

பெண்களை நாட்டுக்கும் நதிக்கும் நெல்லுக்கும் அடையாளம் காட்டிவிட்டு, அரசியலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைக் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் இதே சமூகத்தில்தான் லண்டன் பண்பலை வானொலியில் ஜாக்கியாகக் கலக்குகிறார் ஒரு தமிழ்ப் பெண்.
இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ரேடியோ ஜாக்கியாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவருகிறார் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த டெய்சி எட்வின்.
“நான் பெற்ற ஏராளமான வலிகள்தான் என்னை வளமாக்கியுள்ளன. ஆக்ஸிஜன் குறைவோடு பிறந்ததால் 15 நாளைக்குப் பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றார்கள் மருத்துவர்கள். பிழைத்து எழுந்தாலும் குடும்பத்தில் வறுமை வாட்டியது. படிப்பு ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி என்று உணர்ந்தேன்” என்று சொல்லும் டெய்சி, வறுமையைத் தன் உறுதியால் எதிர்த்து நின்றிருக்கிறார். செவிலியர் கல்லூரியில் நிர்வாகம் இவருக்குக் கட்டணச் சலுகை அளித்தது. புத்தகங்கள் வாங்க முடியாத சூழலில் தோழிகள் தூங்கும்போது அவர்களின் புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறார். இப்படிப் படித்து மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பிடித்தார்! ஒரு பாடத்தில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கினார்.
“செவிலியர் பணியில் சேர்ந்து 1,500 ரூபாய் சம்பளம் வாங்கினேன். இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன்” என்று சொல்லும் டெய்சி வெளிநாடு செல்வதற்கு போதுமான வழிகாட்டல் இல்லாமல் தவித்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு லண்டனில் செவிலியர் பணியில் சேர்ந்தார்.
“ஒருவரின் அடையாளம் அவர் செய்யும் தொழில் அல்ல என்பதை அங்கேதான் உணர்ந்துகொண்டேன். எனக்கான அடையாளத்தைத் தேட ஆரம்பித்தேன். சின்ன வயதில் கேட்ட கிரிக்கெட் கமென்ட்ரி என்னை வசீகரித்தது. என் குரல் இனிமையாக இருந்ததாலும் பள்ளியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதாலும் நானும் ரேடியோ ஜாக்கியாக முடிவெடுத்தேன்” என்று புன்னகைக்கிறார் டெய்சி எட்வின்.
IBC தமிழ் வானொலியில் தொகுப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தார். தேர்வு செய்யப்பட்டார். வாரத்தில் இரண்டு நாட்கள் ரேடியோ ஜாக்கி பணி, மற்ற நாட்கள் செவிலியர் பணி என்று இரட்டைக் குதிரையில் பயணித்தார். அமெரிக்கத் தமிழ் வானொலியிலிருந்தும் வாய்ப்புவந்தது. ‘ஃபேஸ் புக் கலாட்டா’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்து, தயாரித்தார். 50 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒலிபரப்பானது. நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைச் வழங்கியிருக்கிறார்.
“இந்த நிகழ்ச்சியில் நான் பலரைப் பேட்டி எடுத்திருக்கிறேன். என் மூலக் கனவு தொலைக்காட்சித் தொகுப்பாளர்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்களிப்பைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். Media Daiss Entertainments என்ற நிறுவனத்தை அரசு அங்கீகாரத்தோடு தொடங்கியுள்ளேன். தொழில்முறை படிப்பு எதையும் படிக்காமல் என் முயற்சியில் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்” என்று டெய்சி எட்வின் சொல்லும்போது பிரமிப்பாக இருக்கிறது!