லை. பாராட்டப்பட வேண்டிய இத்தகைய முத்தான சிறப்பு குணங்களுடன் நிறைகுடமாய் விளங்கிடும் அஞ்சலிதான் தன் வாழ்க்கையின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் என்று கூறியிருக்கும் சச்சின் உண்மையாகவே மிகவும் கொடுத்து வைத்தவர் என்பதில் சந்தேகமே இல்லை.
அரசு சச்சினுக்கு வழங்கியுள்ள இந்தியாவின் மிக உன்னதமான பாரத ரத்னா விருது மெய்யாகவே அவரது பெருமைகளுக்கெல்லாம் மணிமகுடம். அதேசமயம் சச்சின் மனைவி அஞ்சலி, அவருக்குக் கிடைத்துள்ள இன்னொரு ரத்தினம்.