

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான இயான் ஹேத்வே, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் தன்னிறைவுக்கான நல்லெண்ணத் தூதுவராக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்கர் விருதுபெற்ற இயான் ஹாத்வேயின் நியமனம், பணியிடச் சூழலில் பெண்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பணியாற்றும் வகையில் சூழலை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வுக்கு மிகவும் உதவும் என்று ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பின் செயல் இயக்குநர் கூறியுள்ளார்.
பணியிடங்களைப் பெண்களுக்கு உகந்ததாக மேம்படுத்துவதன் மூலம் பணியிடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காகத் தனக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று இந்த நியமனத்தை வரவேற்றுள்ளார் இயான் ஹாத்வே.
பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் சி.என்.என். தொலைக்காட்சி ஆவணப்படமான ‘கேர்ள் ரைசிங்’ படத்துக்கு இயான் ஹாத்வே பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜர்னா ஜோஷி, மோர்பியைச் சேர்ந்த பளிங்குக் கல் தொழிற்சாலையிலிருந்து 111 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார். அவர்களில் 100 பேர் பெண் குழந்தைகள். சவுராஷ்டிரா பகுதியில் அதிக எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் இதுதான் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
பளிங்குக் கல், தங்கம் மற்றும் கவரிங் நகைத் தொழிலில் இப்பகுதியில் நிறைய குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். விடுமுறையில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றபோது மோர்பி கிராமத்துக்கு அருகில், நிறைய குழந்தைகள் சந்தேகப்படும் வகையில் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்த ஜர்னா ஜோஷிக்கு சந்தேகம் வந்துள்ளது.
அந்தப் பேருந்தைப் பின்தொடர்ந்தபோது, அந்தக் குழந்தைகள் தொழிற்சாலைக்குள் செல்வதைப் பார்த்தார் ஜோஷி. ஒரு நிர்வாகப் பட்டப்படிப்பு மாணவியாக அலுவலக வேலை கேட்பதுபோல நடித்து அந்தத் தொழிற்சாலைக்குள் சென்ற ஜோஷி, அங்கு பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமைகளைப் பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
அவர்கள் அவரது புகார் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். சமூகப் பாதுகாப்பு, காவல்துறை, தொழிலாளர் துறை, தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சேர்ந்து இத்தொழிற்சாலையை சோதனை செய்து 111 குழந்தைத் தொழிலாளிகள் மீட்கப்பட்டனர்.
“கோடை வெப்பநிலையிலும் அந்தக் குழந்தைகள் அதிக உஷ்ணம் உள்ள உலைகளின் அருகில் வேலை செய்தனர். அவர்களுக்குக் குளிர்ந்த நீர்கூடக் கொடுக்கப்படவில்லை” என்கிறார் ஜர்னா ஜோஷி.
திருமணத்தைப் பொறுத்தவரை இந்தியப் பெண்கள் விஷயத்தில் நவீன இந்தியா மாறவேயில்லை என்பதையே இந்திய மனித வளர்ச்சி ஆய்வு விவரங்கள் தெரவிக்கின்றன. 2011-2012-ல் திருமணமான பெண்களில் பாதிப் பேர் மணமகனுடன் திருமணத்துக்கு முன்பு பேசவேயில்லை என்று தெரியவந்துள்ளது.
திருமணத்துக்கு முந்தைய நாள்வரை நேரடியாகவோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ ஒரு சிறு போக்கு வரத்துகூடச் செய்யாதவர்களாக ஐம்பது சதவீதப் பெண்கள் இருந்துள்ளனர். அவர்களில் சிலர் மணமகனின் புகைப்படத்தைக் கூடப் பார்க்காதவர்கள். இந்த ஆய்வில் இன்னொரு நல்ல செய்தியும் உண்டு.
பெண் குழந்தைகள் தொடர்பாக பெற்றோரின் அணுகு முறை மாறியுள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள தாய்மார்களைப் பொறுத்தவரை 44.75 சதவீதம் பேர் திருமணமான தங்கள் மகள்களிடமிருந்து நிதியுதவியை முதுமையில் பெறுவதற்குத் தயாராக உள்ளனர்.
அத்துடன் முதிய வயதில் மகள்களின் வீட்டில் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெற்றோர்களிடம் அதிகரித்துள்ளது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் கிராமப்புறத்தில் பெற்றோரிடையே இவ்விஷயத்தில் மனத்தடை நீடிக்கிறது.