

படித்து முடித்துவிட்டு, நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதுதான் பலரது விருப்பத் தேர்வாக இருக்கும். ஆனால் அப்படி சேருகிற வேலை நிரந்தரமானதா என்ற அச்சமும் இருக்கும். தினம் தினம் கலக்கத்துடனேயே வேலைசெய்வதில் சங்கீதாவுக்கு விருப்பம் இல்லை. கும்பகோணத்தைச் சேர்ந்த சங்கீதாவோ, கைவினைக் கலையைக் கற்றுக்கொண்டு அதையே தன் பொருளாதாரத் தேவைக்கான ஆதாரமாகவும் பயன்படுத்திவருகிறார்.
கல்லூரி முடித்ததுமே சங்கீதாவுக்குத் திருமணம் ஆனது. தன் கணவருக்குத் தீக்குச்சியால் செய்த கைவினைப் பொருளைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்த பிறகுதான் சங்கீதாவிற்குள் இருக்கும் கலையார்வம் அவருடைய கணவருக்குப் புரிந்திருக்கிறது. முறைப்படி பலவற்றைக் கற்றுக்கொள்ள அவர் ஊக்குவித்திருக்கிறார்.
தற்போது தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் கைவினைக் கலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இந்தி படித்திருப்பதால் மாலை வேளையில் இந்தி வகுப்புகள் நடத்துகிறார்.
மூலிகை ஓவியம், கண்ணாடி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், காபி ஓவியம், மியூரல், க்வில்லிங் கலை, கூடை பின்னுதல், தெர்மகோல், ஐஸ்குச்சி, தீப்பெட்டி ஆகியவற்றில் பல வகை பொம்மைகள் செய்வது, செல்போன் பவுச், எம்ப்ராய்டரி என்று நீள்கிறது இவர் கற்றுவைத்திருக்கும் கலைகளின் பட்டியல்.
கின்னஸ் சாதணை
2010-ல் விருத்தாசலத்தில் நடந்த கின்னஸ் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார். கன்னிகாபரமேஸ்வரி அம்மன் ஓவியத்தை மூன்று மணி நேரத்தில் வரைந்துமுடித்திருக்கிறார்.
தன்னிடம் பயிற்சிபெறும் மாணவர்களின் படைப்புகளை வைத்து கண்காட்சியும் நடத்தியிருக்கிறார். 65 வகையான கலைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.
பாராட்டே உந்து சக்தி
தான் நடத்திய கண்காட்சிக்கும் செய்த கின்னஸ் சாதனைக்கும் கிடைத்த பாராட்டுகளே தன் திறமையை மேம்படுத்திக்கொள்ள உதவும் உந்துசக்தியாக இருப்பதாக சங்கீதா குறிப்பிடுகிறார்.
பல கல்லூரிகளுக்குச் சென்று கைவினைக் கலை பயற்சியளித்திருக்கிறார். இந்தியன் வங்கித் திட்டத்தின் மூலம் பல பெண்களுக்கும் கற்றுத்தந்திருக்கிறார். கைவினைக் கலை மட்டுமல்ல சங்கீதாவின் அடையாளம். அழகுக் கலை, சமையல் கலை, தையல் கலை என்று அனைத்தையும் ஒரு கை பார்த்துவிடுகிறார்.
“எனக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்துதான் மகன் பிறந்தான். எனக்குக் குழந்தை இல்லை என்ற வருத்தம் வரக் கூடாது என்பதற்காகக் கைவினைக் கலைகளைக் கற்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார் என் கணவர். நான் சோர்ந்துபோகும்போதெல்லாம் எனக்குத் தன்னம்பிகையும் ஊக்கமும் தருபவர் அவர்தான்” என்று தன் வெற்றிக்குக் காரணமாகத் தன் கணவரைக் குறிப்பிடுகிறார் சங்கீதா.
படங்கள்: ஜான் விக்டர்