

இந்திய அரசியலில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியலில் மட்டுமல்ல வாக்காளர்கள் விஷயத்திலும் இந்தப் பாரபட்சம் காணப்படுகிறது என்பதே யதார்த்தம். எவ்வளவு பெண்கள் வாக்களிக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புவதற்கு முன்னர் எவ்வளவு பெண்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுகிறார்கள் எனக் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. இதற்கு நமக்குக் கிடைக்கும் பதிலோ உவப்புக்குரியதாக இல்லை.
இந்திய வாக்காளர் பட்டியலில் பெண்களின் விகிதம் 1971-ல் இருந்த நிலையிலேயே இன்றும் உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயது வரையிலான இளம்பெண்கள் இடம்பெறுவதில் சுணக்கம் காணப்படுகிறது. 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 16-17 வயதில் இருந்த இளம்பெண்களின் எண்ணிக்கை 4.58 கோடி. இவர்களுக்கு இப்போது வாக்களிக்கும் வயது வந்திருக்கும். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
கடந்த பிப்ரவரி 14 வரையான காலப் பகுதியில் 18-19 வயது வந்தவர்களில் 2.3 கோடிப் பேர் மட்டுமே வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 44.14 சதவிகிதத்தினர் மட்டுமே பெண்கள். அதாவது சுமார் ஒரு கோடிப் பேர். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் நான்கு கோடி பெண்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணிக்கை கைகூடிவரவில்லை.
இந்தியச் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையே இந்த நிலைமைக்குக் காரணம். வாக்காளர்களாக ஆண்களைப் பதிவுசெய்வதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்கள் விஷயத்தில் குடும்பத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் எழுத்தறிவு மேம்பட்டிருப்பதாலும் அரசின் அக்கறையாலும் அரசு சாரா நிறுவனங்களாலும் அரசியல் கட்சிகளாலும் முன்னைவிட அதிகமானோர் தொடர்ந்து வாக்களித்துவருகிறார்கள் என்பதே ஆறுதலான செய்தி. கிராமப்புறப் பெண்கள் தங்களது வாக்குரிமை குறித்த விழிப்புணர்வைப் பெறாமல் உள்ளனர் அல்லது முதியவர்கள் வாக்களிக்கத் தடைசெய்கின்றனர்.
ஹரியானாவில் வாக்காளர் பட்டியலில் பெண்களின் பெயர்களைச் சேர்ப்பது மிகவும் மந்தமான நிலையில் உள்ளது. இங்கு பெண்களின் சதவிகிதம் வெறும் 28.3 மட்டுமே. மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், சண்டீகர் போன்றவையும் இவ்விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கேரளாவில் நிலைமை நன்றாக உள்ளது. இங்குள்ள மொத்த வாக்காளர்களில் 52 சதவிகிதத்தினர் பெண்களே. தமிழ்நாட்டிலும் ஆண், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சமநிலையிலேயே உள்ளது.