

துணைக்கு யாரும் இல்லாத நிலையிலும் ஒருவர் கற்றுவைத்திருக்கும் கைத்தொழில் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் கைவினைக் கலைஞர் ரமணி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் வசித்துவரும் பகுதியில் அனைவருக்கும் அறிமுகமானவர் ரமணி. “சிறுவயதில் இருந்தே எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படிச்சிருக்கேன். அப்புறம் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து கைவினைப் பொருட்கள் செய்வதற்கான படிப்பைப் படிச்சேன். ஆனால் அங்கே நான் கத்துக்கிட்டதை எங்கும் செய்து பார்த்தது கிடையாது” என்று சொல்லும் ரமணியை அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பமே கைவினைக் கலைஞராக மாற்றியது.
தன் அம்மாவுக்குத் துணையாக இருந்தபோதுதான் கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்யத் தொடங்கினார். மற்றவர்களைச் சார்ந்து ஒரு வேலையைச் செய்வதைவிட நாமே ஒரு தொழில் தொடங்கினால் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்பது ரமணியின் கொள்கை.
கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ரமணி தற்போது அரசு உதவியுடன் சிறிய கடையை நடத்திவருகிறார். செயற்கைப் பூச்சுகளைத் தவிர்த்து சூழலுக்கு உகந்த வகையில் கம்பி பொம்மைகளை வடிவமைப்பது இவரது சிறப்பு. நடனமாடும் மங்கை, பல்வேறு மாநில திருமணச் சடங்குகளை வெளிப்படுத்தும் பொம்மைகள், கலம்காரி எனப்படும் காய்கறி வண்ணங்களால் செய்யப்பட்ட நகைப் பெட்டிகள் ஆகியவை இவரின் கைவண்ணத்தில் தனிச்சிறப்போடு கவர்கின்றன.
“திருமணத்தின் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தரப்படும் தாம்பூலம், பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக நான் செய்யும் பொம்மைகளைப் பலர் நினைவுப் பொருளாகத் தருகின்றனர். அரசின் கைவினை அபிவிருத்தி மையத்தினரின் உதவியினால் அரசு சார்ந்த கண்காட்சிகளில் கலந்துகொண்டு பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. யாரையும் சாராமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் எனக்கு எப்போதும் துணையாக இருப்பது இந்தக் கைவினைத் தொழில்தான்” என நெகிழ்கிறார் ரமணி.