

ஆன்லைனில் வெப்சைட் மூலம் உங்கள் திறமைகள், படைப்புகள், தயாரிப்பு கள் ஆகியவற்றை ஷோகேஸ் செய்து உங்களுக்கான ஆன்லைன் அலுவலகத்தை அமைத்து சம்பாதிக்கலாம் என்றும் பிளாக், யு-டியூப், சவுண்ட் கிளவுட், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் தயாரிப்புகளுக்கு இலவச விளம்பரம் கொடுத்துக்கொள்ளலாம் என்றும் இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆன்லைன் பணப் பரிமாற்றம், சமூக வலைதளப் பாதுகாப்பு இவை இரண்டும்தான் பெரும்பாலான வாசகர்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பதை அவர்களின் மின்னஞ்சல் கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஆன்லைன் பணப் பரிமாற்றம் பாதுகாப்பானதா?
வியாபாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது பணப் பரிமாற்றம். மொபைல் பேங்கிங், ஆப்ஸ், நெட் பேங்கிங், ஸ்வைப்பிங் மெஷின், ஏ.டி.எம். இயந்திரம் ஆகியவற்றின் மூலமும் பணப் பரிமாற்றம் செய்யலாம். தினமும் வாட்ஸ் அப்பில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவதைப் போல எளிமையானதுதான் காகிதமில்லா பணப் பரிமாற்றம். ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்ய நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டை மறக்காமலும், மற்றவர்கள் அறியாமலும் வைத்திருப்பது முதல்கட்ட பாதுகாப்பு நடவடிக்கை.
எந்தக் காரணம்கொண்டும் தொலைபேசி யிலோ, இமெயிலிலோ உங்கள் வங்கிகளில் இருந்து தொடர்பு கொள்வதாகச் சொல்லி பாஸ்வேர்ட் குறித்து கேள்வி கேட்டால் எந்தத் தகவலையும் சொல்லக் கூடாது. உடனடியாக உங்கள் வங்கியை அணுகி தெளிவுபெறுங்கள். ஆன்லைனில் உங்கள் வெப்சைட் மூலம் பொருட்கள் வாங்க விற்க பாதுகாப்பாக ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
ஸ்மார்ட்போனில் ஆப் தொழில்நுட்பம் குறித்து விளக்க முடியுமா?
இன்று உலகமே நம் உள்ளங்கை ஸ்மார்ட் போனில்தான். நேரடியாக இயங்குகின்ற உலகம் போலவே இன்டர்நெட்டிலும் ஓர் உலகம் இயங்கி வருகிறது. அந்த உலகில் நாம் நேரடியாகச் செய்கின்ற அத்தனை பணிகளையும் செய்ய முடிகிறது. ஆன்லைனில் கல்வி கற்கிறோம், ஷாப்பிங் செய்கிறோம், மளிகை சாமான்கள் ஆர்டர் செய்கிறோம், ஹோட்டலில் இருந்து உணவை வீட்டுக்கு வரச் செய்து சாப்பிடுகிறோம், லைப்ரரிக்குச் சென்று படிக்கிறோம், பத்திரிகைகள் படிக்கிறோம், வங்கியில் பணம் போடுகிறோம், பணம் பெறுகிறோம், சினிமா பார்க்கிறோம், கேம்ஸ் விளையாடுகிறோம், மின்சாரக் கட்டணம் தொடங்கி எல்.ஐ.சி. பாலிசி என அத்தனை விதமான கட்டணங்களையும் ஆன்லைனில் கட்டுகிறோம்.
கம்ப்யூட்டரில் மட்டுமே இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும் என்றிருந்த காலம் மாறி, இப்போது ஸ்மார்ட் போனிலும் இன்டர் நெட்டை பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவானதால், விரல் நுனியில் அத்தனையையும் செய்து முடித்துவிட முடிகிறது. பணப் பரிவர்த்தனை முழுவதுமாக மின்னணு பணப் பரிமாற்ற மாகும்போது எதிர்காலத்தில் ஆன்லைன் செயல்பாடுகள் அதிகரிக்கும்.
மொபைல் தொழில்நுட்பத்தில் ஆப் (App) எனப்படும் அப்ளிகேஷன்கள் பெருகி வருவதால் உங்கள் ஆபீஸ் உள்ளங்கையில் அடங்கிவிடும் காலம் தொலைவில் இல்லை. வெப்சைட்டைப் போலவே ஸ்மார்ட்போன் ஆப்களும் சுலபமே.
சமூக வலைதளங்கள் பாதுகாப்பானவையா?
ஆன்லைனில் Fake, Phishing, Hacking, Spam இவற்றால் நம்மைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், செய்திகள் மட்டுமில்லாமல் மற்றவர்களது விவரங்களும் நம் அக்கவுண்ட்டில் இருந்து நாம் அனுப்புவதைப்போலவே பகிரப்படுகின்றன. இந்நிலையில் நம் பெயருக்கும், நம் தொடர்பில் இருப்பவர்களது பெயருக்கும் இது களங்கம் ஏற்படுத்துகிறது. ஆன்லைன் பயணம் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.
நேரடியாக நாம் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் ஆன்லைனிலும் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். நாம்தான் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். முதல் கட்டமாக உங்கள் பாஸ்வேர்டை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். மீறி களவாடப்பட்டால் உங்கள் சமூகவலைதளங்களில் Report Abuse என்ற விவரம் மூலம் புகார் அளிக்கலாம். தேவைப்பட்டால் தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட்டை டீஆக்டிவேட் செய்து கொள்ளலாம். முற்றிலும் வெளியேற உங்கள் அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்கவும் செய்யலாம்.
அவசியம் ஏற்பட்டால் காவல் துறை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம். சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்தபடி புகார் கொடுத்தால் புகார் அளிப்பவரை வெளிக் காட்டாமலே சைபர் கிரைம் பிரிவு நடவடிக்கை எடுக்கிறது. ஆபாசமாகவோ வதந்தியாகவோ வெளிவந்திருக்கும் தகவல் வெளிப்பட்டிருக்கும் வெப் பக்கத்தையும் எந்த வெப்சைட் லிங்க்கில் இருந்து அவை வந்திருக்கிறதோ அதையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொடுக்கலாம். அல்லது மெயிலிலும் அனுப்பலாம். குற்றம் நிரூபிக்கப் பட்டால் அதற்கேற்ப கைதும், சிறை தண்டனையும் அல்லது அதற்கு மேலான தண்டனையும் நிச்சயம் உண்டு.
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வாழ்த்துகள்!
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com