

ஆண்கள் எதிர்பார்ப்பதை நிறை வேற்றுவதே தங்கள் வாழ்க்கை என்று அறிவுறுத்தப்பட்டு, அதன் படியே வாழ்ந்துள்ளனர் முந்தைய தலை முறை வரையிலான பெண்கள்.
‘அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்குச் சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா!’
என்கிறது திரைப்பட பாடல். ஆணாதிக்க உலகில், பெண் என்றாலே ‘அழகு’என்ற சொல்லும் கூடவே எதிரொலிக்கிறது. ஆண்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண்களிடம் எதிர்பார்ப்பது ‘அழகு’தான். நம் மண்ணில் அழகின்மையால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். பண்டைய இலக்கியங்களிலிருந்து இன்றைய விளம்பரங்கள்வரை, பெண்களின் அழகைக் கொண்டாடுவதையே தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கின்றன.
அழகில் ஏன் அக்கறை?
பெண்களும் தாங்கள் அழகாக இருப்பதில் பெருமிதமும் அக்கறையும் கொள்கின்றனர். தங்கள் அழகைப் பேணிக் காப்பதிலும், தங்களை அழகுடையவர்களாகக் காட்டிக்கொள்வதிலும் தங்கள் நேரத்தையும் பொருளையும் செலவழிக்கின்றனர். கார் மேகக் கூந்தல், மீன் கண்கள், எள்பூ நாசி, முத்துப் பற்கள், சங்குக் கழுத்து என்று தொடங்கி, கூந்தல் முதல் பாதம்வரை அங்குலம் அங்குலமாகப் பெண்களின் உடல் இலக்கியங்களில் வர்ணிக்கப்படுகிறது. சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களின் தோற்றப் பொலிவைக் கொண்டு, பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று வகைப்படுத்திப் பார்க்கப்படுகின்றனர்.
ஊடகங்களிலும் பெண்களின் அழகு முதன்மைப்படுத்தப்படுகிறது. பெண்கள் தங்கள் அழகின் காரணமாக வியாபார உலகில் காட்சிப் பொருளாக, நுகர்பொருளாக, சந்தைப் பொருளாக ஆக்கப்படுவதைப் புரிந்துகொள்ள வேண்டும். அழகுக் கருத்தாக்கத்தில் நிறம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. கறுப்புஒதுக்கப்படுகிறது. கறுப்பு நிறத்தை வெள்ளையாக்குகிறோம் என்ற அறிவிப்போடு ஏராளமான அழகுப் பொருட்கள் சந்தையில் கடைவிரிக்கப்படுகின்றன.
அடிமைகளல்ல பெண்கள்
உலகமயமாக்கலில், அழகுப் பொருட்கள் துறை புயல் வேகம் கண்டுள்ளது. 1990களில் 2311 கோடியாக இருந்த இந்தத் துறையின் வியாபார மதிப்பு பத்தே ஆண்டுகளில் 18,950 கோடியாக உயர்ந்து இன்று அதன் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அழகு சாதனப் பொருட்கள் துறையில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான வளர்ச்சி, பெண்களைச் சந்தைப் பொருளாக்கிப் பார்ப்பதிலும் அதிவேகம் கண்டுள்ளது. மேற்கத்திய நுகர்வோரியம், இன்று இந்தியக் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துவிட்டது. பெண்களை அழகுப் பொருளாக்கி ரசிக்கும் இந்தக் கலாச்சாரம் ஏற்கெனவே இருந்துவரும் ஆணாதிக்க மதிப்பீடுகளைப் பலப்படுத்துகின்றன. பெண் களைச் சந்தைப்படுத்துவதன் மூலம்,அவர்கள் மேலும் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அழகு சாதனப் பொருட்களுக்கு முடிச்சூட்டு விழாவாக ‘அழகிப் போட்டிகள்’ திகழ்கின்றன. அழகிப் போட்டிகளின் மூலம் பெண்கள் காட்சிப் பொருளாக்கப் படுகின்றனர். இந்தப் போட்டிகள் உலக அழகிப் போட்டி, பிரபஞ்ச அழகிப் போட்டி என்று பிரம்மாண்டமாக நடத்தப்படுவதுடன் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நடத்தப்படுகின்றன. பெரிய வணிக நிறுவனங்கள் அழகிப் போட்டிகள் மூலம், தமது பொருட்களை விளம்பரம் செய்து லாபம் ஈட்டுகின்றன. முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கியுள்ளது அழகு மட்டுமல்ல; பெண்களின் உலகமும்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்கள், தங்கள் அறிவாற்றலால் ஆணுலகைத் திகைக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனைச் சந்தையின் மூலமாகத் தாங்கள் குறி வைத்துத் தாக்கப்படுவதை உணர வேண்டும். அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்தைப் புரிந்துகொண்டு, அந்த மாயையிலிருந்து விடுபட வேண்டும். நாம் எதற்கும் அடிமைகளாக இருக்க வேண்டாம், ஆளுமைகளாக உருவாவோம்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com