

பெற்றோருக்கு ஆசிரியர் அனுப்பும் ‘Come and meet me’ என்ற ‘குறிப்பு’இல்லாமல் என் மூத்த மகன் ஒருநாளும் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதில்லை! வழக்கம்போல பள்ளியிலிருந்து மகனை அழைத்து வரச் சென்றேன். வழியில் டிராபிக் ஜாம் ஆகிவிட்டதால், சற்று தாமதமாகிவிட்டது. சீருடையில் இருக்கும் மகனைக் கண்டுபிடிக்க எப்போதும் சிறிது தடுமாறுவேன். ஆனால் அன்று அவன் எனக்கு அந்தச் சிரமத்தைக் கொடுக்கவில்லை! சட்டென்று தெரியும் விதத்தில் அவன் வகுப்பு ஆசிரியருடன் தனியாக நின்றிருந்தான். பள்ளி வாயிலுக்கே என்னைத் தேடி வரும் அளவுக்கு அவன் செய்த வால்தனம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். என்னவாக இருந்தாலும் சமாளித்துவிட உறுதிகொண்டேன். குழந்தைகளைக் கடந்து ஒருவழியாக அவனிடம் போய்ச் சேர்ந்தேன்.
கன்னத்தில் முத்தமிட்டால்...
ஆசிரியரின் முகம் இறுக்கமாக இருந்தது. “நீங்கள் பள்ளி முதல்வரைச் சந்திக்க வர வேண்டும்” என்றார். திடுக்கிட்ட நான், என்ன விஷயம் என்று கேட்டேன்.
“அசிங்கமான, அவமானகரமான, அருவருப்பான செயலை உங்கள் மகன் செய்திருக்கிறான்” என்றார் ஆசிரியர்.
இந்த மூன்று ‘அ’வார்த்தைகளும் என்னை ஆணியடித்ததுபோல அசைய விடாமல் நிறுத்திவிட்டன. சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு, நடந்ததைக் கூறும்படிக் கேட்டுக்கொண்டேன்.
“உங்கள் மகன் சக மாணவிக்கு முத்தம் கொடுத்துவிட்டான்” என்று கோபத்துடன் வார்த்தைகளை வீசினார்.
சே, இவ்வளவுதானா விஷயம் என்று ரிலாக்ஸ் ஆனேன். ஆசிரியரோ முதல்வரிடம் அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தார். என் மகனைப் பார்த்தேன். ‘பயப்பட ஒன்றும் இல்லை, நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்ற அர்த்தத்தில் அவனிடம் ஒரு புன்னகை புரிந்தேன்.
இப்படிச் செய்யலாமா?
“யாருக்கு முத்தம் கொடுத்தான்?”
“யஷ்வந்தி.”
“இதற்கு முன் என் மகன் யாருக்காவது முத்தம் கொடுத்திருக்கிறானா?”
“இல்லை.”
“யஷ்வந்திக்கு?”
“இல்லை. வாருங்கள் முதல்வரைச் சந்திப்போம். பள்ளியில் முத்தம் கொடுக்கலாமா? அதுவும் சக மாணவிக்கு? ஒரு மாணவன் செய்யக்கூடிய செயலா அது?” என்று பொறுமையிழந்து கேள்விகளை அடுக்கினார் ஆசிரியர்.
நிதானமடைந்தேன். பாலின பேதத்தை லாகவமாகக் கையாள வேண்டியது மிக முக்கியம், மிக அவசியம். மாணவ, மாணவிகளுக்கு இடையே நடக்கும் செயல்களைக் கவனமாக உற்றுநோக்கி, விஷயம் ஒன்றுமில்லை என்று தெளிவு படுத்துவதுதானே ஆசிரியர்களின் கடமை?
எல்லா முத்தமும் ஒன்றா?
“ஒருவேளை அவன் உங்களுக்கு முத்தம் கொடுத்திருந்தால்?”
என் கேள்வியை ஆசிரியர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை
அவரது முகக் குறிப்புகள் உணர்த்தின. அவர் பேசுவதற்கு இடம் தராமல்,
“எனக்கு இரண்டே மகன்கள்தான். பெண் குழந்தைகள் இல்லை. பெண் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்ற என் கணவரின் திட்டம் சாத்தியமாகவில்லை. இருபாலர் படிக்கும் பள்ளி என்பதால்தான், இந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தோம். மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் இவனுக்கு இடம் கிடைத்தது. ஆனால் அங்கே பெண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்காது. அவன் வளர வளர பெண்களிடம் பழக வேண்டிய சந்தர்ப்பம் அதிகரிக்கும் . சிறு வயது முதல் பெண்களிடம் பழகிவரும்போது, வேறுபாடின்றி நட்புடன் பழகுவதற்கான சூழல் கிடைக்கும். பதின் வயதில் எதிர்பாலின ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அப்போது அவனிடம் விஷயத்தைப் புரியவைக்க முடியும்.
பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், அவர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற புரிதல் ஓரளவுக்காவது அவனுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இந்தப் பள்ளி அளிக்கும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தோழன், தோழி, கணவர் கொடுக்கும் முத்தங்களுக்கு அர்த்தமும் வேறுபாடும் நமக்குத்தான் தெரியும், புரியும். குழந்தைகளுக்குப் புரியவும் புரியாது, தெரியவும் தெரியாது,” என்றேன்.
ஆசிரியர் அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஆசிரியர் பயிற்சியை முழுவதும் முடித்திருப்பீர்கள் என்று எண்ணு கிறேன். முதலில் குழந்தைகளைக் கையாள்வதைக் கற்றுக்கொள்ளுங்கள். அதை விடுத்து புகார் பத்திரம் வாசிக்காதீர்கள். வாருங்கள் முதல்வரைச் சந்திக்கலாம்” என்றேன்.
முத்தம் ஏன்?
பிறகென்ன, நானும் என் மகனும் வீட்டுக்கு வந்து நிம்மதியாக மதிய உணவை முடித்தோம். வீட்டில் நடந்தவற்றை நானும் பள்ளியில் நடந்தவற்றை அவனும் தினசரி கதைப்பது வழக்கம்.
“ஆமாம், நீ ஏன் அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தே?” என்று மெதுவாகக் கேட்டேன்.
“திடீர்னு நம்ம தம்பி ஞாபகம் வந்திருச்சும்மா…”
சட்டென்று என் மகனை வாரி அணைத்துக்கொண்டேன். அந்தப் பெண்ணின் பெயர் யஷ்வந்தி. என் இரண்டாவது மகன் யஷ்வந்த். இந்தச் சம்பவம் என் மகன் யூ.கே.ஜி. படிக்கும்போது நடந்தது. இப்போது அவன் முத்தங்களுக்கு அர்த்தம் புரிந்தவனாக வளர்ந்துவிட்டான்!