ஆண்கள் சூழ் உலகு

ஆண்கள் சூழ் உலகு
Updated on
2 min read

இன்று லேடீஸ் ஸ்பெஷல் டிரெயினில் வந்தேன். அதில் ஏறி அமர்ந்ததுமே ஒருவித ஆசுவாசமும், இது எங்கள் ராஜ்ஜியம் என்ற நினைப்பும் மனதை நிறைத்தது என்று நண்பரிடம் சொன்னேன். ‘இது உண்மையான ஆசுவாசம்தானா? ஆண்கள் நிறைந்திருக்கும் ரயில் பெட்டியிலும், ஏன் உங்களால் ஆசுவாசமாக உணர முடியவில்லை?’ என்று கேட்டார் அந்த நண்பர்.

இது பெண்கள் அனைவருக்குமான கேள்வியா இல்லை, இந்தச் சமூகத்துக்கான கேள்வியா? தங்களுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான் பெண்களால் இயல்பாக இருக்க முடிகிறதா? அங்கே மட்டும்தான் அவர்களால் சுதந்திரமாக எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கவோ, இருக்கவோ முடிகிறதா? அவள் அவளாகவே இருக்கும் தருணங்களுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறதா?

தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி போல வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பெண்களைப் பல கண்கள் கண்காணித்துக்கொண்டும், துளைத்துக்கொண்டும்தான் இருக்கின்றன.

மாநகரப் பேருந்தில் ஆணைப் போல இன்னொரு மனித ஜீவனாகத்தான் நின்றுகொண்டிருக்கிறாள் அவள். ஆணின் விரல்கள் பெண் உடலைக் குறிவைத்துத் தீக்கோடுகளை இழுக்கின்றன. அவளது முதுகின் மீது படர்வதும் எல்லை மீறுவதும் ஆண் விரல்களுக்கு இயல்பாகிவிட்டது. உடம்பின் ஒவ்வோர் அணுவும் கூசிப்போகும் அந்தத் தருணங்களில், எப்படி எதிர்வினையாற்றுவது என்றுகூடத் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து நிற்கிறாள் அவள்.

தனக்கு என்ன நடக்கிறது என்று உணரவே முடியாத சின்னஞ்சிறு குழந்தைகளைக்கூட விட்டுவைப்பதில்லை இந்தக் கரங்கள். பள்ளிச் சிறுமி ஒருத்தியை ஆட்டோவில் இருந்து இறக்கிவிடும் சாக்கில், அவள் அங்கம் முழுவதும் தடவிய ஆணின் கரங்களை என்ன செய்வது? அந்தச் செய்கையால் சட்டென முகம் சுருங்கி வேகமாகப் பள்ளிக்குள் நுழைந்த அந்தச் சிறுமி என்ன செய்திருப்பாள்? பாடத்தில் அவள் மனம் லயித்திருக்குமா? தனக்கு நேர்ந்ததைத் தன் தோழிகளிடம் சொல்லியிருப்பாளா? மாலை பள்ளி முடிந்ததும் அம்மாவிடம் சொல்லியிருப்பாளா? இல்லை உள்ளுக்குள்ளேயே அந்த வலியை மறைத்து, ஆண் என்றாலே வெறுத்து ஒதுங்கத் தொடங்கியிருப்பாளா? பால்யத்தில் பாலியல் தொந்தரவைச் சந்திக்காத பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டுச் சொல்லிவிட முடியும் என்ற நிலைதானே உள்ளது?

வாகனங்கள் நிறைந்த சாலைகள்கூடப் பெண்களுக்குப் போர்க்களம்தான். எந்தப் பக்கம் இருந்து குண்டு பாயுமோ, எந்தப் பாதையில் கண்ணிவெடி புதைந்திருக்குமோ என்ற எல்லைக் காவல் வீரனின் மனநிலையோடுதான் அவள் நடந்து செல்கிறாள். எதிரே நடந்து வருகிறவன் நம்மை இலக்காக்கி வருகிறானா என்ற கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாலும் பின்னால் இருந்து வருகிறவன் இடித்து விட்டுச் செல்கிறான். இருசக்கர வாகனத்தில் வேகமாக வரும் கூட்டம் ஒன்று அவளுடைய துப்பட்டாவைப் பறித்துச் செல்கிறது.

நான்கு முனைச் சந்திப்பு ஒன்றில் வாகனங்கள் காத்திருக்க, சாலை கடந்த ஒரு பெண்ணின் தொடையைத் தட்டிவிட்டு எதுவுமே நடக்காதது போலச் செல்கிறான் ஒருவன். அங்கே நின்றிருந்த போக்குவரத்துக் காவலர், அதையும் ஒரு சம்பவமாகவே பார்த்துக்கொண்டு நின்றிருப்பதைக் காண நேரிட்டது. அவரது கண்களில் தெரிந்தது என்ன? எதிர்வினையாற்றாத அவரது அமைதி என்ன சொல்கிறது? பெண்ணுடலை இம்சிப்பது ஆணின் உரிமை என்பதையா? இது சகஜம்தானே என்ற மரத்துப்போன மனநிலையையா? போக்குவரத்து சிக்னல் பச்சைக்கு மாற, அடுத்து என்ன செய்வது என்பதறியாது அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் அந்தப் பெண்ணைப் புறக்கணித்துவிட்டு, பெரும் சத்தங்களோடு விரைந்து செல்கின்றன வாகனங்கள்.

கல்லூரி செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள் ஒரு பெண். பேருந்தை முந்திக்கொண்டு வருகிறான் அவன். அவள் நின்று நிதானிக்கும் முன், அவளது முகத்தில் அமிலம் ஊற்றுகிறான். வலியில் துடித்துச் சரிகிறாள் அந்தப் பெண். சக மனிதர்கள் அனைவரும் பேருந்தில் இடம்பிடிக்க ஓடுகின்றனர்.

இன்னொரு பெண், தன் பணியிடத்தில் கடமையே கண்ணாக நகல் எடுத்துக்கொண்டிருக்கிறாள். நிழலாய் அவள் முன் நீள்கிறது ஒரு கை. அது யாரென அவதானிப்பதற்குள் அமிலச்சூட்டில் இளகி வழிகிறது அவளது முகமும் சதையும். இரண்டொரு நாளில் அவள் இறந்தும்விடுகிறாள். கதறியழுதுவிட்டு அடுத்த சம்பவத்துக்குக் கருத்துத் தெரிவிக்கத் தயாராகிவிடுகிறது இந்தச் சமூகம்.

வேட்டி கட்டிய ஆடவன், பேண்ட், சட்டைக்குள் புகுந்ததை மிக இயல்பான மாற்றமாக ஏற்றுக்கொண்ட கலாச்சாரக் காவலர்கள், புடவை கட்டியவள் ஜீன்ஸுக்குள் புகுந்தால் மட்டும் புருவம் உயர்த்துகிறார்கள். அவளது உடையணியும் பாங்கும், உடலமைப்பும் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. ஓடிவந்து பேருந்துக்குள் ஏறும் ஆணைக் கண்டுகொள்ளாத கூட்டம், டைட்ஸ் அணிந்து உட்கார்ந்திருக்கிறவளைப் பார்வையால் கூறு போடுகிறது. கூடவே அவளது நடத்தையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முதுகுக்குப் பின்னால் எழுகிற கேலியையும் கிண்டலையும் சகித்துக்கொண்டே அன்றைய நாள் கழிகிறது அவளுக்கு.

சரி, இதைப் புறக்கணித்து வேறு வேலை பார்க்கலாம் என்றால் வேலையிலும் தொடர்கிறது குறுக்கீடு. சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் இடத்தில் இருக்கிறவளையும் கொன்று குவித்துவிடும் வன்முறை ஆயுதம் எல்லா இடங்களிலும் மலிந்து கிடக்கிறது.

வேலை முடிந்து வீடு நோக்கிச் சென்றவள், வன்முறை கும்பலிடம் சிக்கிக் கொள்கிறாள். உடலும் மனமும் உடைந்து போய் பாதிப்புள்ளாகும் அவளேதான் குற்றவாளிக் கூண்டிலும் நிறுத்தப்படுகிறாள். தன்னைச் சுற்றியிருக்கிறவர்களின் பார்வையை ஈர்க்கும் அளவுக்கு அவள் உடையணிந்தது தவறு என மெத்தப் படித்தவர்கள் கருத்துச் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாக்கும் வித்தை இந்த இடத்தில்தான் அருமையாகச் செல்லுபடியாகும்.

கல்லூரிகளில் உடைக் கட்டுப்பாடு குறித்து கருத்தரங்குகள் நடக்கும். நீதிபதிகளும் காவல் துறை அதிகாரிகளும்கூடப் பெண்களைக் கண்ணியமாக உடையணியச் சொல்லிக் கருத்துச் சொல்லலாம். இதை ஆதரித்தோ, எதிர்ப்புத் தெரிவித்தோ கூட்டங்களும் ஊர்வலங்களும் நடக்கும். ஊர்வலம் நடக்கும் இடத்துக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு பெண் துன்புறுத்தப்படுவாள். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, சமையலறைக்குள்ளோ குளியலறைக்குள்ளோ புகுந்து சத்தமில்லாமல் விசும்பிவிட்டு, அடுத்த நாளின் போராட்டத்துக்குத் தயாராகிறாள் பெண்.

இப்போது சொல்லுங்கள் நண்பரே, ஆண்கள் நிறைந்திருக்கும் ரயில் பெட்டியிலும் எங்களால் ஆசுவாசமாக உணர முடியுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in