

நம் முடிவை வேறு யாராவது எடுக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது.
முதல் நபர் நம் கூடவே இருப்பவர். நம் முதலீட்டுக்கு உதவி செய்யும் பங்குச் சந்தை தரகர். அவர் தயவோடுதான் நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும். நாம் தெளிவாக ஆலோசித்து தீர்மானமான முடிவை எடுத்து, அவரிடம் முதலீடு செய்யச் சொல்லும்போது அவர், ‘இந்த நிறுவனத்திலேயா முதலீடு செய்யப் போறீங்க?’ என்று முட்டுக் கட்டையைப் போடுவார்.
நாம் இதுதான் சரி என்று ஒரு திசையில் செல்லும்போது, இது சரியானதாக இருக்குமா என்ற சிறு சந்தேகத்தைக் கிளப்பினாலும் நமக்கு மொத்தமும் குழம்பிவிடும். ஆனால், இதற்கு இடம் கொடுக்கக் கூடாது. நாம் முதலீட்டு முடிவுக்கான ஆலோசனைகளைச் செய்யும்போதே தரகர் சொல்லும் விஷயங்களையும் ஆலோசித்திருந்தால் நமக்குக் குழப்பம் இருக்காது.
இப்போதெல்லாம் பங்குச் சந்தை தரகர்களும் தரகு நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்தையில் நிலவும் சூழல் பற்றியும் புதிய நிறுவனங்களின் வருகை பற்றியும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் அதன் அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்கும்போது கடைசி நேரத்தில் தரகர்கள் நம்மைக் குழப்ப வாய்ப்பு இருக்காது.
அடுத்து ஊடகங்கள். அச்சு ஊடகங்கள் மட்டும் இருந்த காலத்தில் குழப்பங்கள் குறைவாக இருந்தன. அப்போதுகூட தெளிவு இருந்தது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அந்தப் பார்வையின் வெளிப்பாடாகத்தான் அவர்கள் தரும் செய்திகள் இருக்கும். அதில் இருந்து நாம்தான் நல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இன்றைக்கு அச்சு, காட்சி, சமூகம் என்று ஊடகங்கள் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அதிலும் சமூக ஊடகங்கள் நம் மொபைல் போனுக்கே வந்துவிட்ட நிலையில், ஊடகங்கள் நம்மை ஆதிக்கம் செய்கின்றன என்ற வாதம் முழுக்க உண்மையாக இருக்கிறது. அதிலிருந்து நம்மைக் காத்து நம் முதலீட்டு முடிவை எடுப்பது கொஞ்சம் சிரமம்தான்.
இதை எப்படி எதிர்கொள்வது?
இதில் உள்ள நேர்மறையான விஷயத்தை முதலில் பார்க்க வேண்டும். முன்பெல்லாம் ஒரு தகவல் நமக்குக் கிடைத்தால் அதில் உள்ள முன்னேற்றத்தை அறிந்துகொள்ள இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டும். தந்தியாகவே இருந்தால்கூடச் சில மணி நேரங்களாவது பிடிக்கும். ஆனால், இன்றைக்குக் கால இடைவெளியே இல்லாமல் உலகின் ஒரு பக்கத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து இன்னொரு பக்கத்தில் இருக்கும் இந்தியாவுக்குத் தகவலை அனுப்ப முடிகிறது. அந்த வளர்ச்சியை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முதலீட்டு முடிவை எடுத்து அதைச் செயல்படுத்துவதற்கு முந்தைய நொடி கூட நமக்கு அந்த முதலீடு தொடர்பான ஒரு தகவல் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் நிச்சயமாக நம் முடிவையே மாற்றும் அளவுக்கு இருக்காது. நம் முடிவைச் செயல்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும். ஆனால், அந்தத் தகவலின் அடிப்படையில் நாம் முதலீட்டு முடிவை மாற்ற நினைத்தால் குழப்பம்தான் மிஞ்சும்.
அதோடு இன்றைய சமூக ஊடகங்களில் கவனிக்க வேண்டிய விஷயம், தகவல்களை யார் தருகிறார்கள் என்பதும். தகவல் நமக்கு விரைவாகக் கிடைக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்குப் பல தகவல்கள் முழு உண்மையைச் சுமந்து வருவதில்லை என்பதும். சில நேரங்களில் ஒருவரைக் குறைவாகச் சொல்வதற்குக்கூடச் சில தகவல்களைப் பரப்பிவிடுவார்கள். அப்படி இருக்கும்போது நமக்குக் குழப்பம் ஏற்படத்தான் செய்யும்.
எனவே, ஊடகங்களை நமக்குச் சாதகமான கருவியாக மாற்றிக் கொள்வோம். அதன் சாதகங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வோம். எதை எடுத்துக்கொள்ள வேண்டுமோ அதை எடுத்து, எதை விட வேண்டுமோ அதை விட்டுத்தள்ளுவோம்.
மூன்றாவதாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அரசின் திட்ட அறிவிப்புகள். இதில் நம்மைக் கடைசி நொடியில் குழப்பும் விஷயம் எதுவும் இருக்காது என்றாலும் விழிப்புடன் இருக்க வேண்டிய விஷயம்.
அரசாங்கங்கள் தங்கள் செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்தபடியேதான் இருக்கின்றன. நம் வெளியுறவுக் கொள்கைகள் சில உள்ளூர் நிறுவனங்களில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அதன் அடிப்படையில் நாம் முதலீட்டு முடிவை எடுத்திருப்போம். ஆனால், வேறோர் அரசியல் நிகழ்வால் அந்த நிறுவனங்கள் மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உதாரணமாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வெளியுறவுக் கொள்கைகள் பலவிதமாக இருக்கும். அங்கு தொழில் தொடங்க நம் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும். ஆனால், மீனவர் பிரச்சினை மூலம் இரு நாடுகளுக்கு இடையே பிணக்கு ஏற்படும்போது, அந்தத் தொழில் வாய்ப்புகளில் சுணக்கம் ஏற்படும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, இப்படிப்பட்ட இடர்பாடுகளைச் சமாளித்துதான் நாம் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இந்த முதலீட்டில் நாம் நிதானமாக யோசித்துச் செயல்படுவதற்கு ஐபிஓ பெரிய அளவில் கைகொடுக்கும். எப்படி என்று பார்க்கலாம்.
(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com