முகங்கள்: தோல்வியால் ஜெயித்தவர்கள்!

முகங்கள்: தோல்வியால் ஜெயித்தவர்கள்!
Updated on
1 min read

அரைக்காசு என்றாலும் அரசாங்கக் காசாக இருக்க வேண்டும் என்பது இன்று பலரது கனவாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதையேதான் உணர்த்துகிறது.

அந்தக் காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தால், தகுதியுடன் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைத்தது. ஆனால் தற்போது அனைத்துப் பணிகளுக்கும் ஆட்கள் அப்படி தேர்வுசெய்யப்படுவதில்லை. பல பணிகளுக்குப் போட்டித் தேர்வு கட்டாயமாகிவிட்டது. ஒவ்வொரு போட்டித் தேர்விலும் லட்சக் கணக்கானவர்கள் பங்கேற்றாலும் வெற்றி பெறுவது சொச்சம் பேர்தான். தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வு இல்லாததும் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது. அரசாங்கப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களில் 70 சதவீதம் பேர் தேர்வு குறித்தப் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தேர்வு எழுதுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தேர்வில் தோற்றுப்போனவர்கள் என்ன செய்வார்கள்? தேர்வு எழுதியது போதும் என துவண்டு போய் ஒதுங்கிவிடுவார்கள் அல்லது வேறு வேலைகளுக்கு முயற்சிப்பார்கள். ஆனால் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தோல்வியடைந்த தோழிகள் ஐவர், தங்களால் வெற்றிபெற முடியாத ஐஏஎஸ் தேர்வில் மற்றவர்கள் வெற்றிபெற வழிகாட்டி வருகின்றனர்.

மதுரையில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்திவரும் தோழிகளில் ஒருவரான சத்யபிரியா தவமுருகன், “நாலு வருஷத்துக்கு முன்னால நானும் எனது தோழிகள் நான்கு பேரும் சேர்ந்து ஐஏஎஸ் தேர்வு எழுதத் திட்டமிட்டு, ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தோம். நன்றாகப் படித்தும் எங்களால் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் இந்தத் தோல்வினு எங்களுக்குப் புரிந்தது. தவிர சில பயிற்சி மையங்கள் வணிக நோக்கில் செயல்படுவதும், சொந்த முயற்சியில் வெற்றிபெறுபவர்களைக்கூட தங்களால்தான் வெற்றி கிடைத்தது என்று விளம்பரம் செய்து பணம் பார்ப்பதும் தெரிந்தது” என்று சொல்கிறார்.

“ஐஏஎஸ் தேர்வைப் பொறுத்தவரை பள்ளிப் பருவத்தில் ஒருவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினால் ஒருவரால் 25 வயதுக்குள் தேர்ச்சி பெறமுடியும். தேர்வில் பங்கேற்போரின் எண்ணிக்கையைப் பொறுத்து கேள்விகளைக் கடுமையாக்குகின்றனர். புரிந்து படிப்பது அவசியம். ஒரு வினாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிலளிக்கும் ஆற்றல் பெற வேண்டும்” என்று தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளும் முறைகளைச் சொல்கிறார் சத்யபிரியா.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற குறைந்தது ஓராண்டு பயிற்சி அவசியம் என்று குறிப்பிடும் அவர், குறுகிய காலத்தில் வெற்றிபெற நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். தங்கள் பயிற்சி மையம் மூலம் பள்ளி அளவில் ஆட்சிப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிராமப்புற மாணவர்களுக்கு உதவவும் திட்டமிட்டிருக்கிறார்கள் இந்தத் தோழிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in