

சிறு வயதிலிருந்தே எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் உண்டு. படிக்கும் காலத்தில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியிருக்கிறேன். கல்லூரிக் காலம் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. விருப்பமில்லாத பாடத்தைப் படித்ததால் எழுத்தைக் கைவிட்டிருந்தேன். இலக்கியம் வாசிப்பேன். அதன் பிறகு திருமணம், குழந்தைகள், ஆசிரியப் பணி என்று ஏறத்தாழ பதினாறு ஆண்டுகள் எழுதுவதையே மறந்திருந்தேன்.
நான்காண்டுகளுக்கு முன் என் பணி வாழ்க்கையில் எனக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாய்ப்பு அநியாயமாக என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன் மூலம் நான் அடைந்திருக்க வேண்டிய பதவியைப் பெற இன்னும் பத்தாண்டுகள் ஆகும். அதிகாரிகளின் அலட்சியத்தினால் என் வாய்ப்பு நழுவியது. மனம் வேதனையில் சோர்ந்திருந்தது.
நான் சோர்ந்த நேரங்களி லெல்லாம் தன் புன்னகையால் என்னை உயிர்ப்பிக்கும் பேரன்பு கணவர் தமிழ்மாறன், அந்த நேரத்தில் என்னை மீண்டும் எழுதச் சொன்னார். நம் மனதுக்காக மட்டுமே எழுதினால் அதில் உண்மையிருக்கும், நிச்சயம் அதற்குரிய இடம் கிடைக்கும் என்றார். இணையத்தைப் பயன்படுத்தி எப்படி எழுதுவது என்று வழி காட்டினார். இலக்கிய வாசிப்புடன் எழுதவும் தொடங்கினேன். இணைய இதழ்களுக்கு என் படைப்புகளை அனுப்பினார்.
இளம் வயதிலேயே வாழ்வில் இணைந்ததால் எங்கள் இருவரின் புரிதல்களும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தன. நான் வாசிக்கும் உலக இலக்கியங்கள், சங்கப் பாடல்கள், வரலாறு என அனைத்தையும் என் கணவருடன் பகிர்வதுண்டு. ஒரு காதலியாக, இளம் மனைவியாக, தாயாக என் எல்லா நிலைகளிலும் நான் அவரிடம் விவாதித்தவற்றையும் பகிர்ந்தவற்றையுமே என் எழுத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ளேன். குடும்பம், பொருளாதாரம், உறவுகள் போன்றவற்றை மீறி மணிக்கணக்கில் இலக்கியத்தையும் வரலாற்றையும் தத்துவங்களையும் இந்திய மெய்யியலையும் நாங்கள் இருவரும் பேசும் பொழுதுகள் காதல் மிகுந்தவை.
என் படைப்புகள் வெளியாகத் தொடங்கின. சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. பணி, குழந்தைகள் என்ற சூழலில் எழுதுவதற்கு நேரமும் ஆர்வமும் அளித்தது கணவர்தான்.
கல்கி குறுநாவல் போட்டியில் என் நாவல் பரிசு பெற்றதையும் மாலன், சிவசங்கரி ஆகியோர் பாராட்டியதையும் பெருமையாக நினைக்கிறேன். அந்த நாவலுக்குப் பெயர் சூட்டி, போட்டிக்கு அனுப்பி வைத்தது என்னவர்தான்.
என்னையும் என் இலக்கியக் கிறுக்குத்தனங்களையும் முழுமையாக நேசித்து, இலக்கியத் தேடல்களைப் புரிந்துகொண்டு, வாசிக்கும் பழக்கமற்ற அவர் என் பொருட்டே புத்தகக் கண்காட்சிகளுக்கும் இலக்கிய அரங்குகளுக்கும் வருகிறார். என் எழுத்துக்கு உதவியாக வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களுக்கும் கோயில்களுக்கும் அழைத்துச் சென்று, என் அறிவுத் தோழனாகவும் வழிநடத்தும் கணவருக்கு நன்றி கூறுவது எனக்கு நானே கூறிக்கொள்வது போன்றதே. என் எழுத்தின் ஆதார சுருதி இவரே!
- மோனிகா மாறன், வேலூர்.
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |