களம் புதிது: நிலத்தில் மாடித் தோட்டம்!

களம் புதிது: நிலத்தில் மாடித் தோட்டம்!
Updated on
1 min read

இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகளைப் பலர் கூடுமானவரை தவிர்ப்பதையும் பார்க்கமுடிகிறது. “ஆனால் இப்படி இயற்கை உரம் போட்டு விளைவிக்கப்படுகிற காய்கறிகளுக்கு அதிக விலை தரவேண்டியிருக்கிறது. ஆரோக்கியத்தையும் காக்கணும்; செலவும் குறைவாக இருக்கணும் என்று யோசித்தபோது வீட்டு விவசாயம் தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது” என்கிறார் சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ஜெயந்தி.

தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி யவர், தற்போது விவசாயியாக மாறியதற்கு ஆர்வமும் ஆரோக்கியம் குறித்த அக்கறையுமே காரணம்.

“பெற்றோர் நெசவுத் தொழிலில் இருப்பவர்கள் என்பதால் எனக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. திருமணத்துக்குப் பின்னர் கணவர் கொடுத்த ஊக்கமே, என்னை விவசாயியாக மாற்றியது” என்று தன்னுடைய கணவர் அருள் பற்றிப் பெருமிதத்தோடு சொல்லும் ஜெயந்தி, குழந்தைகளுக்காக விரிவுரையாளர் பணியைத் துறந்து, விவசாயியாக மாறியிருக்கிறார்.

“விவசாயம் தொடர்பான புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைத்தேன். சிறிய இடம் என்பதால் அதை விரிவுபடுத்த முடியவில்லை. அதனால் அரை ஏக்கர் நிலத்தில் மாடித் தோட்டம் அமைப்பது போலவே பிளாஸ்டிக் பை, உடைந்த பானை, தொட்டி என்று பலவிதப் பொருட்களையும் வைத்து தோட்டத்தை அமைத்தேன். நிலத்திலேயே மாடித் தோட்டத்தை உருவாக்கிவிட்டேன்! பெண்கள் அவரவர் வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்தால், தேவையான காய்கறிகளை விளைவித்துக் கொள்ளலாம் என்பதை இலவசப் பயிற்சியாகக் கொடுத்து, எல்லோரையும் விவசாயியாக மாற்றவே விளைநிலத்தில் தோட்டம் அமைத்திருக்கிறேன்” என்று ஆச்சரியமூட்டுகிறார் ஜெயந்தி.

பயனில்லாப் பொருளும் கைகொடுக்கும்

உடைந்த வாட்டர் கேன், கிழிந்த ஜீன்ஸ், பிய்ந்த ஷு, பாதியாக உடைந்த குடம் என்று தேவையற்ற பொருட்கள் அனைத்திலும் வண்டல் மண் நிரப்பி, அவற்றில் கத்தரி, தக்காளி, முருங்கை, வாழை, பலவகை கீரை போன்றவற்றை வளர்த்துவருகிறார்.

மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டி, பசுந்தாள் உரமாகப் பயன்படக்கூடிய அசோலா, சிறு தொட்டிகளில் அலங்கார மீன்கள் என அங்கிருந்த தோட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘ஜீரோ பட்ஜெட்’டில் மாடித் தோட்டம் அமைப்பது குறித்து, முழுமையான பயிற்சியளித்துவருகிறார் ஜெயந்தி.

நாட்டு விதைகள், மண்புழு உரம், வண்டல் மண் ஆகியவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறார். வருங்காலத்தில் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் குறித்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது இவரது ஆசை. மண்ணில் மட்டுமின்றி, எண்ணற்ற மக்களின் மனங்களிலும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விதைத்துவரும் ஜெயந்தியைப் பார்க்கும்போது எதிர்காலம் குறித்து நம்பிக்கை அதிகரிக்கிறது.

படங்கள்: எஸ்.குருபிரசாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in