முகங்கள்: வாழ்வை மீட்ட சிறுதானியங்கள்

முகங்கள்: வாழ்வை மீட்ட சிறுதானியங்கள்
Updated on
1 min read

மருத்துவர்கள் கைவிட்ட பின்பும் சிறுதானிய உணவுகள் மூலமே கணவரைக் காப்பாற்றியதாகச் சொல்கிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த கௌரி. சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்றாலும் ஓர் உயிரைக் காப்பாற்றும் சக்தி அவற்றுக்கு இருக்கிறது என்பது ஆச்சரியம் தருகிறது.

“என் கணவர் மைக்கேலுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று உடல் முழுவதும் நீர் கோத்துக்கொண்டது. மிகவும் சிரமப்பட்டார். திருவனந்தபுரத்திலும் சென்னையிலும் பிரபல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றோம். எந்தப் பலனும் இல்லை. மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர். என் கணவரின் வாழ்நாள் கேள்விக்குறியான நிலையில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சொல்கிற கௌரியின் வார்த்தைகளில் பழைய நாட்களின் வேதனை இழைந்தோடியது.

தன் கணவரை மீட்பது எப்படி என்று யோசித்தபடியே இருந்தார். தன்னால் முடிந்த முயற்சிகளை எடுக்க முடிவுசெய்தார். அப்போதுதான் சிறுதானியங்களைப் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. சில மூலிகைகளைச் சிறுதானியங்களுடன் சேர்த்து அரைத்து, தன் கணவருக்குத் தினமும் நான்கு வேளை உணவாகக் கொடுத்தார்.

“நான் இப்படிச் செய்யத் தொடங்கியதும் ஒரே மாதத்தில் அவரது உடல்நிலை சற்றுத் தேறியது” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்கிறார் கௌரி.

அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனைக்குத் தன் கணவரை அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். தாங்கள் கைவிட்ட ஒருவரின் உடல்நிலை எப்படி முன்னேற்றம் அடைந்தது என்று கௌரியிடம் விசாரித்தனர். அவர் தயங்கிக்கொண்டே, தான் தயாரித்துக் கொடுத்த சிறுதானியப் பொடிகளைப் பற்றிச் சொன்னார்.

அதிசய மாற்றம்

நவீன மருத்துவத்தால் முடியாத ஒரு விஷயத்தை கௌரியின் கைமருந்து செய்திருக்கிறது என்பதை அறிந்த மருத்துவர்கள், தொடர்ந்து மைக்கேலுக்கு அதையே கொடுக்கும்படி தெரிவித்தார்கள். எட்டே மாதங்களில் மைக்கேல் ஆரோக்கியமானவராக மாறியிருக்கிறார்!

தன் கணவரின் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம், கௌரிக்கு வேறொரு வழியையும் காட்டியது. சிறுதானிய வகைகளை மாவாக்கி விற்பனை செய்ய முடிவெடுத்தார். சிறுபயறு, கொண்டைக்கடலை, குதிரைவாலி, தினை, உளுந்து, சாமை, சம்பா அரிசி, சோயா, சம்பா கோதுமை, கேழ்வரகு, வெள்ளை கோதுமை, மக்காச்சோளம், கம்பு, முந்திரிப் பருப்பு, பாதாம், ஏலக்காய் உள்ளிட்ட 21 வகை சிறுதானியங்களும் மூலிகைகளும் கலந்த மாவை விற்று சொற்ப வருமானம் ஈட்டிவரும் கௌரி, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார். பலனைக் கண்டவர்கள், தொடர்ந்து இவரிடம் சிறுதானிய மூலிகை மாவு வகைகளை வாங்கிச் செல்கிறார்கள்.

படம்: எல்.மோகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in