Last Updated : 02 Nov, 2014 02:28 PM

 

Published : 02 Nov 2014 02:28 PM
Last Updated : 02 Nov 2014 02:28 PM

ஒரு ஊர்ல ஒரு ஜோஜோ இருந்துச்சாம்

முந்தைய தலைமுறை அனுபவித்து, இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைக்காத விஷயங்களில் கதை கேட்பதும் ஒன்று. தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்டு வளர்ந்த பெற்றோர்கள்கூட இன்று தங்கள் குழந்தைகளுக்கு அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்களா என்பது சந்தேகமே. ஆனால் தன் வீட்டைச் சுற்றியுள்ள குழந்தைகள் அனைவரையும் கதைகளால் கட்டிப்போட்டிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரஜினி பெத்துராஜா.

எழுத்தாளரான இவர் எழுதியுள்ள 14 புத்தகங்களில் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் அதிகம். கதைப் புத்தகங்களை வாசிக்கும் வசதியும் வாய்ப்பும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்காது என்பதால் தன் வீட்டைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்குக் கதை சொல்வது, அவர்களுடன் கலந்துரையாடுவது என்று தன் ஓய்வு நேரத்தையெல்லாம் குழந்தைகளுடனேயே செலவிடுகிறார்.

ராஜபாளையம் மாடசாமிகோயில் தெருவில் உள்ள ரஜினியின் வீட்டுக்குள் நுழைகிற குழந்தைகள், “இன்னைக்கு கதை சொல்லுவீங்களா ஆன்ட்டி?” என்று உரிமையோடு கேட்கின்றனர். குழந்தைகளின் ஆர்வத்தை இரட்டிப்பாக்கிவிடுகிறது ரஜினியின் ‘ஆமாம்’ என்ற பதில். குட்டிப் பொம்மையை கையில் எடுத்தபடி, ‘ஒரு ஊர்ல ஜோஜோன்னு ஒரு பையன் இருந்தானாம்’ என்று அவர் ஆரம்பிக்க, குழந்தைகள் குதூகலமாகிறார்கள். குட்டி குட்டி பொம்மைகளை எல்லாம் கதாபாத்திரங்களாகக் காட்டி அவர் சொல்ல, அந்தக் கதை உலகத்துக்குள் குழந்தைகளும் பயணமாகிறார்கள்.

இடையிடையே குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக மொட்டை மாடியிலேயே சிறு சிறு விளையாட்டுக்கள். பிஸ்கட் உபசரிப்புக்குப் பிறகு மீண்டும் கதை என்று சுவாரசியமாகக் கழிகின்றன விடுமுறை தினங்கள் அனைத்தும். கதை கேட்கும் பழக்கம் தங்கள் குழந்தைகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

“என் மகள் அஸ்மிதா யூ.கே.ஜி. படிக்கிறாள். நல்ல கதைகளைக் கேட்கிறபோது, குழந்தைகளின் மனதில் நல்ல தாக்கம் ஏற்படும் என்பது என் சொந்த அனுபவம். இந்த பரபரப்பான வாழ்க்கையில் நமக்குக் குழந்தைகளுடன் உட்காரக்கூட நேரமில்லை. பெற்றோருக்கு நேரம் கிடைக்கிற போது, குழந்தைகள் கம்ப்யூட்டர் அல்லது டி.வி. முன்னால் உட்கார்ந்துவிடுகிறார்கள். பொம்மையைக் காட்டிக் கதை சொல்வதாலோ என்னவோ, என் குழந்தை டி.வி.யை உதறிவிட்டு, ரஜினி மேடம் வீட்டுக்கு ஓடிவிடுகிறாள். அவளிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் கவனிக்கிறேன். எந்தக் கட்டணமும் வாங்காமல் இதைச் செய்கிற ரஜினி மேடத்துக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கோம்” என்கிறார் சுபா விக்னேஷ்.

சிறு வயதில் தன் தாத்தா, பாட்டியின் பெட்டிகளைத் துழாவியபோது ரஜினியின் பார்வையில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் சிக்கின. அதில் இருந்து புத்தக வாசிப்பு அவரைத் தொற்றிக்கொண்டது. ஆரம்பத்தில் அண்ணன் ராமகிருஷ்ணராஜா கொடுத்த ஊக்கத்தில் எழுதியிருக்கிறார். தற்போது இவருடைய கணவர் பெத்துராஜாவின் உற்சாகப்படுத்துதலில் தொடர்கிறது ரஜினியின் எழுத்துப் பயணம்.

“கதை சொல்வது குழந்தைகளுக்கு மட்டும் பயன்கொடுப்பதாக நான் நினைக்கவில்லை. எப்படி எழுதினால் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்று நான் உணர்ந்துகொள்ளவும் உதவுகிறது. அதனால்தான் எந்த ஊருக்குப் போனாலும், கதை சொல்வதற்காகவே குட்டிக் குட்டியாய் மரப்பாச்சி பொம்மைகளை வாங்குகிறேன். இறைவன் அனுமதிக்கும் வரையில் இந்த கதைசொல்லும் வழக்கத்தை நிறுத்தக் கூடாது என்பது என் ஆசை” என்கிறார் ரஜினி. புதுப்புதுக் கதைகளுடன் அவருடைய வீட்டில் கொலுவீற்றிருக்கின்றன பொம்மைகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x