Last Updated : 23 Sep, 2013 04:54 PM

 

Published : 23 Sep 2013 04:54 PM
Last Updated : 23 Sep 2013 04:54 PM

நான் தனியாக எதையும் சாதித்துவிடவில்லை: சுதா ரகுநாதன்

'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…' என பாடகி சுதா ரகுநாதன் கண்மூடிப் பாடும்போது, நாமும் கவலைகள் ஏதுமில்லாத உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்போம். அவரது குரல் தேனாகக் குழைந்து மனம் மயக்க, சங்கதிகளோ காதோடு மனதையும் நிறைக்கும். பத்மஸ்ரீ சுதா ரகுநாதனுக்கு, 2013 ஆம் ஆண்டிற்கான மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட இருக்கிறது. வாழ்த்துக்களோடு அவரைச் சந்தித்தோம்.

"கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு மகத்தான விருதே. பலருக்கு இதைப் பெறுவதே குறிக்கோளாக அமைந்து விடும். மற்றொருவர் இந்த விருதை வாங்கும் பொழுதே நான் உள்ளூரப் புளகாங்கிதம் அடைந்துள்ளேன்.

இந்த அரிய விருதைப் பெறவிருக்கும் தருணத்தில், எனக்குள்ள பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது என்றே நான் கருதுகிறேன். எனது சிந்தனைகள் எல்லாம், எனது பாடும் திறனுக்கு எந்த விதத்தில் நல்லூட்டம் அளிக்க வேண்டும், எனக்கு இன்னும் கற்றுக்கொள்ள என்ன உள்ளது, எப்படி என் இசையை விரிவுபடுத்திக் கொள்ளலாம், என்று எண்ணுகிறேன்" என்கிறார் சுதா.

"இவ்விருது ஒரு கனவு நனவான கதைதான். என்றோ ஒரு நாள் இவ்விருது என் கைவசப்படும் என்பது வேறு, இன்று இப்பொழுது எனக்கு இந்தப் பெருமை வாய்த்துள்ளது என்பது ஒரு வித்தியாசம் தானே? இந்த விருதும் அவ்வளவு சுலபமாக என்னை வந்தடைந்து விடவில்லையே" என்று அடக்கத்துடனும் பெருமிதத்துடனும் சொல்கிறார்.

இவரது குரு சங்கீத கலாநிதி எம் எல் வசந்தகுமாரி (எம்.எல்.வி.). எம்எல்வியின் ஆசான், கர்நாடக இசையுலகத்தையே கலக்கிய ஜி.என். பாலசுப்பிரமணியம் (ஜி.என்.பி.). எல்லோருக்கும் இது தெரிந்த தகவல் தான். ஆனால், இதில் ஒரு விசேஷம் என்னவெனில் எம்.எல்.வி., ஜி.என்.பி.யின் காப்பி அல்ல. இது போலவே சுதாவும் எம்.எல்.வி.யின் நகல் அல்ல. இதைப் பற்றி விவரிக்கிறார் சுதா:

"இதை நீங்கள் கவனித்துள்ளது பற்றி மகிழ்ச்சி. எம்.எல்.வி. அவர்கள் எனக்குப் பூரண சுதந்திரம் அளித்தார். நானும் திருமதி எம்.எஸ்., திருமதி டி.கே.பி. மற்றும் பிருந்தா, முக்தா ஆகியோரின் பாடும் முறைகளையும் நிறைய அனுபவித்துள்ளேன். அவரவர்கள் தங்களது முறைகளை வகுத்துக்கொள்ளுதல் கலைக்கு மிக அவசியமாகும். எம் எஸ்சின் ஈடு இணையற்ற பக்தி ரஸம், தமிழ் முதல் மராத்திவரை அந்தந்த மொழிக்குகந்த தெளிவான உச்சரிப்பு, டி.கே.பி.யின் காத்திரமான இசையுடன் வரும் ராகம் தானம் பல்லவி விஸ்தாரங்கள், பிருந்தா முக்தாவின் பாவம் தோய்ந்த சங்கீதம் இவை யாவுமே என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவற்றை எல்லாம் எட்டிப் பிடிக்க ஆசை!"

யார் யாரைக் கண்டார்? எம்எல்வி சுதாவையா? அல்லது சுதா எம்எல்வியையா?

"இல்லை! இல்லை! நான் தான் எம்எல்வி எனும் மகத்தான சக்தியைக் கண்டுகொண்டேன்! எனது தாயார் எம்.எல்.வி.யின் தலையாய விசிறி. அடிக்கடி பெங்களூரில் எம்.எல்.வி.யின் கச்சேரிக்கு என்னை அழைத்துச் செல்வார். அரசாங்க உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் மாணவியாக ஏற்க அனுமதி கேட்க எனது தகப்பனார் என்னை அழைத்துச் சென்றிருந்தார். என்னைப் புதிதாக சேர விரும்பும் ஒரு சிஷ்யை போல எண்ணவே இல்லை. சகஜபாவத்துடனேயே நடந்துகொண்டார்கள். பின்பு அவர் என்னை மாணவியாக ஏற்றதும், நான் வளர்ந்ததும் சரித்திரமாகி விட்டது. சேரும்போது, ‘கிளிப்பிள்ளை பாடம் என்னிடம் இருக்காது. நீயாகப் பார்த்துப் பழகி கத்துக்கோ! என்ன? வரிக்கு வரி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பேன்னு இருந்துடாதே’ என்றார்."

"பல்லவிகளை அனாயாசமாக வடித்துவிடுவார். சில வேளைகளில் கார் செல்லும் நேரத்திலும் வேகத்திலும் பல்லவி உண்டு. எல்லாம் பல்லை ஒடிக்கும் தாளங்களில். தாளம் போட்டுப் போட்டு தொடை சிவந்து போகும். தாளத்தை நீதான் பாத்துக்கணும் என்று என்னிடம் பொறுப்பைக் கொடுத்து விடுவார். போடும் தாளத்தில் பிசகு ஏற்பட்டாலும் கதி கலங்கிவிடும். அக்ஷரம் சரியாக அமையாது. வார்த்தை தப்பிவிடும். பல்லவிகள் ஏராளமாய் அவரிடம் உதிக்கும். மதிப்பிற்குரிய ராஜா ராவ் மற்றும் திரு மன்னார்குடி ஈஸ்வரன் இவர்களின் கையில் மிருதங்கம் என்றால் தாளம் போடுவது எனது பணி. மிகப் பெரிய பொறுப்பு இது. ஆனால் சில வேளைகளில் இளைஞர்களிடம் பொறுப்பைக் கொடுத்தால்தான் அவர்கள் திகழ்வார்கள். நமது நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். இது நானறிந்த உண்மை."

எம்.எல்.வி.யின் பெருந்தன்மை

"எண்பதுகளில் என்று நினைக்கிறேன். ந்யூ யார்க்கில் ஒரு பல்கலைக் கழக வளாகத்தில் கச்சேரி. நீண்ட பயணக் களைப்பினாலோ என்னவோ குருஜி எனக்குப் பாட அதிகமாகவே வாய்ப்பளித்துக் கொண்டிருந்தார்கள். நெரவலிலும் சரி, ஸ்வரப் ப்ரஸ்தாரங்களிலும் சரி. கச்சேரி முடிந்த பின் மாணவ / மாணவியர் எம்.எல்.வி.யையும் என்னையும் சூழ்ந்துகொண்டனர். கேள்வி மேல் கேள்வி. இந்த சுதா வெங்கட்ராமனை (அப்பொழுது எனக்கு இன்னும் திருமணமாகவில்லை) ஒரு சேம்பர் கான்ஸர்ட் தனியாக வழங்க அனுமதிப்பீர்களா? எம்.எல்.வி. அவர்கள் யோசிக்கவே இல்லை. ஓ சரி அதுக்கென்ன! பேஷா என்றார். வந்த இடத்தில் இவளுக்குக் கச்சேரியா என்று அவர் எண்ணவே இல்லை."

ஏதேனும் வாத்தியம் வாசிப்பதில் தேர்ச்சி உண்டா? "இல்லை. அனுக்ரஹமும் இல்லை, பொருந்தவும் இல்லை. நான் பாடுவதிலும் அதற்குண்டான தயாரிப்புகளிலும், நிறையப் பாட்டுகள், ராகங்கள் கற்றுக்கொள்ளுவதிலும் பெருமளவில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டேன்."

பயிற்சி பற்றி:

"காலையில் தோன்றும் ப்ரம்ம முகூர்த்தமே சாலச் சிறந்தது என்பார்கள் சிலர். எனக்கு அதைப் பின்பற்ற முடிவவதில்லை. ஆனால் இரவு நேரங்களில் அந்த நிசப்தத்தை நன்கு உபயோகித்துக் கொள்வேன். மணிக்கணக்காக அப்பியாசம் செய்த நாட்கள் உண்டு. இப்பொழுதெல்லாம், உள் நாட்டு/வெளிநாட்டு பயணம், ரிக்கார்டிங் என்று வந்து விடுவதால் கடந்த காலம் போலில்லை. இருப்பினும் ம்யூசிக் சீசனின் போது இரவு 12 அல்லது 1 மணிக்குதான் படுக்கச் செல்வேன். ஒரு அலாதியான சங்கதியைப் பாட முடியாவிட்டால் தூக்கம் வராமல் அவதிப் பட்டதும் உண்டு. கடைசியில் சங்கதி கிட்டிவிடும்."

உங்களது மிகக் கடுமையான விமர்சகர் யார்?

"நானேதான். மனதில் நடந்த கச்சேரியை ஓட விடுவேன். குட்டுகள் எல்லாம் எனக்கு புலப்பட்டுப்போகும். எனது கணவர் ரகுநாதனே ஒரு கறாரான விமர்சகர். இது வரையில் ஒரு கச்சேரிகூடச் சரியாக அமைந்தது என்று அவர் சொன்னதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்"

வாழ்க்கை பற்றி :

"ஒரு பெண் உயர்வான நிலையை எட்டுவது அவ்வளவு எளிதல்ல. எனது குடும்பப் பொறுப்புகளையும் சற்றும் விட்டுக் கொடுக்காமல் பயணம் செய்கிறேன். இதுதான் வாழ்க்கை. இதில் எனக்கு அனுகூலமாக இருந்தது எல்லோருடைய, குறிப்பாக எனது கணவர் திரு. ரகுநாதனின் ஒத்துழைப்பு. வீட்டை விட்டு வெளியில் காலடி எடுத்து வைத்தால் வீட்டை மறந்துவிடுவது நல்லது. ஏதோ நான் தனியாக சாதித்ததாகச் சொல்ல மாட்டேன். என் குடும்பத்தினர் எல்லோருமாகச் சேர்ந்து என்னைப் படைத்திருக்கிறார்கள் ."

சினிமாவில் உங்கள் அனுபவம்?

"இங்கு கச்சேரி போல் பாட முடியாது. காட்சிதானே முக்கியம், இசை/பாட்டு இதில் ஒரு பகுதிதான். இதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். குரல் உனதாக இருக்கலாம். அது உபயோகப்படுத்தப்படும் முறை வேறு. ம்யூசிக் டைரக்டருக்கு பெரும் பங்கு உண்டு. நீங்கள் இரண்டு அல்லது மூன்று சங்கதிகள் பாடினால் அதில் அவர்களுக்குச் சரியாகப் படுவதை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது தவிர பாடலில் உள்ள பதங்களின் சரியான உச்சரிப்பு, மைக்கில் குரல் கொடுக்கும் விதம் இவை எல்லாம் மிக முக்கியமானவை. நான் கற்று சுவாசித்த பாட்டைத் தவிர வேறு ஏதோ ஒரு பாட்டை சினிமாவில் பாடவில்லை என்பது ஒன்று. இன்னொன்று சினிமா பிரவேசம் கச்சேரிகளுக்கு ஆட்களை வரவழைத்துள்ளது. உண்மை."

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?

"பெருகிவிட்டது. பாடுபவர்களின் உலகத்தைச் சொல்கிறேன். பாடுபவர்கள் முதிர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். உள்வாங்கிப் பாடுதல் அபாரமாக இருக்கிறது. கேட்டால் ப்ளஸ் டூ, காலேஜ் முதல் வருடம் என்கிறார்கள். நல்ல குருமார்களைப் பெற்றிருக்கிறார்கள். அளவிலா ப்ராக்டிஸ். அளவிலா கேள்வி ஞானம். கச்சேரி செய்ய மட்டும் அவசரப்பட வேண்டாம். பாடங்களைப் பெருக்குங்கள், ராக சுத்தத்தை ஆணித்தரமாக்குங்கள். எல்லா விதமான பாடல்களும் உங்களிடம் தயாராக இருக்க வேண்டும். யதுகுலகாம்போதி ஸ்வரஜதி தெரியுமா என்று கேட்டால் முழிக்காதீர்கள். இப்பொழுதே மூலதனத்தை தாராளமாக இட்டு வையுங்கள். பிறகு அள்ளிக்கொள்ளலாம்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x