

உலகெங்கும் அமைப்புசார் தொழிலாளர் நிலையே மிகவும் மோசமாக இருக்கும்போது அமைப்புசாராத் தொழிலாளர்களின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். அதுவும் அந்தத் தொழிலாளர்கள் பெண்களாக இருந்தால் இன்னும் கொடுமை. சமூகத்தின் அனைத்து முனைகளிலிருந்தும் தாக்குதலையும் சுரண்டலையும் அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். இத்துடன் குடும்பத்தையும் சேர்ந்து சுமக்க வேண்டிய நிலை. சமீப காலமாகத்தான் இந்த மாதிரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கங்களை உலகெங்கும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு ‘தி கார்டியன்’ இதழ் ஒரு வணக்கம் செலுத்தியிருக்கிறது. அந்தப் புகைப்படத் தொகுப்பு இங்கே:
கானா நாட்டின் தலைநகர் அக்ரா
தலைச் சுமை தூக்கும் தொழிலாளருக்கு கானாவில் கயயேயி என்று பெயர். கானாவைச் சேர்ந்த டயானா ஆட்டூ தலைச்சுமையாக மீன்களைத் தூக்கிக்கொண்டு ஒரு சந்தையில் மீன் விற்கிறார். அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களுடன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இதுபோன்ற பணியாளர்களுக்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, மருத்துவ உதவிகள், ஆயுள் காப்பீடு போன்ற வசதிகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.
பெரு நாட்டின் தலைநகரான லிமா
லுஸ்மிலா எல்பா ரோஹாஸ் மொராலீஸ் ஒரு தொழிற்சங்கத்தின் தலைவர். இந்தத் தொழிற்சங்கத்தில் 150 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். லுஸ்மிலா எப்போதும் கணக்கில் புலி என்றாலும் தற்போது விற்பனை உத்திகளைத் தெரிந்துகொள்வதிலும் கணிப்பொறியைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்
விபூன்ஸ்ரி வோங்சங்கிய்மும் அவரது கணவரும் வீட்டிலேயே ஆடை தயாரிப்பை மேற்கொண்டு பிழைப்பை நடத்துகிறார்கள். ‘ஹோம்னெட் தாய்லாந்து’ என்ற அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
கொலம்பியாவின் தலைநகர் பொகோதா
நோரா பாதியா ஹெரேரா பொகோதாவில் உள்ள ஒரு அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் செயல் இயக்குநர். கொலம்பியாவில் உள்ள குப்பை பொறுக்குபவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்துக்காக நடத்திய 20 ஆண்டுகள் போராட்டத்தின் விளைவுதான் இந்தச் சங்கம். குப்பை பொறுக்குபவர்களின் சம்பளம் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளுக்கு நோரா ஒரு முக்கிய காரணம். குப்பை பொறுக்குபவர்களுக்கான தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராகவும் நோரா இருக்கிறார். தொடர்ந்து அந்தத் தொழிலாளர்களுக்காகப் போராடுகிறார்.
இந்தியாவின் அஹமதாபாத்
கையால் தயாரிக்கப்படும் பெண்களுக்கான கைப்பைகளைத் தயாரிப்பவர் பாவ்னா பென் ரமேஷ். மகளிர் சுயஉதவிக் குழு ஒன்றைச் சேர்ந்தவர் இவர். மகிளா வீட்டுவசதி அறக்கட்டளையின் ஆதரவைப் பெறுபவர் இவர். வீட்டிலிருந்தபடியே எப்படிச் சம்பாதிக்கலாம், தங்கள் தயாரிப்புகளை எங்கெல்லாம் விற்கலாம் என்பதை அந்த அமைப்பு இவரைப் போன்றவர்களுக்குச் சொல்லித்தருகிறது.
- நன்றி ‘தி கார்டியன்’, தமிழில்: ஆசை