

இயற்கை ஒரு மாபெரும் நிகழும் அதிசயம். சதா சர்வகாலமும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டு உலகையும் உயிரினங்களையும் புதுப்பிக்கும் நிகழ்வை மேற்கொண்டுவருகிறது. அந்த நிகழ்வை முன்னிறுத்தி எழுத்தாளர் ஒருவர் ஒரு படைப்பை உருவாக்கினால் அது இலக்கியமாகிறது. குறிப்பாகச் சொன்னால், சூழலியல் இலக்கியமாகிறது.
தன்னுடைய அறிவியல் செயல்பாடுகள் மூலம் உலக அளவில் இயற்கை மீதான கரிசனத்தை மனிதர்களிடம் அறிமுகப்படுத்தியவர் ரேச்சல் கார்சன் என்றால், இந்திய அளவில் இயற்கை மீதான விழிப்புணர்வை இலக்கியம் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர் கமலா மார்க்கண்டேயா. அவரது எழுத்து வீச்சால் சூழலியல் இலக்கியம் மட்டுமல்ல, சூழலியல் பெண்ணியமும் இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது.
வெளிப்படைக் குரல்
பெங்களூருவில் சிமகூர்தி எனும் பகுதியில் 1924-ம் ஆண்டு பிறந்தார் கமலா பூர்ணய்யா. 1940 முதல் 47 வரை சென்னையில் வாழ்ந்திருக்கிறார். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் படித்திருக்கிறார். மாணவராக இருந்தபோதே, வார இதழ் ஒன்றில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிருக்கிறார். எழுத்தாளராக ஆசைப்பட்ட கமலா, தனது லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள 1948-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். அங்கு பெர்ட்ரண்ட் டெய்லர் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அது பின்னாளில் காதலாக மலர்ந்தது. அவர்களுக்கு கிம் ஆலிவர் என்ற மகள் உண்டு.
கமலா மார்க்கண்டேயா என்ற புனைப்பெயரில் எழுதிவந்த அவர், தன் வாழ்நாளில் 10 நாவல்களை எழுதியுள்ளார். தன்னுடைய நாவல்கள் மூலம் இந்தியக் கலாச்சாரம், விழுமியங்கள், கிராம வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய கமலா, அதிகாரம், ஆணாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான வெளிப்படையான குரலுக்காகப் போற்றப்படுபவர். சிறுநீரக பாதிப்பு காரணமாக 2004-ம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.
முதல் நாவலே முதன்மை
கல்வித் தளத்திலும் சரி, இலக்கியத் தளத்திலும் சரி... சூழலியல் விமர்சனம் 1970-களில் அறிமுகமானது. குறிப்பாகச் சொன்னால் 1978-ம் ஆண்டு வில்லியம் ரூக்கெர்ட் எனும் பேராசிரியர் எழுதிய ‘இலக்கியமும் சூழலியலும்' என்ற கட்டுரையில்தான் முதன்முதலில் 'சூழலியல் விமர்சனம்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல், மானுடவியல், உளவியல், சமூகவியல் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் இயற்கை சார்ந்து மனிதனுக்கு உள்ள மனப்போக்கை ஆராய்வதுதான் ‘சூழலியல் விமர்சனம்' என்ற கருத்தாக்கத்தின் குறிக்கோள். 1962-ம் ஆண்டில் ரேச்சல் கார்சனின் ‘மவுன வசந்தம்' நூல் வெளியான பிறகு, அந்தக் கருத்தாக்கம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
ஆனால் ரேச்சல் கார்சனுக்கும் முன்பே கமலா மார்க்கண்டேயா, தனது ‘நெக்டார் இன் எ ஸீவ்' எனும் நாவல் மூலம், சூழலியல் விமர்சனம் என்ற கருத்தாக்கத்தை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டார். கமலாவைப் பொறுத்தவரைக்கும், அது மூன்றாவது நாவல். ஆனால் அச்சில் வெளிவந்த அவருடைய முதல் நாவல் அதுதான். 1954-ம் ஆண்டு அந்த நாவல் வெளிவந்தது. தன்னுடைய முதல் நாவலே 'சூழலியல் விமர்சனம்' என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தும் முதன்மையான புத்தகமாக இருக்கும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அற்புதங்கள் எல்லாமே எதிர்பாராமல் நடப்பவைதானே!
இந்த நாவலும், அதற்குப் பின் வந்த அவருடைய 'தி காஃபர் டேம்ஸ்' எனும் நாவலும் சுற்றுச்சூழலைப் பற்றி உயிரோட்டத்துடன் பேசுகின்றன. இயற்கையின் மீது காதல் கொண்ட ஒருவர், கமலாவின் இந்த நாவல்களைப் படிக்கும்போது அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து பச்சைய வாசனை எழுந்து வருவதை உணரமுடியும்.
நிலத்தின் மீதான ஏக்கம்
ஒரு பெண்ணுக்கும் அவள் சார்ந்திருக்கும் பயிர் நிலத்துக்கும் இடையிலான உறவைச் சொல்வதுதான் 'நெக்டார் இன் எ ஸீவ்' நாவலின் மையம். கதையின் நாயகி ருக்மணி. தனது தோட்டத்தில் விளையும் பொருட்களைக் கொண்டே தனது குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்பவள். அவளுக்கு 13 வயதில் ஏழை உழவன் ஒருவனுடன் திருமணமாகிறது. அந்தத் தம்பதி தங்கள் நிலத்தில் உழவு செய்து வாழ்கிறார்கள். வறட்சியால் அவர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது.
இந்நிலையில், ருக்மணியின் கிராமத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று நிறுவப்படுகிறது. அதற்குத் தேவைப்படும் நிலம், அந்தக் கிராம மக்களிடமிருந்து வலிந்து பிடுங்கப்படுகிறது. பதிலாக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு அந்தத் தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது. கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அந்தத் தொழிற்சாலையால் நிலமும் நீரும் மாசுபாட, அதை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத மக்கள், தங்கள் சொந்த கிராமத்தை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்கிறார்கள். அதில் ருக்மணியின் குடும்பமும் ஒன்று. ஆனால் நகரம் அவர்களுக்கு எந்த நன்மையையும் தருவதில்லை என்பதோடு நாவல் நிறைவடைகிறது.
எக்காலத்துக்கும் ஏற்ற படைப்பு
இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் பத்து ஆண்டுகளுக்குள் வெளிவந்த நாவல்களில் இந்த நாவல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சராசரி இந்திய கிராமத்தை, அங்கு நிலவும் துயரத்தை அப்பட்டமாகக் காட்டியதோடு அல்லாமல், இந்தியா கற்பனை செய்து வைத்திருந்த நவீனத்தின் உருவகமாகத் தோல் பதனிடும் தொழிற்சாலையைக் காட்டியது மிகப் பெரிய புரட்சி என்றே சொல்ல வேண்டும். கதை நடைபெறும் காலம், இடம் ஆகியவற்றைச் சொல்லாமல் விட்டிருப்பதால், இந்த நாவல் எக்காலத்துக்கும், எந்த இடத்துக்கும் ஏற்ற படைப்பாக இருக்கிறது. இது பிற்காலத்தில் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இது பாடநூலாக வைக்கப்பட்டது.
நாவல் முழுவதும் கமலா பயன்படுத்தியிருக்கும் வர்ணனைகள், இயற்கையுடன் அந்த நாயகி எவ்வளவு ஒன்றறக் கலந்திருக்கிறாள் என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. தொழிற்சாலை மூலம் விவசாயம் சீரழிக்கப்படுவதை, சுற்றுச்சூழல் மாசுபடுவதை பிரச்சாரத்தன்மை இல்லாமல் எழுதியதால், 'கண்ணுக்குப் புலனாகாத சுற்றுச்சூழல்வாதி' என்று சூழலியல் வரலாற்றாசிரியர்கள் மாதவ் கட்கில், ராமச்சந்திர குஹா ஆகியோரால் கமலா பாராட்டப்பட்டார்.
கமலா இயற்கை பற்றி இப்படி எழுதியுள்ளார்: “இயற்கை என்பது நீங்கள் பழக்கப்படுத்திய ஒரு காட்டுயிர். எவ்வளவு தூரம் விழிப்புணர்வுடன் அதை நீங்கள் பாதுகாக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் அது உங்களுக்கு உதவும். சற்றே கண் அசந்தால், அது உங்கள் கழுத்தைப் பதம் பார்த்துவிடும்”.
எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!