

உலகை வலம்வருவதில் அதீத விருப்பமுள்ள எங்கள் தம்பியின் அழைப்பிற்கிணங்க கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தோம். அங்கே டாம்பா துறைமுகம் நோக்கிப் பயணம். ஃபுளோரிடாவின் மேற்குக் கரையோரத் துறைமுகம். அங்கிருந்து 12 அடுக்கு கார்னிவல் பேரடைஸ் என்ற சொகுசுக் கப்பலில் ஆறு நாள் இன்பச் சுற்றுலா. இல்லை இல்லை வரலாறு, புவியியல் சார்ந்த சுற்றுப் பயணம் என்பதே சரி. நாங்கள் சென்றது பிரிட்டிஷ் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்தது என்பதால் முழுமையான பரிசோதனை ஆங்காங்கே நடைபெற்றது.
கப்பலில் கால்வைக்கும் முன் அதன் பிரம்மாண்டத்தை வியப்புடன் பார்வையிட்டோம். இரண்டாயிரத்தும் மேற்பட்ட பயணிகளில் பல நாட்டவர்கள் இருந்தார்கள். ஆறு நாள்களும் பலவகை உணவுகள் உட்பட எல்லாமே இலவசம் என்பதால் மகிழ்ச்சியோடு பொழுதுபோக்கவே பலரும் வந்திருந்தனர்.
ஆழமான கடலில் 20 நாட்டிக்கல் மைல் வேகத்தில் கப்பல் செல்வதை உணர்வதும், மேல் தளத்தில் சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை ரசிப்பதும் மனதுக்கு ரம்மியமான ‘டைட்டானிக் அனுபவம்’.
அடுத்த அனுபவம்தான் வாழ்நாளில் மறக்க முடியாதது. படகில் 20 பேரை அழைத்துச் சென்று நடுக்கடலில் மிதக்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இறக்கிவிட்டார்கள். கதவுகள் சாத்தப்பட்டு நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்துக்கொண்டே 102 அடி ஆழம் சென்றது பரவசமான அனுபவம். கடல் அடியில் பவளப்பாறை, பலவகை மீன்கள், கடல் பாம்புகள், ஆமைகள், தாவரங்கள் என வித்தியாசமான குதூகல ஆரவாரம். ஒரு பெரிய சங்கு மல்லாந்தபடி ஊர்ந்து சென்றதை முதன் முதலாகக் கண்டு வியந்தோம். நாங்கள் அங்கிருந்த ஒன்றரை மணி நேர உற்சாகம் விவரிக்க இயலாதது.
பயணிகளில் பெரும்பாலோர் வட, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். “நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடையின் பெயர் என்ன?” என்பதுதான் பெரும்பாலானோர் எங்களிடம் கேட்ட கேள்வி. கேமன் தீவில் கரீபியன் பேரடைஸ் என்ற சொகுசுக் கப்பலைக் காட்டிய எங்கள் தம்பி, “இதுலதான் முதலில் பதிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் இதில் ‘சோறு’ போட மாட்டாங்க” என்றதும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
சொகுசுக் கப்பலில் துண்டு துணியுடன் அனைவரும் நீச்சல் குளத்தில் இருந்ததைப் பார்த்து நாங்கள் மட்டும் நீளமான புடவையோடு சுற்றியது எங்களை நெளிய வைத்தது.
‘இத்தரை, கொய்யாப் பிஞ்சு, நீ அதில் சிற்றெறும்பே’ என்ற பாரதிதாசனின் வரிகளை நான் அடிக்கடிச் சொல்வேன். நானும் அப்படியோர் எறும்பாக மாறி பூமி உருண்டையில் இந்தியாவின் எதிர்ப்பக்கம் சுற்றிவிட்டு வந்தேன் என்பதில் பெரு மகிழ்ச்சி. வீடு திரும்பியவுடன் ஒரு வாரம் இட்லி, தோசை சாப்பிட்டது தனிக் கதை.
- கோ.தமிழரசி, வேலூர்.