ஏழு தலைமுறையாக இசைச் சேவை செய்துவரும் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர் வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ்.
மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போதே, இவரின் பிஞ்சு விரல்களுக்குக் கலைமகளின் கைப்பொருளான வீணையின் தந்திகள் பரிச்சயமாகிவிட்டன.
பத்மாவதி அனந்தகோபாலன், வீணை மேதை எஸ். பாலசந்தர் ஆகியோரின் வார்ப்பு இவர். மிகக் குறைந்த வயதிலேயே அகில இந்திய வானொலியின் A TOP கிரேடுக்கு உரிய கலைஞராகச் சுடர்விட்டவர். தமிழக அரசின் கலைமாமணி, வீணா நாதமணி போன்ற விருதுகளுக்கு உரியவர்.

தன்னுடைய வீணையின் நாதத்தை உள்ளூர் மேடைகளில் தொடங்கி பாரிஸ், அமெரிக்கா, நியூயார்க், ஐக்கிய நாடுகள், சஹாராவிலிருக்கும் இந்தியத் தூதரகம் போன்ற உலக மேடைகளிலும் ஒலித்திருப்பவர்.
கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை போன்ற பல்வேறு இசை வடிவங்களையும் உள்ளடக்கிய ஜுகல்பந்தி, ஃப்யூஷன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக உண்டாக்கப்பட்ட இண்டியன் ஸ்பைஸ், இவரின் எண்ணத்தில் உருவானதுதான்.
பல்வேறு விதமான பாணி மற்றும் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை ஆய்வு செய்ததற்காக, மைசூர் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார் ஜெயந்தி.
‘மிஸ்டீரியஸ் டியூயாலிட்டி’ ஜெயந்தி குமரேஷின் வீணை வித்வாம்ஸத்துக்கு ஒரு சோறு பதம்! ஒரேயொரு வீணை இசையில், ஓர் இசைக்குழு இசை அமைத்தது போன்ற பிரமாண்டத்தை ஏற்படுத்தி இருப்பார். வீணை வாத்தியத்தின் முழுப்பரிமாணத்தையும் அந்த ஓர் இசை ஆல்பத்திலேயே நாம் உணர்ந்துகொள்ளமுடியும்.