

படைப்பிலக்கியத் துறையிலும் நிறைவான பங்களிப்பைச் செய்து, சமூகப் போராளியாகவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்தியாவில் சில ஆளுமைகளே உள்ளனர். அவர்களில் ஒருவர் மகாஸ்வேதா தேவி. பிகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர், தங்களது பூர்வநிலங்களிலேயே அரசு களின் பேராசைக் கொள்கைகளால் அநாதையாக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார். ‘எழுத்து ஒர் ஆயுதம், சவரம் செய்வதற்கானதல்ல” என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய அவரின் சொல்லும், செயலும் வேறு வேறல்ல.
மகாஸ்வேதா தேவி, பிரிவுபடாத வங்காளத்தின் டாக்கா மாநகரில் 1926இல் பிறந்தார். கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களால் நிரம்பிய குடும்பம் அது. அம்மா தாரித்ரி தேவி எழுத்தாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர். அப்பா மனிஷ் கதக் பிரபல வங்காளக் கவிஞர். இவரது அண்ணன்தான் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ரித்விக் கட்டக். மகாஸ்வேதா தேவியின் எழுத்தும், உலகப் பார்வையும், அரசியலும் இந்தப் பின்னணியிலேயே வடிவமைக்கப்பட்டன. ரவீந்தரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகக் கல்வியும் அவரைச் செழுமைப்படுத்தியது. அப்போது விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்கள் தாகூரிடம் நேரடியாகப் பேசி உரையாடும் சூழல் இருந்தது. தாகூர் அம்மாணவர்களை செடி நடவும், குளம் தோண்டும் பணிகளிலும் ஈடுபடுத்தினார். அவரது இயற்கை நேசம்தான், மகாஸ்வேதா தேவி பின்னால் வனங்கள் சார்ந்தும் அங்கு வசிக்கும் மக்கள் சார்ந்து உருவான நேசமாக மாறியது. அங்கிருந்த மக்கள் நாடக இயக்கத்தின் மூலம்தான், வங்காளக் கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை அவருக்குத் தெரியவந்தது. நாடகாசிரியர் பிஜன் பட்டாச்சார்யாவை 1947இல் திருமணம் செய்துகொண்டார்.
1965ஆம் ஆண்டு பிகாரில் உள்ள பலாமு மாவட்டத்திற்கு மகாஸ்வேதா தேவி பயணிக்க நேரிட்டது. ‘பழங்குடி இந்தியாவின்’ முகத்தை அங்கேதான் அவர் முதலில் கண்டார். வாங்கிய கடனுக்காக வாழ்க்கை முழுவதும் விவசாயக் கொத்தடிமைகளாக வாழும் ஏழை மனிதர்களின் நிலை அவரைத் துயரத்துக்குள்ளாக்கியது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பிகாரில் தங்களது பூர்விக நிலத்தின் மீதான உரிமையைக் கோரி பிகாரைச் சேர்ந்த பழங்குடியினர் பிர்சா முண்டா என்பவர் தலைமையில் போராடிய சரித்திரத்தை ‘காட்டில் உரிமை’ என்ற நாவலாக எழுதினார் மகாஸ்வேதா தேவி. இந்த நாவல் அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
நவீன இந்தியாவும், அரசுகளும் மறந்துபோன பழங்குடிகளின் நிலை பற்றி மட்டுமின்றி இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் ஆழ்ந்த கலையம்சம் கொண்ட கதைகளை இவர் எழுதியுள்ளார்.
இந்தியாவே ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ என்று பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சோளிக்குள் தாய்மை இருக்கிறது, சோளிக்குள் தாய்மையும், காலம்காலமான ஆண் ஆதிக்க ஒடுக்குமுறையின் ஒரு சின்னமும் இருக்கின்றன என்பதை உக்கிரமான மொழியில் சொன்ன கதை வரிசை அவருடைய ‘பிரெஸ்ட் ஸ்டோரிஸ்”. இந்தக் கதைகளின் நாயகிகளின் பெயர்கள் யசோதா, திரௌபதி போன்ற புராணப் பெயர்கள். கதைகள் நேரடியான விவரணை மொழியில் இருந்தாலும், பல்வேறு அர்த்த அடுக்குகளைக் கொண்டவை.
1984ஆம் ஆண்டு தனது ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற தேவி, முழுநேர எழுத்தாளராகவும் சமூகப் போராளியாகவும் மாறினார். கல்வி, அடிப்படை ஆரோக்கிய வசதிகள், சாலைகள், வருவாய் இன்றி காடுகளுக்குள் தாழ்ந்த வாழ்க்கை நடத்தும் பழங்குடிகளின் வாழ்க்கையைப் பற்றி செய்திக் கட்டுரைகளை பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கினார். காவல்துறையினர், பண்ணையார்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறைகளை
புகார்களாக எழுதி மாநில அரசுகளின் மனசாட்சியை உலுக்கினார். இந்திய அளவில் அரசின் தாராளவாதக் கொள்கைகளாலும், கார்பரேட் நிறுவனங்களாலும் கையகப்படுத்தப்பட்டு வனப்பகுதிகளும் அங்கு வாழும் பூர்வகுடிமக்களும் சூறையாடப்படுவதை முதலில் மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தவர் அவர்தான்.
“இந்தியா முழுவதும் காடுகள் பரவியிருந்தன. இப்போது பெரும்பகுதி காடுகள் தரிக்கப்பட்டு விட்டன. காடுகளை வெட்டுவதை பழங்குடிகள் எதிர்த்தனர். ஆனால் அவர்களால் ‘நம்மைப் போன்ற’ நாகரிக மனிதர்களை திருத்த முடியவில்லை. இதனால்தான் இந்தியா தற்போது தரிசாகக் காட்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராமில் விவசாய நிலங்களை முறைகேடாக கையகப்படுத்துவதற்கு ஆதரவளித்த மார்க்சிஸ்ட் அரசையும் எதிர்த்துப் போராடி, 30 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த அரசைப் பதவியிறங்க வைத்ததில் மகாஸ்வேதா தேவியின் பங்கு மகத்தானது.
கடந்த 40 ஆண்டுகளில் மகாஸ்வேதா தேவி 100 நாவல்களையும் 20 சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கான பிரச்சினைகள் மற்றும் போராட்டச் செய்திகளை வெளியிடும் போர்டிகா பத்திரிக்கையை தனது தந்தைக்குப் பிறகு நடத்திவருகிறார். நாடோடி பழங்குடி சமூகத்தினர் மற்றும் ‘குற்றப் பழங்குடிகள்’ என வகைப்படுத்தப்பட்டு காவல்துறையினரால் துன்புறுத்தப்படும் மக்களுக்கான புதான் செய்திப் பத்திரிக்கையையும் நடத்திவருகிறார்.
மகசேசே விருது முதல் ஞானபீட விருது வரை பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவருக்கு தற்போது 87 வயது. பேசுவதற்கு மொழியற்று, உரிமைகளற்று, நாதியற்று கோடிக்கணக்கான மக்கள் அல்லல்படும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் மகாஸ்வேதா தேவியைப் போன்றவர்கள்தான் அவர்களின் குரலாகத் தொடர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். வல்லமை மிக்க அரசுகளுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் அவரது மொழி தொடர்ந்து போரிட்டு வருகிறது.