

மாக்குலர் டிஸ்ட்ரோபி என்ற அரிய வகை பார்வைக் குறைபாட்டால் 80% பார்வையை இழந்த பிராச்சி சுக்வானி, அகில இந்திய அளவில் நடைபெற்ற கேட் தேர்வில் 98.5 % மதிப்பெண்கள் பெற்று இந்தியாவையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சுக்வானி மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பார்வையை இழக்க நேரிட்டது. ஆனாலும் அவரது படிப்பின் மீதுள்ள ஆர்வமும் பெற்றோரின் ஊக்கமும் பி.பி.ஏ. பட்டம் பெற வைத்தது. தன்னுடைய கனவான அகமதாபாத் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் படிப்பை மேற்கொள்வதற்காக கேட் தேர்வை எழுதினார். இவர் பெற்ற மதிப்பெண்களால் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான அகமதாபாத் ஐ.ஐ.எம்., பெங்களூரு ஐ.ஐ.எம்., கொல்கத்தா ஐ.ஐ.எம். போன்றவை தங்கள் நிறுவனத்தில் சேரும்படி சுக்வானிக்கு அழைப்பு விடுத்துள்ளன.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதுதான் என் தற்போதைய லட்சியம். அதில் தன்னிறைவு அடைந்தவுடன் பார்வையற்றவர்களுக்கான தொண்டு நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்க வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம்” என்கிறார் பிராச்சி சுக்வானி.
தந்தை சுரேஷ் சுக்வானி துணிக்கடை நடத்தி வருகிறார். அம்மா கஞ்சனா எல்.ஐ.சி. முகவராக உள்ளார். மகளின் வெற்றி குறித்து அவர்கள், “பிராச்சி ஒரு புத்தகப் புழு. புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். பார்வைக் குறைபாட்டைச் சரி செய்வதற்காகச் சென்னையில் சிகிச்சை மேற்கொண்டோம். அவளுக்காகப் பிரத்தியேகக் கண்ணாடியை வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றனர். பிராச்சியின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்கள்.
“பார்வை இழந்த பின்பும் படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற பிராச்சியின் முயற்சியும் இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளும் இருந்தால் எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து இலக்கை அடைய முடியும் என்பதைக் காட்டியுள்ளார்” என்று பெருமையோடு கூறுகிறார் கல்லூரிப் பேராசிரியர் பாரத் தேசாய்.