

1970-களின் பிற்பகுதி. ஒரு பெண் இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டு போனால், அந்தச் சாலை முழுவதும் ஏற்பட்ட பரபரப்பு இருக்கிறதே… கண்கொள்ளாக் காட்சி! அதே சாலையில், பக்கத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் வேகமாகத் திரும்புவார்கள்; வீடுகளிலோ கடைகளிலோ நிற்பவர்கள் நிதானித்து நோக்குவார்கள்; சிக்னல்களில் அனைத்துப் பார்வைகளும் அவளையே அளக்கும். சில சமயம் சக வாகன ஓட்டிகள், ஒரு பெண் தங்களுக்குச் சமமாகச் செல்வதா என்னும் ஆதங்கத்தில், பாய்ந்து ஓவர்டேக் செய்வார்கள்.
1980-களின் முற்பகுதி. அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்தாலும், தான் சொல்வது நியாயமாகவே இருந்தாலும், கீழ் அடுக்கில் உள்ளவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கும்போது, அந்தப் பெண்ணும் அவளின் அலுவலகமும் பட்ட பாடு இருக்கிறதே அது கருத்துக் கொள்ளாக் காட்சி! அவளின் சின்னஞ்சிறு சொல்லுக்குக்கூட அலுவலகம் தவிக்கும், தத்தளிக்கும். அவள் சொல்வது சரிதான். இருந்தாலும் பெண்ணாயிற்றே, அவள் சொல்லிக் கேட்பதா என்னும் தயக்கம் அலுவலகம் முழுவதும் மூட்டமிடும். அப்படியும், வேலை நிமித்தமாக வேறு வழியின்றி அவள் கோபப்பட்டாலோ, கடிந்துகொண்டாலோ அவள் நடத்தையைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் அவதூறு மழை பொழியும். திருமணமாகாதவள் என்றால், அவளுக்கு மணமகன் கிடைக்காததற்கான காரணங்கள் அலசப்படும்.
தடைபோட்ட தயக்கம்
1980- களின் பிற்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண் பிரபலங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தாலும், பொது வாழ்க்கை நிலைகளிலும் பணிகளிலும் ஈடுபடுவதற்குப் பெண்களிடம் காணப்பட்ட ஏகோபித்த தயக்கம் இருக்கிறதே அது குவலயம் கொள்ளாக் காட்சி! அரசியல், சமூகம் சார்ந்த பொதுப் பணிகள் மட்டுமில்லை, அலுவலகம், குடியிருப்பு போன்ற சிறிய இடங்களின் பொது நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கும் பெண்களிடம் தயக்கமிருந்தது. மேடைகளிலோ பொது நிகழ்வுகளிலோ பங்கேற்கும் பெண்களின் கணவன்மார்களும் புகுந்த வீட்டாரும் தலைமுறைத் தியாகிகளாக நோக்கப்பட்டார்கள்.
1990-களின் முற்பகுதியில் தங்களிடம் ஆயிரமாயிரம் திறமைகள் இருந்தாலும், அவற்றைப் பிறர் காணும்படியாக வெளிப்படுத்துவதில் பெண்களுக்கு இருந்த ஒருவிதமான ஆட்சேபம் இருந்ததே அது நெஞ்சம் கனக்கும் நிஜம்! பெரியதோ சிறியதோ, திறமை திறமைதானே என்றாலும் கேட்க மாட்டார்கள். தங்களுக்குப் பிடித்த ஒன்றைச் செய்வதற்கும் கற்பதற்கும்கூடத் தயக்கம். அதுவும் கல்யாணக் காலம் என்றால் அவ்வளவுதான். திருமணச் சந்தையின் தள்ளுபடி ஆஃபர்களில் திறமைகளுக்குத்தாம் முதல் வெட்டு.
அடக்குமுறைகளின் வெளிப்பாடு
1990-களின் பிற்பகுதியில் கல்வி, தொழில், அந்தஸ்து, பணி, பதவி, வருமானம் என்று எதில் உயர்நிலை வகித்தாலும் காலையில் காபி போடுவது முதல் இரவில் வெளிக்கதவைப் பூட்டுவது வரை அவளேதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவலம் இருக்கிறதே அது உள்ளத்தை உருக்கிய உண்மை! அன்றைய பொழுதின் அவசர ஓட்டங்களில், ஒன்றை அவள் மறந்துவிட்டால், அதற்கு வைக்கப்பட்ட பெயர் ‘மினுக்கு’. உடல் உபாதைகளின் இம்சையில், சற்றே கால்நீட்டி ஓய்வெடுத்தால், அது ‘சொகுசு’. வேலைக்குச் செல்பவள், அரை மணிநேரம் சோபாவில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டால், அது ‘சம்பாதிக்கிற திமிர்’.
இல்லத் தரசியாக மட்டும் ஒருத்தி இருந்தால், ‘என்ன பெரிதாகக் கிழித்துவிட்டாள், சமைக்கிறதும் துவைக்கிறதும் கம்ப சூத்திரமா?’ என்பார்கள். பணிக்குப் போகும் பெண், அன்றைய அவசரத்தில் பொரியல் மட்டும் செய்துவிட்டு, கூட்டு வைக்காமல் போய்விட்டால், அவளையே அவியலும் துவையலும் ஆக்கிவிடுவார்கள்.
இவையெல்லாம் காரணமின்றித் தோன்றிய தடுமாற்றங்கள் இல்லை; ஆண்டாண்டு கால அடக்குமுறையால் உண்டான உணர்வுக் குழப்பங்கள். குறிப்பிட்ட செயல்களைச் செய்யவில்லையென்றாலோ, குறிப்பிட்ட வகையில் தான் நடந்துகொள்ளவில்லை என்றாலோ தன்னைப் ‘பெண்’ என்றே அங்கீகரிக்க மாட்டார்களோ என்று பெண்கள் அச்சப்பட்ட காலங்கள் அவை.
அடக்குமுறையாலும் ஒடுக்குமுறையாலும் பெண்களிடம் சில தன்மைகள் தோன்றியிருந்தன. பிறர் தன்னை அங்கீகரிக்க வேண்டும், அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும், அப்படிப் பாராட்டப்பட்டால் மட்டுமே தன்னுடைய நடவடிக்கைகள் சரியானவை, எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும், கணவனுக்கு ஏதேனும் பணியிட்டால் அது மதர்ப்பின் அடையாளம், சமையலறையிலும் வீட்டு வேலைகளிலும் கணவன் உதவினால் தன்னை இளக்காரமாகக் காண்பார்கள் என்பன போன்ற எண்ணங்கள், ஏராளமான பெண்களின் உள்ளங்களைச் சல்லடையிட்டன.
மாற்றத்தை நோக்கி
தற்போது காலம் மாறியிருக்கிறது; பெண்களும் மாறியிருக்கிறார்கள்! திக்குமுக்காடும் வாகன நெரிசலிலும் அசராமல் சீறிப் பாயும் டூ வீலர் நங்கை. பள்ளிக்கூடப் பைகளை முன்னும் பின்னும் மாட்டிக்கொண்டு, மகனை முன்னால் நிறுத்தி, மகளைப் பின் இருக்கையில் அமர்த்திப் பள்ளியில் விட்டுத் திரும்புகிற வழியில் மளிகைப் பொருட்களை வாங்கி வரும் ஸ்கூட்டர் இல்லத்தரசி. எதிரில் இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் கண்ணுக்குக் கண் பார்த்து நிதானமான குரலில் கண்டிப்புச் சொற்களால் கட்டளையிடும் அலுவல் அணங்கு. உயர்மட்டக் கூட்டங்களில் தன் கருத்தை அமைதியாகவும் ஆணித்தரமாகவும் வெளியிடும் ஞானச் செருக்கின் நேரிளம் பெண். உலக உருண்டையைத் தன்னுடைய திறமையால் கட்டினாலும் அடுத்த நிமிடமே அதை
விடுத்து, சர்வ சாதாரணமாகத் தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பக்குவப் பெண்மணி.
தங்களைத் தாங்களே உணர்ந்து, தத்தம் நிறைகுறைகளைத் தெரிந்து, மனசாட்சியின் வழிகாட்டலில் மகிழ்ந்து நடக்கின்றனர் மகளிர். பெண்ணுக்குள் பெண்மை உண்டு, பெண்ணுக்குள் குழந்தைத்தனம் உண்டு, பெண்ணுக்குள் தாய்மை உண்டு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்ணுக்குள் மனம் உண்டு என்பதைப் பெண் உணர்ந்துவிட்டாள். அவள் மாறுகிறாள், மாறுவாள், மாற்றங்களைக் கொணர்வாள்.
கட்டுரையாளர்: எழுத்தாளர், பேச்சாளர்.
தொடர்புக்கு: sesh2525@gmail.com